படத்தில் முகத்தை மங்கவைத்துக் கொண்டு ஜீவா அகதியாக வாழ்ந்திருக்கிறார். அவரே கதியென்று சுற்றித் திரியும் பெண்ணாக பாவனா துறுதுறுப்பு காட்டியிருக்கிறார் பளிச் தோற்றத்தில். சிறிது நேரமே வந்து செத்துப் போகிற மணிவண்ணன், ஜீவனின் தாத்தாவாக நெஞ்சில் நிற்கிறார். பாவனாவின் அப்பாவாக வரும் லால் கோபம், அன்பு, பாசம், பரிவு எல்லாமும் காட்டியிருக்கிறார் நடப்பில் "
உங்க ஊரையும் எங்க ஊரையும் கடல் பிரிச்சிருக்கலாம். ஆனா கீழே பூமி ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கு" என்கிற வசனம் தொடங்கி படம் முழுதும் பொறிதட்டும் எளிமையான வலிமையான வசனங்கள் நிறைய உண்டு. அகதிகளின் வாழ்க்கை நிலையைக் காட்டுவதாலோ என்னவோ படத்தில் ஓர் அசாதாரண சோகம் இழையோடுகிறது. நிருவின் இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்களில் மட்டுமல்ல, பின்னணியிலும் நிரு தன்னை நிரூபித்துள்ளார்.
மொத்தத்தில் ராமேஸ்வரம் நெஞ்சைச் சுடும் அகதிகளின் வாழ்க்கையும், நெஞ்சைத் தொடும் காதலின் வேட்கையும் கலந்த கதை எனலாம். இதை வெற்றிகரமாக கலந்திருந்த வகையில் இயக்குநர் செல்வம் தேறியிருக்கிறார்.