Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக்ரா - விமர்சனம்

ஆக்ரா - விமர்சனம்

Webdunia

, செவ்வாய், 13 நவம்பர் 2007 (13:12 IST)
புதுமுகங்கள் விகாஷ், எமி மோகன், அஞ்சலி, காயத்ரி, எண்ணூர் முரளி, ரவிதேவன் இவர்களுடன் நாசர், ஒய்.ஜி. மகேந்திரன், அபிநயஸ்ரீ நடிப்பில் பி. செல்வகுமார் ஒளிப்பதிவில் சி.எஸ். பாலு இசையில் சித்திரைச் செல்வன் டி.எஃப்.டி. இயக்கியுள்ள படம். தயாரிப்பு அமிர்தா ஆர்ட் கம்பைன்ஸ்.

உலகத்துக்கே காதலை பறைசாற்றும் சின்னமாக இருப்பது தாஜ்மஹால். அந்த காதல் சின்னம் உள்ள ஆக்ரா மண்ணில் அந்த தாஜ்மஹாலை பொம்மையாக விற்று பிழைப்பு நடத்தும் ஒரு பெண்ணின் காதல் தடுக்கப்படுகிறது. மறுக்கப்படுகிறது. வானளாவிய காதல் சின்னமாய் தாஜ்மஹால் ஒரு கம்பீர மலைபோல் உயர்ந்து நிற்கிறது. ஆனால் அதன் அடிவாரத்தில் காதலுணர்வு குழி தோண்டி புதைக்கப்படுகிறது. முடிவு என்ன என்பதே 'ஆக்ரா'வின் கதைப்போக்கு.

இந்தக் கதையை படமாக்க வந்தவர்கள் நல்ல கதையை கெளரவப்படுத்தாமல் வணிகச் சேற்றில் சிக்கி களங்கப்படுத்தியிருக்கிறார்கள்.

கண்ணன் இளைஞன். துடிப்பானவன். இசையின் மீது நாட்டம். வயலினிஸ்ட். ஒரு நாள் ஆக்ரா செல்பவன், ஒருத்தியைப் பார்க்கிறான். அவள் பூஜா. பார்த்தவுடன் மனசுக்குள் பல்பு எரிகிறது. காதல் வளர்க்கிறான். அவளும் சம்மதிக்கிறாள். பிறகென்ன...? அந்த ஊரில் யாரும் காதலிக்கக்கூடாது. மீறிக் காதல் கொள்ளும் ஆண்களை காதலியை விட்டே கொளுத்திக் கொன்று விடுவது ஊர் மரபு. கட்டுப்பாடு. எனவே தாஜமஹால் விற்கும் பூஜா காதலன் கண்ணணின் உயிர் பற்றி பயப்படுகிறாள்.

அப்போது தன்னால் வர முடியாது என்றும் தன் மீது நிஜமாகவே காதல் இருந்தால் இப்போதே விலகி ஓடி விட வேண்டும். நிலைமை சரியாகும் போது தானே ஒரு வாழ்த்துமடல் அனுப்பி தெரிவிப்பதாகவும் கூறுகிறாள். ஓடிப் போன கண்ணன் காத்திருக்கிறான். நாற்பது ஆண்டுகள் காத்திருந்து... ஒரு நாள் அந்த வாழ்த்து அட்டை வருகிறது... ஓடிப் போய் பார்த்தால் வரவேற்று அழைத்துக் கொண்டு போகிறார் ஒருவர். அவர் பூஜாவின் கணவர். உணர்ச்சிகரமான... அந்தக் காட்சிதான் க்ளைமாக்ஸ்.

காத்திருக்கும் கண்ணனாக வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார் நாசர். நல்ல பொருத்தம். இளைய வயது கண்ணனாக வருபவர் விகாஷ். அவரது நடிப்பில் யதார்த்தம் இல்லை. விளையாட்டுத்தனமாக உள்ளது. காதலிப்பது பற்றிப் பேசுவது அழுத்தமாக இல்லை. பூஜாவாக வரும் எமிமோகன் களையான முகம். ஆனால் காட்சிக்குக் காட்சியில் வெவ்வேறான மேக்கப்பில் தெரிகிறார். சில க்ளோஸ்-அப் கள் பயமுறுத்துகின்றன. பூஜாவின் கணவராக சில நிமிடங்கள் மட்டும் வரும் ஒய்.ஜி. மகேந்திரன் கூட நினைவில் நிற்கிறார்.

காதலின் ஆழத்தை காத்திருப்பின் வலியை எதிர்பார்ப்பின் ஏக்கத்தை அழகாக அழுத்தமாக பதிவு செய்ய வாய்ப்புள்ள இக்கதையில் படத்தின் இரண்டாவது பாதியிலே தான் அந்த வேலையைச் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர்.

ஆனால்... முதல் பாதியில் நல்ல காதலைச் சொல்ல கெட்ட காதலையும் சொல்கிறேன் பேர்வழி என்று சில காமக் கொடூரங்களை கட்டவிழ்த்து விட்டிருப்பது பூக்கடைக்குள் நுழைந்த சாக்கடை போல குமட்டுகிறது. சம்பந்தப்பட்ட சில பாத்திரங்கள் பேசுவது செய்வது... சே... ரொம்ப மோசம்.

ஒரு பாடல் காட்சியைப் படமாக்கியிருக்கும் விதம் நீலப் படத்தையே மிஞ்சிவிட்டது. ஆறேழு முத்தக் காட்சிகளை ஆங்காங்கே ஆபாச வசனங்கள் முகம் சுழிக்க வைக்கும் விஷயங்கள் ஏராளம். அபிநயஸ்ரீயின் குத்தாட்டம் ஆபாச அசைவுகளின் தொகுப்பு.

இவ்வளவையும் செய்துவிட்டு இரண்டாவது பாதியில் கதையைக் கண்ணியப்படுத்த முயன்று இருப்பதுதான் சோகம்.

ஆலப்புழா படகு வீடு, டில்லி, குலுமனாலி, தாஜ்மஹாலின் அழகு, ஆக்ராவைக் கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கும் பாங்கு, நாசரின் நடிப்பு, இனிய இசை எல்லாமே இயக்குனரின் கமர்ஷியல் சமரசமாக்கல் முன் வீணாகி இருக்கின்றன.

காவியமாக்கியிருக்க வேண்டிய காதல் கதை களங்கப்பட்டு இருக்கிறது. இதனால் நயாகரா மாதிரி இருக்க வேண்டிய "ஆக்ரா" வயாகரா மாதிரி ஆகிவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil