Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்ணாமூச்சி ஏனடா - விமர்சனம்

Advertiesment
கண்ணாமூச்சி ஏனடா - விமர்சனம்

Webdunia

, செவ்வாய், 13 நவம்பர் 2007 (13:06 IST)
webdunia photoWD
சத்யராஜ், பிருத்விராஜ், ராதிகா, சந்தியா, ராதாரவி, மனோபாலா, ஸ்ரீப்ரியா, மயில்சாமி நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் ப்ரிதா ஒளிப்பதிவில் ப்ரியா.வி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா (லிட்) - யுடிவி - பிரமிட் சாய்மீரா.

சத்யராஜ் போலீஸ் கமிஷனர். அன்பான மனைவி ராதிகா. இரு மகள்கள். சத்யராஜின் அப்பா வியட்னாம் வீடு சுந்தரம்.

பாசமும் கண்டிப்பும் உள்ள சத்யராஜின் மகள் சந்தியா மலேஷியாவுக்கு படிக்கச் செல்கிறார். அங்கு தானுண்டு தன் படிப்புண்டு என்றிருக்கும் சந்தியா, பிருத்விராஜை சந்திக்க நேர்கிறது தற்செயலாக. நிஜமாகவே சந்தியாவைக் கவர்கிறார் பிருத்வி. பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. சந்தியாவுக்குள் காதல் ஜுரம்.

சத்யராஜ் - ராதிகா தம்பதியினரின் திருமண வெள்ளி விழாவுக்கு போக விரும்பாத அளவுக்கு மாறிவிடுகிறார் சந்தியா. சமாதானப்படுத்திய பிருத்வி இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்.

தன் காதல் விவகாரத்தையும் பிருத்வி பற்றியும் வீட்டுக்கு கூறியிருந்த சந்தியா, காதலனை எப்படி வரவேற்பார்களோ என்று குழம்புகிறார். அம்மா ஏற்றுக் கொண்டு விட அப்பா சத்யராஜோ போலீஸ் கண்ணுடன் பார்க்க... கதை சிக்கலாகிறது.

அப்பா அம்மா இல்லாத பிருத்வியை மாமா ராதாரவி எடுத்து வளர்த்தது. ராதாரவிக்குப் பக்கபலமாக இருந்து அவரது கம்பெனியை உயர்த்தியது. ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாட்டால் ராதாரவியிடமிருந்து வெளியேறியது எல்லாம் ராதிகாவுக்குத் தெரியும். ஆனால் இதுபற்றி சத்யராஜிடம் ராதாரவி பலமாக போட்டுக் கொடுத்துவிட, சத்யராஜ் பிருத்விராஜை அவமானப்படுத்தி துரத்திவிடுகிறார்.

சந்தியா மனமுடைகிறார். இது பிடிக்காமல் ராதிகா தன் மகள் சந்தியாவுடன் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. தன்னால்தானே சத்யராஜ் - ராதிகா பிரிய நேர்ந்தது என்று பிருத்வி அவர்களை சேர்த்து வைக்க பாடுபடுகிறார். பிருத்விராஜின் நல்ல மனசறிந்து கடைசியில் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார் சத்யராஜ். சுபம்.

போலீஸ் அதிகாரி ஆறுமுகம், பாசமுள்ள அப்பா, அன்பான கணவன் என்று மூன்றுமுகம் காட்டுகிறார் சத்யராஜ். கலகலப்பிலும் சரி கண்டிப்பிலும் சரி சத்யராஜ் அசத்தியராஜாக பளிச்சிடுகிறார். அந்தப் பாத்திரம் அவருக்கேற்ற அளவான சட்டையாகப் பொருந்துகிறது.

ராதிகா... பொறுமையின் சிகரம். அடக்கமான மனைவியாய் இருப்பவர், அதிர்ந்து பேசும்போது அதிர வைக்கிறார். குறிப்பாக சத்யராஜுடன் உரிமை கேட்டு வாதாடும் கட்டம் பளீர் காட்சி.

பிராமண இளைஞனாக வரும் பிருத்விராஜ் துறுதுறு வாலிபர். எப்போதும் ப்ராக்டிகலாக பேசி யதார்த்த நடிப்பில் கவர்கிறார். அந்த அப்பாவி முகம் அப்படியே பொருந்துகிறது.

படபடப்பு துறுதுறுப்பு என்றிருக்கும் இளமைத்துடுக்கு சந்தியா, காதலில் விழும்போதும் பிரிந்து அழும்போதும் மூக்கு விடைக்க முகபாவம் காட்டுவது ரசிக்க வைக்கும்படி இருக்கிறது.

பிருத்வியின் மாமாவாக வரும் ராதாரவி அடிதடி செய்யாமலேயே வில்லத்தனம் செய்திருக்கிறார்.

கதையின் பின்பாதியில் வரும் ஸ்ரீப்ரியா சரியான கலகலப்பு. ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக இருந்தவரா இப்படி... உருவத்தால் அதிர வைக்கிறார்.

வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள் சூழல்கள் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் சுவையானது. எதிர்பாராதது. அப்படி சில சூழல் மாற்றங்கள் ஏற்படுத்தும் சிக்கல்கள் முடிச்சுகள் அவிழ்ப்புகள்தான் கதை.

வழக்கமான சினிமாத்தனம் இல்லாத கதையை இயல்பான சம்பவங்களைக் கொண்டு நகர்த்தியிருக்கும் அழகு பாராட்டத்தக்கது. பிருத்வி மீது சந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டு காதல் வரும் கட்டம் ஒரு பூ மலர்வதைப் போல அழகான காட்சி.

சத்யராஜ் உள்ளுக்குள் ஈகோவை வைத்துக் கொண்டு பிடிவாதம் பிடிக்கும் காட்சிகள் யதார்த்தம். 'ஊசி குத்தி' உண்மை வரவழைக்கும் காட்சியில் எல்லாருமே மனதில் உள்ளதை வெளியிடும் காமடி ரசமான கற்பனை.

சத்யராஜுடன் இரட்டையாகப் பிறந்து காதலால் வீட்டைவிட்டு விலகிப் போன ஸ்ரீப்ரியா நடத்தும் காமடி ஜாலி ஜுகல் பந்தி.

திடீர் திருப்பங்கள், இட்டுக்கட்டிய சம்பவங்கள் என்று திணிப்புகளோ மிகைப்படுத்தல்களோ இல்லை. உயிரோட்டத்துடன் கதையின் போக்கிற்கு ஓடவிட்டு படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ப்ரியா. இயல்பான தன்மையை படம் முழுக்க முடிந்தவரை பராமரித்து இருக்கிறார். இதனால் கூட சில காட்சிகள் நீளமாகத் தெரிகின்றன. உதாரணம் க்ளைமாக்ஸ் துரத்தல்.

யுவனின் இசையும் ப்ரிதாவின் ஒளிப்பதிவும் ப்ரியாவுடன் சம வேகத்தில் பயணம் செய்துள்ளன.

தைரியமாக குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும்படி கண்ணியமான கலகலப்பான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ப்ரியா. அதற்காகவே அவருக்குக் கைகுலுக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil