ப்ருத்திவி, கார்த்திகா, ரோகிணி, லிவிங்ஸ்டன், வேலு பிரபாகரன், கெளரி, கதா.க. திருமாவளவன் நடிப்பில் தினேஷ்ராஜ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கே. மூர்த்தி கண்ணன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு பி.ஆர்.கே. பிலிம்ஸ்.குழந்தைகளுக்குப் பால் சந்தோஷம். ருசி தெரிஞ்சால் பால் கோவா சந்தோஷம். ஓடூற வயசுல பந்து சந்தோஷம். வாலிபத்துல பொண்ணு சந்தோஷம். வயோதிகத்துல ஈஸி சேர் சந்தோஷம். இப்படி ஒவ்வொரு வயசுல ஒவ்வொண்ணு சந்தோஷம். சந்தோஷம் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு. ஆனா விலை கொடுத்து வாங்க முடியாத சந்தோஷம் எது தெரியுமா? சின்ன வயசுல தோன்றும் பவித்ரமான காதல். அப்படிப்பட்ட ஒரு காதல் ஜோடி பற்றிய கதைதான் இது என்று ஆரம்பிக்கிறது படம்.
பால்யப் பருவத்திலிருந்தே லிவிங்ஸ்டன் மகன் ப்ருத்வியும் பஞ்சாயத்து தலைவர் கெளரியின் மகள் கார்த்திகாவும் அன்பாகவும் நட்பாகவும் பழகுகிறார்கள். அறியாத வயசில் புரியாத மனசில் விதைக்கப்பட்ட நட்பு விதை வளர்ந்ததும் காதல் விருட்சமாகிறது. இதை கெளரி கண்டிக்கிறார்.
இது தங்கள் கோட்டை பிள்ளைமார் குடும்பத்து கெளரவத்துக்கு இழுக்கு என்கிறவர், லிவிங்ஸ்டன் குடும்பத்தை ஊரை விட்டே துரத்துகிறார்.
ஆனால் ப்ருதிவி - கார்த்திகா மனதை விட்டு துரத்த முடியுமா? சென்னைக்கு வந்த ப்ருத்வி கார்த்திகா நினைவில் தவிக்கிறார்.மறக்க முடியாமல் மீண்டும் கார்த்திகாவைப் பார்க்க கிராமத்துக்குப் போகிறார். கார்த்திகாவுக்கு திருமணமாகி சிங்கப்பூர் சென்று விட்டதாகத் தகவல் கிடைக்கிறது. மனம் உடைந்து போகிறது ப்ருத்விக்கு.
ஆனால் இது பொய்தானென்று கார்த்திகாவை மீண்டும் சந்திக்கிற போது புரிகிறது. ஆனால் மீண்டும் கார்த்திகாவை பிருத்வி சந்திக்கிற இடமும் சந்தித்த கோலமும் கல் நெஞ்சமும் கலங்கிவிடும். முடிவு என்னவாகிறது என்பததான் உச்சக்கட்ட காட்சி.
படம் ஆரம்பித்ததுமே நம்மை மயிலாடுதுறை பகுதி கிராமங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கை எழிலை இண்டு இடுக்கு விடாமல் காண்பிக்கிறார் இயக்குநர். இயற்கை காட்சிகளுடன் ஈரமான ஒரு காதல் கதையையும் சொல்ல மறக்கவில்லை.
செயற்கைத் தனமின்றி இயல்பாக காதலை வெளிப்படுத்தும் காதல் ஜோடிகளாக வாழ்ந்திருக்கிறார்கள். ப்ருத்வி - கார்த்திகா. கண்டதும் காதல் என்று கதை சொல்லும் ஆயிரம் படங்களுக்கு நடுவே காதலின் ஆழத்தை - அகலத்தை அழகாகக் காட்டியிருக்கிறது இந்தப் படம்.
நடிப்பைப் பொறுத்தவரை டிஸ்டிங்ஷனில் பாஸாகியிருப்பவர் கார்த்திகாதான். துறுதுறுப்பு, வெட்கம், படபடப்பு, முறைப்பு என அமர்க்களமாக முகபாவம் காட்டுகிறார். பெண்மைக்குரிய குணங்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிற பாத்திரப் பாங்கு வெகு அழகு.
கிராமத்து வெள்ளந்தி வாலிபனாக வரும் ப்ருத்வி அச்சு அசலாகப் பாத்திரத்துக்குப் பொருந்துகிறார். கெளரி அழகான வில்லியாக ரசிக்க வைக்கிறார். பெரிதாக ஆர்ப்பாட்டம் செய்யாமல் கண்களிலேயே பொறி வைக்கும் நடிப்பு. பாசமுள்ள அப்பா லிவிங்ஸ்டன். கெளரியின் கணவரான கதா. க. திருமாவளவன். அனைவரும் நினைவில் பதிகிறார்கள்.
தெளிந்த நீரோட்டம் போன்ற கதை. நேர்க்கோட்டுப் பயணமாகவே செல்கிறது. வேலு பிரபாகரன்- ரோகிணி ஜோடியின் மர்மத்தை உடைக்கும்போது நம் நரம்பெங்கும் குறைந்த அழுத்த மின்சாரம் பாய்ந்த உணர்வு. மெல்லிய கதையை கெளரவமான கனமான க்ளைமாக்ஸ் மூலம் மேலும் அடர்த்தியாக மாற்றியிருக்கிற இயக்குநரின் திறமை பாராட்டத்தக்கது.
சினிமாத்தனங்கள் தவிர்த்த யதார்த்தமான வசனங்கள் பளிச்சிடுகின்றன. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் மெலடி மெட்டுக்களும் வரும் என்று நிரூபித்துள்ளார். பேச பேராச கூச கண் கூச, கருவக்காடு எங்க கருவக்காடு, பூவென்பதா தீயென்பதா, நினைத்தாலே இனிக்கும் இனிய பாடல்கள்.
எளிமையான காதல் கதையை அழுத்தமான யதார்த்தமான காட்சிகள் மூலம் சொல்லி எதிர்பாராத க்ளைமாக்சுடன் முடித்திருக்கிற இயக்குநர் நம்பிக்கை முகமாக அறிமுகமாகியிருக்கிறார். வரவேற்போம்.