அறிமுக நாயகன் ஜெமினி, லட்சுமிராய், பாயல், நாசர், நாகேஷ் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ராஜ் கண்ணன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு டிவைன் கிரியேஷன்ஸ் எம். சிவகுமரன்.
இரண்டாவது பிரசவத்தில் மனைவி இறந்துவிட தாயை விழுங்கிய பிள்ளை என தன் மகன் ஜெமினியை வெறுக்கிறார் அப்பா நாசர். மூத்த பிள்ளையை செல்லப் பிள்ளையாகவும் இளைய பிள்ளையை எடுப்பார் கைப்பிள்ளையாகவும் நடத்துகிறார்.
விளைவு?
மூத்த மகனை தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கிறார். இளைய மகனை தாத்தா நாகேஷிடம் விட்டுவிட்டுச் செல்கிறார். மூத்தவன் என்றால் பொறுப்புடனும் இளையவன் என்றாலும் வெறுப்புடனும் ஏன் நாசர் நடத்துகிறார் என்று நாகேஷ் கவலைப்படுகிறார். ஆனால் கேட்க முடியவில்லை. காரணம் நாசர் எம்டனாயிற்றே. கடும் கோபக்காரர்.
மூத்த பிள்ளைக்கு திருமணம் செய்ய இந்தியா வருகிறார் நாசர். மணமகள் நிச்சயமாகிறது. அவருடன் அண்ணி அண்ணி என்று ஜெமினி இழைகிறார். மணமகளின் தங்கை லட்சுமிராயுடன் எப்போதும் மோதிக் கொண்டே இருக்கிறார். இந்த மோதல் உள்ளுக்குள் காதலாக கருக் கொள்வது தனிக்கதை.
ஆனால் அதற்கிடையே ஜெமினிக்கு பாயலை நிச்சயம் செய்கிறார் நாசர்.
அப்பா சொல்லை மீறுவதா காதலை வெற்றி பெறச் செய்வதா என்று ஜெமினிக்குள் மனப்போராட்டம். முடிவு என்ன என்பது க்ளைமாக்ஸ்.
அம்மா அப்பா பாசம் அறியாதவராக அன்புக்கு ஏங்கும் வாலிபனாக ஜெமினி வருகிறார். நடிப்பில் பரவாயில்லை. பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். அசப்பில் ஜித்தன் ரமேஷ் போலிருக்கும் ஜெமினி தன் திறமையை மெருகேற்றிக் கொண்டால் எதிர்காலம் உண்டு.
மோதல் ஒரு பக்கம் வளர்ந்தாலும் காதல் ஒரு பக்கம் தொடர்வது என நடிப்பில் பளிச்சிடுகிறார் ஜெமினி. படத்துக்கு நட்சத்திர வெளிச்சம் தருவதே லட்சுமிராயின் தேர்வுதான். அழகாக இருக்கிறார். கவர்ச்சியும் காட்டுகிறார். நடிப்பையும் வெிிளப்படுத்துகிறார்.
கண்டிப்பான நுனி மூக்குக் கோபக்கார தந்தையாக நாசரும் பாசமுள்ள தாத்தாவாக நாகேஷூம் பளிச்சிடுகிறார்கள். அனுபவம் பேசுகிறது.
மிஸ் இந்தியா தகுதிக்குத் தயார் ஆகம் விதத்தில் யார் நிஜ அழகி என்று அங்க லட்சணம் பார்க்க... லட்சுமிராய் அழகு மச்சம் காட்டுவது, பாயலின் காலில் ஜெமினி முள் எடுப்பது லட்சுமிராயின் முதுகில் தியேட்டரில் ஐஸ்க்ரீமை ஜெமினி வழியவிடுவது... என கவர்ச்சிக் காடசகள்.
நாயகன் மற்றும் நாயகியின் நட்பு வட்டம் எப்போதும் அந்த விஷயத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது எல்லாம் `ஏ'கப்பட்ட `ஏ'ராளமான `ஏ' ரக காட்சிகள் வசனங்களாக இருக்கின்றன.
கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவு படத்தை ரிச்சாகக் காட்டுகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் எல்லாப் படங்களுமே குத்துப் பாட்டாக இருப்பது போரடிக்கிறது.
நாசர் தன் மகன் ஜெமினியை இந்த அளவுக்கு வெறுப்பதற்கு தகுந்த காரணம் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. சொல்கிற காரணம் நம்பும்படியாக இல்லை.
வீட்டுக்குள் ஏதோ லாட்ஜ் ரூமுக்குள் புழங்குவது போல் காதல் புரிவதும், கட்டிப்பிடி காட்சிகளும் கட்டில் காட்சிகளும் இருப்பதும் நம்ப முடியாத டூ மச். ஜெமினியின் அண்ணன் இடையில் காணாமல் போயேவிடுகிறார். லட்சுமிராயின் நண்பனாக வரும் பாததரம் எதுவுமே செய்யவில்லை. ஏனிந்த குழப்பம்?
கதையில் பாசத்தை சொல்வதா காதலைச் சொல்வதா என்று இயக்குநர் முடிவு செய்வதற்குள் பாதிப்படம் முடிந்து விடுகிறது. அதில் தெளிவாக இருந்து விறுவிறுப்பைக் காட்டியிருந்தால் படம் நெஞ்சைத் தொட்டிருக்கும்.