டாக்டர் ராஜசேகர், ஷம்விருதா, ரகுவரன், கலாபவன் மணி, பானுசந்தர், முமைத்கான் நடிப்பில் மதுவின் ஒளிப்பதிவில் சின்னாவின் இசையில் செல்வாவின் வசனத்தில் ஜீவிதா ராஜசேகர் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஆண்டாள் ஆர்ட்ஸ்.
ராணுவத்தில் மேஜராக இருக்கும் டாக்டர் ராஜசேகர் விடுமுறையில் ஊருக்கு வருகிறார். அவரது தந்தை ரகுவரன் மாநில அமைச்சர். ரகுவரன் பல தாதாக்கள் உதவியுடன் பல அதிகாரத் துஷ்பிரயோகங்கள் செய்கிறார். இதை அறிந்த மகன் அப்பாவை எதிர்த்து அரசியல் களம் இறங்குகிறார். சுயேச்சையாக நின்று அப்பாவை தோற்கடிக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் பலமின்றி ஆட்சியமைக்க சுயேச்சைகள் உதவியை நாடவேண்டிய நிலை. ராஜசேகர் சுயேச்சையான எம்.எல்.ஏ. ஆதரவு வேண்டுமென்றால் நிறைவேற்ற சில நிபந்தனைகள் விதிக்கிறார். ஆட்சி அமைக்கும் தீவிரத்தில் அதை ஏற்கிறார் முதல்வர். சுயேச்சை எம்.எல்.ஏ. உள்துறை அமைச்சராகிறார். காவல் துறையினரின் கெளரவத்தை மீட்கிறார்; நாட்டில் ரவுடிகளை ஒழித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறார். சாட்சியாக வரும் ஷம்விருதாவை மணந்துகொள்கிறார். ராஜசேகரின் தடாலடி முயற்சிகளுக்கு மக்களிடையே வரவேற்பு. மந்திரி சபையில் எதிர்ப்பு. இவற்றை எப்படி எதிர்கொண்டு ஜெயிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
தேசியக் கொடியை தலைகீழாகக் கட்டிக் கொண்டு பறக்கும் மந்திரியின் காரை மறித்து பாடம் புகட்டும் ராஜசேகர் ஆரம்பக் காட்சியிலேயே அசத்துகிறார்.
இத்தனை ஆண்டுகளானாலும் 'இதுதாண்டா போலீஸ்' மிடுக்கு குறையவில்லை ராஜசேகரிடம். ஆக்ஷன் காட்சிகளில் ஆவேசத்தைக் காட்டுகிறார். வசனங்களில் நெருப்பின் வெப்பம். தான் இன்னமும் சோடை போகாத - ஆக்ஷன் ஹீரோ என்று நிரூபிக்கிறார்.
கலாபவன் மணி தாதாவாக வருகிறார். விளையாட்டு காட்டும் வில்லன். சிரிக்கவும் பயமுறுத்தவும் வைக்கிறார். ரகுவரன் சைலன்டாக மிரட்டுகிறார் வழக்கம் போல. மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வரும் பானுசந்தர் நினைவில் பதிகிறார். அதிரடி போலீஸ்காரர் முமைத்கான். சண்டைக்காட்சிகளில் மட்டுமல்ல பாடல்காட்சியிலும் கவர்ச்சிகாட்டி வெளுத்து வாங்குகிறார். ஷம்விருதா வழக்கம் போல ஐயோ பாவம் நாயகி.
அரசியல் தகிடுத்தத்தங்களையும் மக்களைப் பற்றிக் கவலைப்படாத அலட்சியங்களையும் 'புட்டுப்புட்டு' வைக்கிறார்கள். மொழி மாற்றுப் படத்துக்கு வசனம் செல்வா. டப்பிங் படமென்ற உணர்வு எழாதபடி படுநேர்த்தியுடன் சிறப்புடன் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
அரசியல் நெடியுடன் ஒரு கதையை எடுத்துக் கொண்டு படு விறுவிறுப்பான திரைக்கதையை படத்தின் கதையை சொல்லியிருக்கிறார்கள். அந்த விரைவான போக்கு படத்தை ரசிக்க வைக்கிறது நம்மை மறந்து.