Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனிமே நாங்க தான் - விமர்சனம்

இனிமே நாங்க தான் - விமர்சனம்

Webdunia

விஸ்வநாதன், வைத்தியநாதன், வரதராஜன், வெங்கடகோவிந்து ஆகிய 4 கதாபாத்திரங்கள் நடிக்க இளையராஜா இசையில் வாலியின் பாடல்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் எம்.வெங்கிபாபு. அனிமேஷன் மாயபிம்பம் மீடியா. தயாரிப்பு எஸ்.ஸ்ரீதேவி.

இந்தியாவின் முதல் 3D அனிமேஷன் படம். விச்சு, வைத்தி, வரது, கோவிந்து இந்த நான்கு பிரதான பாத்திரங்களை வைத்து எளிமையாக கதை பின்னப்பட்டு தொழில்நுட்ப பலத்தில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் ஏதோ கார்ட்டூன் கேரக்டர்கள் போல தோன்றும் இவர்கள் மெல்ல மெல்ல உயிரோட்டமுள்ள குணச்சித்திரங்களாக மனதில் பதிந்துவிடுகிறார்கள்.

webdunia photoWD
சரி... கதை என்ன...? இந்த நான்கு பேருக்கும் இசையில் ஆர்வம். பெரிதாக வாழ்க்கையில் சம்பாதிக்க முடியவில்லை. நிறைய பணம் சம்பாதிக்க ஆசை. ஒரு பாட்டி சொன்னது போல ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள். மலை, ஆறு, கடல், குகை, ஆகாயம் என பயணம் விரிகிறது.

ஒரு முனிவர் தந்த அறிவுரைப்படி நீண்ட பயணத்திற்குப் பிறகு தங்க மாளிகை ஒன்றைப் பார்க்கிறார்கள். வைரக் குவியலை பார்க்கிறார்கள். ஆனால் ஒன்றாகப் பயணப்பட்டவர்கள் பொருள் ஆசையால் பொறாமை கொள்கிறார்கள். தான் மட்டுமே புதையலை அடைய விரும்புகிறார்கள். விளைவு? ஒருவரை ஒருவர் பிரிகிறார்கள்.

பேராசைக்கு இடம் தராத விச்சு மட்டும் கடைசி வரை உயிருடன் இருக்கிறான். பேராசை பெரு நஷ்டம் என்று நீதி சொல்லப்பட்டு கதை முடிகிறது.

இந்த நான்கு பாத்திரங்களும் பேசிக் கொள்வதும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதும் முழு நீளக் காமெடியாக சிரிக்க வைக்கிறது. இயக்குனர் வெங்கியின் குறும்பு வசனங்கள் குழந்தைகளுக்கு கிச்சு கிச்சு மூட்டும்.

webdunia
webdunia photoWD
அந்த நீண்ட பயணத்தில் எதிர்படும் காட்சிகளில் அனிமேஷனின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. விழிகளை விரிய வைக்கிறது. பெரியவர்களைக் கூட கவரும் தொழில்நுட்ப ஜாலம்.

இசை இளையராஜா. இந்தத் தொழில்நுட்ப யுகத்திலும் தன்னால் நிற்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார். `வாழ்வு வேண்டுமா' 'ஒரு முறை கேட்டால்' பாடல்களில் இனிக்கிறார். பின்னணி இசையிலும் பின்னி எடுத்து இருக்கிறார். எம்.எஸ். பாஸ்கர், வாசுவிக்ரம், பாண்டு, மாறன் டப்பிங் குரல்கள் ரசிக்க வைக்கின்றன.

கொஞ்சம் கூட பிசிறு தட்டாத 3D தொழில்நுட்ப நேர்த்தி படத்தின் பலம். மிரள வைக்கும் காட்சிகள், அருமையான இசை, போரடிக்காத விறுவிறுப்பான படத்தொகுப்பு போன்ற பலத்துக்கு ஈடாக திரைக்கதையும் புதிய திருப்பங்களுடன் வலுவாக இருந்திருந்தால் இது எல்லாப் பெரியவர்களுக்கும் ஏற்ற படமாக இருந்திருக்கும். எளிமையான கதையை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு இதுபோதும் என்று நினைத்திருக்கிறார்கள் போலும்.

நிச்சயம் இது ஒரு புதிய அனுபவம். குழந்தைகளைக் குதூகலப்படுத்தும்.

Share this Story:

Follow Webdunia tamil