சீனா தானா 001 - விமர்சனம்
, திங்கள், 24 செப்டம்பர் 2007 (11:25 IST)
பிரசன்னா, ஷீலா, வடிவேலு, மணிவண்ணன், நிழல்கள் ரவி, ரியாஸ்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம். தேவாவின் இசையில் டி.பி.கஜேந்திரன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு மிட்வேலி எண்டர்டெய்ன்மெண்ட். பிரசன்னா, வடிவேலு சிறு வயது நண்பர்கள். அப்போது திருடன், போலீஸ் விளையாட்டு விளையாடுவார்கள். பிரசன்னா போலீஸ். வடிவேலு திருடன். பெரியவர்கள் ஆனதும் வடிவேலு பிக்பாக்கெட் திருடன் ஆகிவிடுகிறார். பிரசன்னாவால் போலீஸ் ஆக முடியவில்லை.கவர்னரைக் கொல்ல வைக்கப்படும் ஒரு பாம் கேஸில் போலீசால் முடியாத சதியை பிரசன்னா கண்டுபிடிக்கிறார். இதை வைத்து போலீஸ் ஆசையை நிறைவேற்ற விரும்புகிறார். இருந்தாலும் மணிவண்ணன், ரியாஸ்கான் தடையாக இருக்க பிரசன்னாவால் போலீஸ் ஆக முடியவில்லை. இடையில் ஷீலாவுடன் காதல் ரவுசு வேறு.
கடைசியில் பிரசன்னாவால் போலீஸ் ஆக முடிந்ததா காதல் ஜெயித்ததா என்பதே முடிவு. ஒரு காதுல பூ, கந்தல் துணி கதையை எடுத்துக் கொண்டு தொழில்நுட்ப முலாம்பூசி அயன் செய்து புதுப்படம் போல 'மொடமொடப்பாக' தந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் பிரசன்னா வடிவேலு அடிக்கும் லூட்டிகள் செம கலகலப்பு. வடிவேலு திருடுவதும் போலீஸ் மாதிரி வந்து பிரசன்னா ஹீரோயிசம் காட்டுவதும் அது தன்னைக் கவரவே என்று ஷீலா புரிந்துகொண்டு குட்டு உடைபடுவதும் லக்கலக்க...லக்கா...!பாம் வைத்ததாக கூறப்படும் வீட்டில் திருடப் போகும் வடிவேலு பாம் பயத்தில் தலையணையைக் கட்டிக்கொண்டு குதித்து தப்பித்து அடிபடுவது வெடிச்சிரிப்பு. இடையில் சிம்ரன்கான் குத்துப்பாட்டு கிளுகிளு ஆட்டத்தையும் செருகியிருக்கிறார்கள்.
எப்படியாவது சிரிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படமெடுத்திருக்கிறார்கள். இந்தக் கொள்கையில் இயக்குனர் உறுதியாக இருக்கிறார், கடைசி வரை. எனவே லாஜிக்கையெல்லாம் மறந்து சிரிக்கவைக்கிறார்.
சீனா தானா 001 புதிய மொந்தையில் பழைய கள் ரகம்தான். கள் புளிக்கிறது. ஆனாலும் கொஞ்சம் கிறுகிறுக்கவும் வைக்கும் சிரிப்பு போதையூட்டுகிறது.