தந்தைக்கு எதிராக களமிறங்கிய சரத்குமார் சுயேட்சையாக நின்று ஜெயிக்கிறார். இரு கட்சிகளும் சரிசமமான எண்ணிக்கையில் சீட்கள் ஜெயிக்கவே சரத்தின் தயவு ஆட்சியமைக்கத் தேவைப்படுகிறது. ஒரே ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வான சரத் ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டுமானால், தான் உள்துறை அமைச்சராகவேண்டும் என்கிறார். புது முதல்வர் மணிவண்ணனும் ஒப்புக் கொள்கிறோம். ஒரே ஒரு எம்.எல்.ஏ. மந்திரியான பின் எடுக்கும் தடாலடி மாற்றங்கள் - அதிரடி நடவடிக்கைகள் தான் 'நம்நாடு' படத்தின் மீதிக்கதையும் உச்சக்கட்ட காட்சியும்.இதே 'லயன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கின் மொழி மாற்று வடிவம் டாக்டர் ராஜசேகர் நடித்த 'உடம்பு எப்படி இருக்கு' படமும் இப்போது வந்திருப்பதால் அதை நம்மையறியாமல் ஒப்பிட வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியவில்லை. உண்மையிலேயே மூலக்கதை சதைப்பற்றுள்ள சத்தான கதைதான். விறுவிறுப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் இடமளிக்கும் நல்ல கதையமைப்புதான். வணிக ரீதியிலும் வெற்றி வாய்ப்புள்ள திரை வடிவம்தான். ஆனால் ரீமேக் என்கிற போது சிறுசிறு மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். அந்த சிறுமாற்றங்களே படத்துக்கு பலவீனம் அளிக்கும்படி உள்ளன.
சரத்குமாருக்கும் பொருத்தமான வேடம். முத்தழகனாக வரும் அவர் தன் பங்கில் குறை வைக்கவில்லை. தற்போது அரசியலில் குதித்துள்ள சரத்துக்கு தானாகவே முழு நீள பிரச்சாரப் படம் போல கதை அமைந்திருப்பது அவரது அதிர்ஷ்டம். குறிப்பாக `வாங்கய்யா வாத்தியாரய்யா' பாடல் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பாடலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி இருக்கிறது.
கல்வியமைச்சராகவும் சரத்தின் அப்பாவாகவும் வரும் நாசர் அலட்டிக் கொள்ளாமல் அரசியல்வாதியாக அசத்துகிறார்.
புதுமுக நாயகி கார்த்திகா குத்துவிளக்கு போல குடும்பப்பாங்கு. நல்லதேர்வு. ஆனால் அவரை பாடல்காட்சிகளில் வெளிநாடுகளில் உரித்த கோழியாய் ஆடைக் குறைப்பு செய்து ஆடவிட்டு இருப்பது தமிழ்ச் சினிமாவின் கமர்ஷியல் சோகம்.புதிய முதல்வராக வரும் மணிவண்ணனும் சரி பதவி விலகும் முதல்வர் விஜயகுமாரும் சரி பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. இதே போல சிறுசிறு பாத்திரங்களுக்கெல்லாம் முகம் தெரிந்த நட்சத்திரங்களைப் போட்டு அவர்களிடம் வேலை வாங்காமல் வெறுமையாக விட்ட உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ரியாஸ்கான், பொன்வண்ணன், சந்தானபாரதி, ராஜ்கபூர், நெல்லை சிவா, அபிதா, பாண்டு, பிரகதி இன்னும் பலர் இப்படி வீணடிக்கப்பட்டவர்களில் அடக்கம். நாசரின் கைத்தடியாக வரும் ரமேஷ்கண்ணாதான் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். நடிப்பிலும் சரி வசனத்திலும் சரி நாடகத்தனமும் செயற்கையும் வெளிச்சம் போடுகின்றன. பல இடங்களில் வீரியமான வசனம் எழுத வாய்ப்பு இருந்தும் கோட்டை விட்டு இருக்கிறார். இந்த விஷயத்தில் 'உடம்பு எப்படி இருக்கு' வசனங்களில் பொறிப் பறக்கிறதை ஒப்புக்கொள்ள வேண்டும். கதையின் பிரதான பாதையை விட்டு அவ்வப்போது தண்டவாளத்திலிருந்து தடம்புரண்ட ரயிலைப்போல வெளியில் சென்று புரண்டு புறப்பட்ட இடத்துக்கு வருகிறது. உதாரணம் நாசர் - சரத் செண்டிமெண்ட் காட்சிகள். பாடலே தேவையில்லாத மாதிரியான படக்கதை. ஆனால் வெளிநாடு சென்று பாடல்காட்சிகள் எடுத்திருக்கிறார்கள்.
மூலக்கதையின் வீரியத்தை அப்படியே கொண்டு வரும் திரைக்கதையை அமைத்து அர்த்தமுள்ள சாரமுள்ள வசனங்களை வழங்கியிருந்தால் 'நம்நாடு' எங்கோ போயிருக்கும்.
அரசியல்வாதி சரத்துக்கு அருமையான பிரச்சாரப் படம்.