நந்தா, ஷெரீன், விவேக், வையாபுரி, அறிமுக வில்லன் தினேஷ் லாம்பா நடிப்பில் குருதேவின் ஒளிப்பதிவில் ரஞ்சித் பாரோட் இசையில் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஜீவி பிலிம்ஸ் லிமிடட்.
நட்பு காதலாகி கசியும் கதை. ஷெரீன் கல்லூரி மாணவி. நந்தா படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர். யாருடனும் அதிகம் பேசாத சுபாவம் ஷெரீனுடையது. இருவரும் அறிமுகமாகி நட்பு மலர்கிறது. நந்தாவின் மனசுக்குள் காதல் மத்தாப்பு பூக்கிறது. ஷெரீன் நட்பாக மட்டும் இருக்கிறார். இந்நிலையில் வெளிநாட்டு மாப்பிள்ளை தினேஷ் லாம்பாவுக்கு ஷெரீனை நிச்சயம் செய்கிறார்கள். இச்செய்தி ரகசிய காதலில் மூழ்கியுள்ள நந்தாவுக்குள் இடியாக இறங்குகிறது. திருமணத்துக்கு 15 நாட்கள் இருக்கும் நிலையில் தினேஷ் தன் வருங்கால மனைவியுடன் நெருங்கிப் பழக விரும்புகிறார்.
கணேஷ் - ஷெரீன் நட்பு தினேசுக்குப் பிடிக்கவில்லை. அவர்களுக்குள் ஏதாவது இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார். மயக்க மருந்து கொடுத்து வெர்ஜினிடி டெஸ்ட் செய்கிறார். இதையறிந்த ஷெரீன் தினேசை வெறுக்கிறார். ஆனால் தினேஷ் ஷெரீன் மீது பைத்தியமாக இருக்கிறார். ஷெரீனைத் தேடி அலைகிறார். ஷெரீனின் அம்மாவைக் கொலை செய்கிறார். நந்தாவைக் கொல்ல முயல்கிறார். ஒரு மனநோயாளி நிலைக்குப் போன தினேஷ் கடைசியில் ஷெரீனைக் கடத்துகிறார். இதிலிருந்து மீண்டு நந்தாவின் நட்பைக் காதலாக்கிக் கொள்வதே க்ளைமாக்ஸ்.
நட்பு காதலாக மலர்வதும் பெற்றோர் நிச்சயிக்கும் மாப்பிள்ளையின் குணம் பிடிக்காமல் தனக்குப் பிடித்தவனுடன் காதலி சேர்வதும் தமிழ்ச் சினிமாவுக்குப் புதிதல்ல.
இந்தப் பழைய கள்ளை வெளி நாட்டுப் படப்பிடிப்பு, ரிச்சான ஒளிப்பதிவு, வெஸ்டர்ன் இசை என்று பல அலங்காரங்கள் கொண்ட வண்ண ஜால கோப்பையில் ஊற்றிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். கதை காட்சிகளில் பழைய நெடி. எனவே கள் ரொம்பவே புளிக்கிறது.
படத்தின் நாயகன் நந்தா. என்ன செய்கிறார் அவரது பின்புலம் என்ன என்கிற தெளிவேயில்லை. வேலையில்லை என்கிறார். சுய தாழில் செய்யலாம் என்கிறார். ரவுடி என்கிறார். ஏனிந்தக் குழப்பம்? நடிக்கவும் பெரிய வாய்ப்பில்லை.
நாயகி ஷெரீன் படம் முழுக்க சோகமாக இருக்கிறார். உற்சாகம் இல்லை. பாடல் காட்சிகளில் மழையில் நனைய மட்டுமே அதிகம் பயன்பட்டிருக்கிறார் பாவம்.
வில்லனாக அறிமுகமாகியுள்ள தினேஷ் லாம்பா ஆரம்பத்தில ரிச்சலூட்டும்ட பாத்திரமாக நுழைகிறார். போகப் போக தன் தனித்துவத்தைக் காட்டி பார்ப்பவர்களை ஆக்கிரமித்து விடுகிறார். உருட்டும் விழிகளும் உள்ளுக்குள் புகையும் சந்தேகமுமாய் திரியும் தினேஷ் எல்லாரையும் ஓரம் கட்டி விட்டு மனதில் பதிந்து விடுகிறார்.
படத்தில் நந்தா ஷெரீன் நட்பை - காதலை வலுப்படுத்த போதிய அழுத்தமான காட்சிகள் இல்லை. பாடல் காட்சிகள் மட்டும் போதுமா? எனவே தினேஷ் - ஷெரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளே அதிகம் தென்படுகின்றன. விளைவு... காதலைச் சொல்வதைவிட சந்தேகப் புராணமே மனத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது கதையின் போக்கில்.
மெல்ல ஆமை வேகத்தில் நகர்கிறது கதை. சில நேரம் நகராமல் அதே இடத்தில் படுத்துக்கொள்கிறது. இடையில் வரும் விவேக்கின் காமெடி பெரிய ஆறுதல். ஜேப்படி பேர் வழியாக வரும் விவேக்கின் ஜோக்கடி வித்தை ரசிக்க வைக்கிறது. விவேக் சிந்தனையிலும் வறட்சியா? எத்தனை படங்களில் போலிச் சாமியார் காமெடியில் போரடிப்பது?
குருதேவின் கேமரா படத்தை பளிச்சென தூக்கி நிறுத்த முயல்கிறது. ரஞ்சித் பாரோட்டின் இசையில் ரகுமானும் ஹாரிசும் மணக்கிறார்கள். இருந்தாலும் ரசிக்க வைக்கும் இசை மணம். ஓரிரு பாடலில் அப்பட்டமான ஆங்கில வாசனை வீசுவது அநியாயம்.
ஆயிரம் பக்கபலம் இருந்தும் பலவீனமான கதைக்கருவாலும் வலுவற்ற திரைக்கதையாலும் படத்தில் உற்சாகமும் விறுவிறுப்பும் இல்லாதது சோகம். அன்று தெளிவான திரைக்கதையில் பளிச்சிட்ட இயக்குநர் ரவிச்சந்திரன் என்று நம் கண்ணெதிரே தோன்றுவார்?