மன்சூர் அலிகான், மஞ்சு, அனுராதா, அபிநயஸ்ரீ, பொன்னம்பலம், வெ.ஆ. மூர்த்தி நடிப்பில் ஏ.கே. வாசகன் இசையில் எம். ஜமீன்ராஜ் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ராஜ் கென்னடி பிலிம்ஸ்.
பணத்துக்காக எதையும் செய்யும் அடியாள் மன்சூர் அலிகான். அப்படி எம்.எல்.ஏ. அனுராதாவுக்காக மஞ்சுவின் கல்யாணத்தை நிறுத்துகிறார். மஞ்சுவின் தந்தை இதையறிந்து இறந்துவிடுகிறார். தன் தந்தையின் மரணத்திற்கு காரணமான மன்சூரைப் பழிவாங்க அவர் மீது கற்பழிப்புப் புகார் போடுகிறார்.
மன்சூரை வீழ்த்த பல திட்டங்கள் போடுகிறார் மஞ்சு. கடைசியில் அதர்மத்திலும் ஒரு தர்மம் என்கிற மாதிரி மன்சூர் செய்யும் அநியாயத்திலும் ஒரு நியாயம் இருப்பதை மஞ்சு அறிந்து மனம் மாறுகிறார். அவரை விரும்பத் தொடங்குகிறார். இதுதான் என்னைப்பார் யோகம் வரும் கதை.
எதுவும் பிரச்சனை என்றால் தாதாவாகிய `என்னைப் பார் யோகம் வரும்' பிரச்சனையை தீர்த்து வைப்பேன் - காசு வாங்கிக் கொண்டு என்கிறாரோ மன்சூர்.
ஒரு ஹைதர் காலத்து கதையை (கதையா அது?) எடுத்துக் கொண்டு காமடி செய்திருக்கிறார்கள்.
விடலைப் பொடியன்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் மன்சூர் அவர்களுடன் பொழுது போக்காக கோலி விளையாடுவார். இடையிடையே தாதா வேலை செய்வார். இப்படிப்பட்ட சோதா ஒரு தாதாவா...?
இதை நம்பவே முடியவில்லை. மன்சூரின் தாதா வேடம் இப்படியும் ஒரு பாத்திரமா என்ற சிரிக்க வைக்கிறது. பல இடங்களில் ஊசிப்போன காட்சிகள் என்று ஆளாளுக்கு வெறுப்பேற்றுகிறார்கள். எல்லாமே மோசமாக இருக்கும் இப்படத்தில் இசை சுமார் ரகம். `கோயம்பேடு கொய்யாப் பழம்' பாடல் முனுமுனுக்க வைக்கும். பாடலில் வரும் திருமாவளவன் பற்றியும் `இவருக்கு இது தேவையா?' என்று முனுமுனுக்க வைக்கிறது.
பாஸ்ட் புட் பண்ணுவதாக நினைத்து காமடி, கவர்ச்சி என்று அரைத்த மாவை அரைத்து ஊசிப்போன பலகாரத்தை செய்திருக்கிறார்கள். என்னைப் பார் கோபம் வரும். என்னைப் பார் எரிச்சல் வரும் என்கிறார்கள்.
சின்ன பட்ஜெட்டில் ஒரு சிறுபிள்ளைத்தனமான படம்.