லோன் குருஃபட், ஜெசிகா அல்பா, கிறிஸ் ஈவன்ஸ், மைக்கேல் சிக்ளிஸ் நடிப்பில் டிம்ஸ்டோரி இயக்கியிருக்கும் படம். தயாரிப்பு ட்வென்டியத் சென்சுரி ஃபாக்ஸ். தமிழில் வெளியிட்டுள்ள நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.
ஒரு சில்வர் மனிதன் விண்ணிலிருந்து திடீரென மின்னலாய் தோன்றி மண்ணுலகில் தாக்குதல் நடத்துகிறான். அவன் தாக்குதல் படுபயங்கரமாக இருக்கிறது. கடல் பகுதியே உறைந்து விடுகிறது.
நிலப்பகுதியில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்படுகின்றன. கட்டடங்கள் தரை மட்டமாகின்றன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு அப்பகுதியே இருளில் மூழ்குகிறது. இந்த ஆபத்து உலகையே அச்சுறுத்துகிறது.
விஞ்ஞானிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் திணறுகின்றனர். இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு களத்தில் இறங்குகின்றனர், விஞ்ஞானி மிஸ்டர் பென்டாஸ்டிக் குழுவினர்.
கதி கலக்கிய சில்வர் மனிதனை வியூகம் அமைத்துப் பிடித்து விடுகின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம் இவன்தான்.. இவன் பிடிபட்டு விட்டான் இனி நிம்மதி என்று பெருமூச்சுவிட்டால் அவன் கூறும் தகவல் அதிர்ச்சியூட்டுகிறது. தான் காரணமல்ல என்றும், தான் ஒரு கருவியே தன்னை அனுப்பியது வேறொரு சக்தி என்றும் கூறுகிறான். இவ்வளவுக்கும் காரணமாக இருக்கும் அந்த தீய சக்தியைப் பிடிக்க தீவிர முயற்சி எடுக்கின்றனர் விஞ்ஞானிகள்.
எல்லாம் தோல்வியில் முடிகின்றன. இறுதியில் தீய சக்தியை எப்படி வென்று வேரறுக்கின்றார்கள் என்பதுதான் உச்சக்கட்ட காட்சி.
ஏற்கனவே வந்திருக்கும் பென்டாஸ்டிக் 4 படத்தின் இரண்டாம் பாகம் இது. படத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களாக நான்கு முக்கிய பாத்திரங்கள் வருகின்றன. உடலை ரப்பராக வளைத்து நீட்டி மடக்க முடிகிறவர் லோன் குருஃப்ட், கண்ணால் பிறர் பார்க்க முடியாமல் மறையும் ஜெசிகா அல்பா, நெருப்பு மனிதனாக தீயை கக்கும் கிறிஸ் ஈவன்ஸ், கல் மனிதனாக மைக்கேல் சிக்ளிஸ் ஆகியோரே அந்த நால்வர்.
குழந்தைகளை குறிவைத்து ரசிக்கும்படி எடுக்கப்பட்டுள்ள படம். சில்வர் மனிதனின் அசுரப் பாய்ச்சல் தூண்களை மிரள வைக்கிறது. அப்போது கடலிலுள்ள கப்பல் நிலை குலைவதும் நீர் உறைந்து பனிக் கட்டியாவதும் கிறுகிறுக்க வைக்கிறது.
உலகின் பல இடங்களில் பள்ளங்கள் உருவாகின்றன். அடுத்த பள்ளம் லண்டனில் என கண்டுபிடித்து தாக்குதலைத் தடுக்க பென்டாஸ்டிக் குழுவினர் போவதும், அதற்குள் ஆறு வற்றி பள்ளம் விழுவதும் விழிகளை விரிய வைப்பவை. அந்த ராட்சத ராட்டினம், ரோப் கார்கள் அறுந்து விழுவதும் அதைத் தடுக்க கல் மனிதன் முயல்வதும் அசகாய காட்சி... அசுரத்தனமான முயற்சி.
படம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாய் மிரட்டுகிறது. கண் கொள்ளா பிரம்மாண்டம். பிரமிப்பான கதைத் தளம், வித்தியாசமான பாத்திரங்கள், விறுவிறுப்பான காட்சிகள், அசத்தலான கிராபிக்ஸ் என்று அத்தனை வகையிலும் அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள். குழந்தைகளுக்கேற்ற கண்ணியமான மெகா படம்.