Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவாஜி - விமர்சனம்

சிவாஜி - விமர்சனம்

Webdunia

ரஜினி, ஸ்ரேயா, விவேக், சுமன், ரகுவரன், மணிவண்ணன், சாலமன் பாப்பையா, சண்முகராஜன், பட்டிமன்றம் ராஜா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கே.வி.ஆனந்த், இசை ஏ.ஆர்.ரஹ்மான்,வசனம் சுஜாதா, கலை தோட்டாதரணி, இயக்கம் ஷங்கர். தயாரிப்பு ஏவி.எம் புரடக்‌ஷன்ஸ்.

webdunia
பிரம்மாண்டங்களை பிலிமுக்குள் கொண்டு வருகிற ஷங்கர், பெரிய பட நிறுவனம் ஏவி.எம். இவற்றுடன் சூப்பர் ஸ்டார் இமேஜும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது'சிவாஜி'.

ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் நாயகன். அவனுக்கு வரும் தடைகள், எதிர்ப்புகள், அதை முறியடித்து நல்லது செய்யும் நாயகன் என்கிற எம்.ஜி.ஆர் காலத்து பழைய கதை. இருந்தாலும் என்ன... இதை மறக்கடிக்கிற மாதிரி ஒளி ஒலி வித்தை காட்டி லாஜிக்கை எல்லாம் மறந்து மேஜிக்கை ரசிக்க வைத்து ஜெயித்து விடுகிறார்கள். அதுதான் ஷங்கரின் திறமை.

அமெரிக்காவில் சாப்ட்வேர் மார்க்கெட்டிங் செய்து எக்கச்சக்கமாக சம்பாதிக்கிறார் ரஜினி. சம்பாதித்த பணத்தை தமிழகத்தில் கல்வி, மருத்துவ சேவை செய்து ஏழை மக்களுக்கு உதவ திட்டமிடுகிறார். இலவச பல்கலைக்கழகம், மருத்துவமனை கட்ட விரும்புகிறார். இதற்கு இங்குள்ள அரசு அதிகாரிகளும் அரசியல் புள்ளிகளும் நந்தியாக தடையாக குறுக்கே நிற்கிறார்கள்.

தனக்கு விருப்பமில்லாமல் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ரஜினிக்கு. ரஜினி இந்தப் பணியில் ஈடுபடுவது ஏற்கனவே இங்கு பல்கலைக்கழகம், மருத்துவமனைகளை வணிக நோக்கில் நடத்தி மக்களை சுரண்டி வரும் சுமன் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ரஜினியை புலியாக மாறி எதிர்க்கிறார். சதி வேலை செய்து ரஜினியை நடுத் தெருவுக்குக் கொண்டு வருகிறார்.

ஒரு கட்டத்தில் ரஜினி `ஆளே க்ளோஸ்' என்று நம்பி விடுகிறார் சுமன். இதன் பிறகு ரஜினி உயிர் பிழைத்து புனர் ஜென்மம் எடுத்து மீண்டும் இழந்தவை எல்லாவற்றையும் மீட்டு, கறுப்புப் பண முதலைகள் எல்லாரையும் வீதிக்கு கொண்டு வந்து தன் ராஜ்ஜியத்தை நிறுவி ஏழைகளுக்கு பணி செய்வது வரையிலான கலகலப்புகள் பரபரப்புகள் விறுவிறுப்புகள்தான் சிவாஜியின் கதை.

முன் பாதியில் சிவாஜியாக வரும் ரஜினி, பின்பாதியில் எம்.ஜி.ஆர். ஆக வருகிறார். திரும்பி வருகிற ரஜினியின் பெயர் எம்.ஜி.ரவிச்சந்திரன். கதைப்படி மட்டுமல்ல இப்படத்தில் தோற்றத்திலும் புனர் ஜென்மம் தெரிகிறது ரஜினிக்குள். ஆம்... மிகமிக இளமையான தோற்றத்தில் வந்து கவர்கிறார். மொட்டைத்தலை குறுந்தாடி கெட் அப்பில் பளிச்சிடுகிறார். ஒப்பனையாளர் வாழ்க.

webdunia
webdunia
ரஜினியின் ஸ்டைல், ஆக்‌ஷன், செண்டிமென்ட், காமெடி என்பதை சரிவிகித கலவையாக கலந்து சூப்பர் மசாலா மிக்ஸ் செய்து இருகிறார் ஷங்கர். காட்சிகளை ரஜினி ரசிகர்களை மனதில் வைத்தே அதற்கேற்ப விறுவிறுப்புடன் நகர்த்தியிருக்கிறார். ரஜினி ரசிகர்களுக்கேற்ற 200% மசாலாப்படம் எனலாம். முன்பாதியில் ரஜினி முத்திரை. பின்பாதியில் ஷங்கர் முத்திரை.

ஆக்‌ஷன் நடிகராக இருந்தாலும் நகைச்சுவை ரஜினியின் பெரிய படம். இதில் அதிரடி ஒரு பக்கம் என்றாலும் சிரிக்க வைக்கும் கலகலப்பு படம் முழுக்க தொடர்கிறது. முன்பின் தெரியாதவர்களிடம் எப்படிப் பழகுவது என்பார் ஸ்ரேயா. உடனே ரஜினி குடும்பத்தோடு ஸ்ரேயா வீட்டுக்குப் போய் "உங்க கிட்டே பழக வந்திருக்கோம்" இதில் ஆரம்பிக்கிற சிரிப்பு பட்டாசு படம் முழுக்க வெடிக்கிறது.

ரஜினியின் காமெடி கலாட்டாவில் சாலமன் பாப்பையாவும், பட்டிமன்ற ராஜாவும் சேர்ந்து கலக்குகிறார்கள். தாய்மாமா விவேக்கின் ரவுசு புது தினுசு. வில்லன் சுமன் சைலன்ட் எமன் என்று சொல்ல வைக்கும் நடிப்பு. சண்முகராஜன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இவர் சுமனுடன் சேர்ந்து கொண்டு சதிக்கு உதவுகிறார். பளிச்சென மனதில் பதியும் நடிப்பு.

ரஜினிக்கு பஞ்ச் டயலாக்குகள் உண்டு. சாம்பிளுக்கு ஒன்று எதிரிகளைத் தனியாளாகச் சந்திக்கும்போது, "பன்னிங்கதாண்டா கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாதான் வரும்." விவேக் கூட பஞ்ச் டயலாக் பேசுகிறார், "சித்தூர் தாண்டினால் காட்பாடி சிவாஜியை சீண்டினால் டெட்பாடி" என்று.
நாலு பாட்டு, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கண்ணீர் என நாலு காட்சிகள் என்று தமிழ் கதாநாயகிகளை அடக்கிவிடுவார்கள். அந்தக் கொடுமை ஸ்ரேயாவுக்கு நிகழவில்லை. படம் முழுக்க பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ஸ்ரேயா பளிச்சென்று பளிங்கு பொம்மை மாதிரி வருகிறார். நடிக்கவும் செய்கிறார்.

மணிவண்ணன், ரகுவரன், லிவிங்ஸ்டன், தாமு, வடிவுக்கரசி, மயில்சாமி ஆகியோரும் நடித்துள்ளனர். பாடல்கள் எல்லாமே சுடச்சுட சூப்பர் இசையில் நனைந்து ஒலிக்கின்றன. வாஜி வாஜி, சஹானா சாரல், ஒரு கூடை சன் லைட், பல்லேலக்கா எல்லாமே பக்கா.

ஷங்கர் தான் இயக்கம் என்றாலும் அவர் நினைக்கிற பிரம்மாண்டத்தை ஒளியமைப்பிலும், கேமரா கோணத்திலும் காட்டி கண்முன் நிறுத்தி இருக்கும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்தை கை குலுக்கிப் பாராட்டலாம். சண்டைக்காட்சிகள் பீட்டர் `ஹெய்ன்'. நிறையவே `ஸ்ட்ரெய்ன்' செய்து உழைத்திருக்கிறார். வசனம் சுஜாதா, கேட்டதைக் கொடுத்திருக்கிறார். நம்மை மிரட்டும் காட்சிகளில் உழைத்திருக்கும் முகம் தெரியாத கிராபிக்ஸ் நிபுணர்களுக்கு பாராட்டுகள்.

ஒவ்வொரு துறையிலும் உச்சத்தில் இருப்பவர்களை கூட்டணி அமைத்துக் கொண்டு ஒருங்கிணைப்பு வேலையை சரி வரச் செய்து வெற்றியைத் தேடிக் கொள்வது ஷங்கரின் திறமை. சிவாஜியிலும் அந்தத் திறமையைக் காட்டியுள்ளார். சபாஷ். அப்படி என்றால் சிவாஜியில் குறையே இல்லையா? ஆச்சரியப்படுத்துகிறது. மிரள வைக்கிறது. ஆனால் இதயத்தை தொடவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil