Entertainment Film Review 0705 22 1070522098_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொழி - விமர்சனம்

Advertiesment
மொழி - விமர்சனம்

Webdunia

இந்த உலகத்தில் உயர்வானவை எல்லாம் எளிமையாக இருப்பவை தான். காற்று, நீர், ஆகாயம் எல்லாம் மலிவானவைதான். அதன் பெருமை உயர்வானது. அதுபோலத்தான் "மொழி" திரைப்படத்தின் கதையும் மிகவும் எளிமையானது. ஆனால் அதைச் சொல்லியிருக்கும் விதம் உயர்வானது.

பிரகாஷ்ராஜும் பிருதிவிராஜும் இசைக் கலைஞர்கள். இனிய நண்பர்களும் கூட. நிறைய திறமைகள் கொஞ்சம் கனவுகள் என்று வாழும் ஓர் "அறை வாசிகள்". அவர்கள் வசிக்கும் அதே குடியிருப்பு வளாகத்தில் ஜோதிகாவும் இருக்கிறார். ஜோதிகாவைக் கண்டு பிருதிவிராஜுக்குள் காதல் பூ பூக்கிறது. பிறகுதான் தெரிகிறது ஜோ ஓர் ஊமையென்று. நெருங்கி நட்பானபோது வாய் மட்டும் பேச முடியாத - திறமைகள் பேசும் பெண்தான் ஜோ என்று தெரிகிறது.

காது கேளாதோர் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் ஜோவின் தோழி சொர்ணமால்யா. இவர் பேச முடிந்தவர். பிருதிவிராஜ் ஜோவிடம் காதலை வெளிப்படுத்துகிறார். ஜோ மறுதலித்து விடுகிறார். இன்னொருபுறம் பிரகாஷ்ராஜும் இளம் விதவையான சொர்ணமால்யா இருவரிடையே நெருக்கம் நேசமாகிறது. அது கல்யாணத்தில் முடிகிறது. தான் ஊமையாகப் பிறந்ததால் தன் தாயைவிட்டு விட்டுப் பிரிந்துச் சென்றுவிட்ட தந்தையின் செயல் ஜோவுக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான் பிருதிவிராஜின் சகவாசத்தை தவிர்க்கிறார் ஜோ.

எல்லா ஆண்களும் அப்பா போல இல்லை என்று உணர வைக்க படாத பாடுபடுகிறார்கள் பிரகாஷ்ராஜ், சொர்ணமால்யா, பிருதிவிராஜ் எல்லாருமே. சரியான புரிதலுடன் பிருதிவிராஜ் காதலை ஏற்றுக் கொள்கிறார் ஜோ. இதுதான் "மொழி" படத்தின் எளிமையான கதை.

படம் பார்க்கும் ரசிகர்களை ஒன்றும் தெரியாதவர்களாய் - பேசவோ கேள்வி கேட்கவோ வராத ஊமைகளாக எண்ணி அபத்தங்களையே திரைக்கதைகளாக கொடுக்கும் பலரது மத்தியில் ஊமையையும்... அல்ல..அல்ல பேச இயலாத தன்மையையும் பெண்மையையும் மதித்து நல்ல கதையை வழங்கி இருக்கும் இயக்குனர் ராதாமோகனையும் படத்தை தயாரித்திருக்கும் பிரகாஷ்ராஜையும் முதலில் கைகுலுக்கிப் பாராட்டலாம். பெண்மையை கௌரவப்படுத்தி நல்ல ரசனைக்கு மரியாதை செய்து இருக்கிறார்கள்.

படத்தின் தூண்களாக மூவர், பிரகாஷ்ராஜ், பிருதிவிராஜ், சொர்ணமால்யா! எல்லாரும் பேசி வெளிப்படுத்த முடியாத நடிப்பை ஜோதிகா பேசாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்புப் பொறுப்பை அவரது விழிகளே ஏற்றுக் கொண்டு நம்மை வியப்பிலாழ்த்துகின்றன.

ஆடையின் அழகும் நுணுக்கமும் ஆதாரமாக இருக்கும் இழையின் மென்மையைப் பொறுத்தே அமையும். "மொழி"யின் காட்சிகளை மெல்லிய இழைகளாக்கி ஒரு நெசவாலியின் கலையுணர்வும் கைநேர்த்தியும் கலந்து அழகுடன் திரைக்கதை நெய்திருக்கிறார் இயக்குனர். சின்னச் சின்ன காட்சித் தோரணங்களின் மூலம் பெரிய பெரிய உணர்ச்சிப் பொறிகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குனர் ராதாமோகன் நல்ல திறமைசாலி. ஒலியில்லாத ஓர் உலகத்தில் வசிக்கும் காது கேளாதவர்களின் உணர்வை அடி மனத்தில் ஆழமாக பதிய வைக்கிறார்; பேச்சு மொழி இல்லாத வாய் பேச முடியாத ஜீவன்களின் வாழ்க்கையை நம் இதயத்துக்குள் இறக்கி வைக்கிறார். சபாஷ். ஓசை வடிவம் கொண்டது மட்டுமே மொழி என்று கருதுவோருக்கு மொழிக்கு பல வடிவம் உண்டு என்று நீரூபனம் செய்கிறார் இயக்குனர், "காற்றின் மொழியே ஒலியா இசையா?" என்று வைரமுத்துவையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு கேள்வி கேட்கிறார்.

வார்த்தைகளுக்குட்படாத ஒலி வடிவம் வரி வடிவம் அற்ற மொழி அன்பு மொழி என்றும் அதைப் புரிந்து கொள்ளும் ஊடகமாக இருப்பது மனம் தான் என்றும் இரு-ஐ பிரபஞ்ச தத்துவத்தை முன்வைத்து முடித்துள்ளார்.

படத்தில் "மொழி"யை பிரதானப்படுத்தியும் எது மொழி என்பது பற்றியும் நிறைய வாதப் பிரதிவாதங்களை முன் வைக்கிற இயக்குனர் சொல்ல வந்த கருத்தை விட்டு தடம்மாறாத ரயிலாக ஊர் கொண்டு போய் இறக்குகிறார் பத்திரமாக பாதுகாப்பாக. அந்த அளவுக்கு கதை உத்திரவாதம் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

காட்சியமைப்புகளை மிக எளிமையாகப் பிரித்து தோரணம் கட்டியிருக்கிறார்கள். சின்னச் சின்ன மின்னல்களாய் சிக்கலில்லாமல் சீர்பிரித்து அமைத்துள்ளது ரசிக்க வைக்கிறது. அந்த 1984க்குப் பிறகு எல்லாம் மறந்துவிட்ட எம்.எஸ். பாஸ்கரின் படைப்பு நல்ல நகைச்சுவை. அதன் முடிவிலும் கூட நல்ல டச்சிங். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். கரப்பான்பூச்சியைக் கூட பயன்படுத்தி சிரிக்க வைத்துள்ள இயக்குனர் வல்லவர்தான். ஆர்ப்பாட்ட வில்லன் பிரகாஷ்ராஜை வைத்துக்கூட நகைச்சுவை செய்திருக்கிறார்.

படத்தில் வித்யாசாகர் - வைரமுத்து கூட்டணியில் எல்லாப் பாடல்களும் இனிக்கின்றன. பின்னணி இசையிலும் முன்னணித் தரத்தைக் காட்டியிருக்கிறார் வித்யாசாகர். மௌனமான - சூழல்களில் மொழி பெயர்த்து விளக்கும் பின்னணி இசை சில சூழல்களில் நிசப்தமாக நின்றும் கூட மௌன மொழி பேசும் அழகு ரசிக்க மட்டுமல்ல பாராட்டவும் தூண்டுகிறது.

முழுப் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தின் கனபரிமானத் தூண்களை கட்டி நிற்கிறது விஜி எழுதியுள்ள வசனங்கள். ஒவ்வொரு சொல்லையும் சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தின் மொழியாகவே எழுதியிருக்கிறார். நீட்டி முழக்கி சுற்றி வளைத்து வசனம் எழுதாமல் எளிமையாக நூறு சதவிகித யதார்த்தத்துடன் எழுதியிருக்கிறார். உணர்ச்சித் தெரிப்புகளாய் மனசைத் தொடும்படி நிறைய இடங்கள். எழுதும் வசனம் கதாபாத்திரத்தை விட்டு வெளியே சென்றுவிடக் கூடாது. வசனகர்த்தா தனியே தலைகாட்டக்கூடாது என்கிற சர்வ ஜாக்கிரதையாக செய்திருக்கிறார் விஜி. அதனால்தான் அவரைத் தேடிப்பிடித்துப் பாராட்டத் தோன்றுகிறது.

நோக்கம் நன்றாக இருக்கும் போது நாலுபேரின் உதவி நல்லதாகவே அமையும் என்பார்கள். அதற்கேற்ப இயக்குனரின் திசையில் இணைந்து பயணம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.வி. குகன். காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பும் பளிச்சிடுகிறது.

உலகம் எங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் அன்பு மொழி என்று காட்டியிருக்கும் "மொழி" ரசிகர்களின் ரசனைக்கு மரியாதை.

Share this Story:

Follow Webdunia tamil