Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அகரம் - விமர்சனம்

Advertiesment
அகரம் - விமர்சனம்

Webdunia

நந்தா, அர்ச்சனா கல்ராணி, சீதா, விவேக் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் டி.நாகராஜன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஏ.பி.சிவயோகன்.

வீடு என்பது வெறும் சிமெண்டும் கல்லும் சேர்ந்த கட்டடமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் சொந்த வீடு என்கிற போது அதை தங்கள் ரத்தமும் சதையுமாகவே பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும் ஒரு நடுத்தர குடும்பம் சொந்த வீடு கட்டிக் குடியேறுகிறது. வீட்டைக் கோயிலாகக் கருதும் குடும்பம். அந்த வீட்டில் ஆணி அடித்தால் கூட பொறுக்க முடியாது அவர்களால். கட்சியினர் போஸ்டர் ஒட்டி அசிங்கப் படுத்துகின்றனர். இதைத் தட்டிக் கேட்கிறார் நந்தா. காரணமான தாதா வர்மாவின் தம்பியை அடித்துவிடுகிறார் நந்தா. ஆவேசப்பட்ட தாதா நந்தாவுக்கு மரணத்துக்கு நாள் குறிக்கிறார். தாதா கூட்டம் நந்தாவின் குடும்பத்துக்கு நாளொரு தொல்லையும் பொழுதொரு இடையூறுமாக செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் பொறுத்துப் பார்த்த தாய் சீதா பொங்கி எழுகிறார். மனோகரா கண்ணாம்பாள் போல "பொறுத்தது போதும் பொங்கி எழு மகனே" என்று நந்தாவைத் தூண்டி ஆணையிடுகிறார். சூரசம்ஹாரம் செய்து தாதா கூட்டத்தை துவம்சம் செய்கிறார் நந்தா. இப்படிச் சொந்த வீட்டின் கௌரவத்தைக் காப்பாற்றுகிறார் நந்தா. இதுதான் "அகரம்" படக்கதை.

நந்தாவுக்கு சிம்கார்டு விற்பனையாளர் வேடம், புதிய பாத்திரம். அன்பான தங்கை, அம்மா, பாட்டி, சாலையில் சந்திக்கும் காதலி என புதுக்கவிதை மாதிரி புறப்படுகிறது படக்கதை. சிறு பிரச்சினை வாழ்க்கையை திசை மாற்றுகிறது. கவிதையாகப் புறப்பட்ட கதை போர்ப் பரணியாக மாறிச் சீறுகிறது. குடும்பக்கதை ஆக்ஷன் படமாக நிறம் மாறுகிறது. இதன் பிறகு விறுவிறுப்பு கூடி சுவாரஸ்யம் வருகிறது.

கோப நாயகனாக மாறி ஆக்ஷன் காட்சிகளில் நன்கு உழைத்திருக்கிறார் நந்தா. நாயகி அர்சச்னா அழகாக இருக்கிறார். அவ்வப்போது வருகிறார். மழையில் நனைகிறார். பாடி ஆடுகிறார். காணாமல் போய்விடுகிறார். சிம் கார்டு சேல்ஸமேன் விவேக் அடிக்கும் லூட்டியும் காலாட்டாவும் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக குறவர் கூட்டத்தில் "மாட்டி முழிக்கும் கட்டம் சரவெடி".

அமுத முகமாக இருக்கும் அம்மா பொங்குகிற கட்டம், கரகாட்டம் போல சாலை நடுவே கொலை விளையாட்டு ஆடும் வில்லனின் நடிப்பு, பூனை புலியானது போல் நிறம் மாறும் நாயகன், வில்லனுக்கே வில்லனாகும் போலீஸஅதிகாரி, அரசியல்வாதி போன்றவை நல்ல திருப்பங்கள்தான்.

ஆயிரம் இருந்தும் திரைக்கதை நோஞ்சானாக இருப்பதால் பெரிதாக கதை வலுப்பெறவில்லை. அகரம் சிகரமுமல்ல. ஒன்றுக்கும் உதவாத தகரமுமல்ல. சராசரிப் படம்.

Share this Story:

Follow Webdunia tamil