ஜி.ஆர். வழங்க ஜி.ஆர். கோல்டு பிலிமஸ் தயாரிக்கும் படம், எங்க ராசி நல்லராசி. படத்தில் இரண்டு ஹீரோக்கள். முரளி, விஷ்வா. கதைப்படி இருவரும் நண்பர்கள். வேலைக்காக கிராமத்திலிருந்து சென்னை வருகிறார்கள். இருவருக்கும் வேலை தருகிறார் பணக்காரரான எஸ்.வி.சேகர். இவரது மகள் ரிதிமா. மகளை திருமணம் செய்து தருகிறேன் என்று சொல்லி முரளி, விஷ்வா இருவரிடமும் வேலை வாங்குகிறார் எஸ்.வி.சேகர்.
காரியம் முடிந்ததும் இருவரையும் கழற்றி விட்டு, அமெரிக்க மாப்பிள்ளை சார்லிக்கு ரிதிமாவை திருமணம் செய்து கொடுக்க திட்டமிடுகிறார் எஸ்.வி.சேகர். இந்த நேரம் தந்தை முரளி, விஷ்வா இருவரையும் நம்ப வைத்து ஏமாற்றியது ரிதிமாவுக்கு தெரியவருகிறது. அவர் திடீரென்று ஒரு முடிவு எடுக்கிறார். நான் முரளி, விஷ்வா இருவரையும் காதலிக்கிறேன், இருவரையும் திருமணம் செய்யப் போகிறேன்!
இறுதியில் என்ன நடந்தது? யாருடைய விருப்பம் வெற்றி பெற்றது?
டைட்டில் கார்டு முதல் சுபம் வரை காமெடியாக படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்களான ரவி-ராஜா.
* முரளி, விஷ்வா, ரிதிமா, எஸ்.வி.சேகர் மற்றும் சார்லியுடன் லிவிங்ஸ்டன், ராதாரவி, வினிதா, சின்னி ஜெயந்த், மோகன்ராம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
* தயாரிப்பாளர் ஜி.ஆர். முக்கியமான வேடம் ஒன்றில் தோன்றுகிறார். இவர் பழம்பெரும் நாடக நடிகரும் கூட.
* தேவா இசை. பொன்னியின் செல்வனின், நீ எனக்கு வேஸ்ட்... உங்கக்கா எனக்கு டேஸ்ட்... கானா பாடல் ஹிட்டாகும் என்கிறார்கள், பாடலை கேட்டவர்கள்.
* வாலி, வைரமுத்து, கருணாநிதி, பிறைசூடன் ஆகியோரும் பாடல் எழுதி உள்ளனர்.
* ஒளிப்பதிவு தயாள் ஓஷோ, சண்டைப் பயிற்சி தளபதி தினேஷ், படத் தொகுப்பு ஜோசப்.