சினிமா பாரடைஸ் நிறுவனம் சார்பில் ராதா ஷக்தி சிதம்பரம் தயாரித்திருக்கும் படம் சண்ட. சுந்தர் சி இதில் கதாநாயகன். நமிதா, ராகினி என இரண்டு கதாநாயகிகள்.
மாமியார், மருமகனுக்கு இடையே நிகழும் மோதலே படத்தின் கதை. ஷக்தி சிதம்பரம் கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் மாமியாராக நதியாவும், மருமகனாக சுந்தர் சி.யும் நடித்துள்ளனர்.
படத்தில் சுந்தர் சி ஒரு ரவுடி. பெயர் கத்தி. இவரிடமே வாலாட்டும் பாடகியாகி சிம்மக்கல் சின்னக்கிளி என்ற கதாபாத்திரத்தில் நமிதா. இவர்கள் இருவரும் ஏழு கெட்டப்புகளில் தோன்றும் பாடல் காட்சி ஒன்றும் உண்டு.
காதல் தண்டபாணி, லாலு அலெக்ஸ், ராஜ்கபூர், ரவிமரியா, டெல்லி குமார், பரவை முனியம்மா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். காமராஜர் என்ற நேர்மையான கலெக்டர் கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்துள்ளார். விகேக்கிற்கு இரட்டை வேடம். நாட்டமை, நாட்டாமை மகன் என அவர் வரும் காட்சிகளில் திரையரங்கு திமிலோகப்படும் என்கிறார்கள்.
தினாவின் இசையில் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன. 'வாடி என் கப்பக் கிழங்கே...' ரீ-மிக்சும் உண்டு. நா. முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷின் சண்டை அமைப்பில் மொத்தம் ஆறு சண்டைக் காட்சிகள் படத்தில் இடம்பெறுகின்றன. கேமரா கே.எஸ். செல்வராஜ். உடுமலை, பொள்ளாச்சி, காரைக்குடி, மூணாறு ஹாங்காங், புக்கட் தீவு ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
"படத்தின் பெயர் 'சண்ட' என்றாலும், வன்முறையில்லாமலே பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறோம்" என்கிறார் ஷக்தி சிதம்பரம்.