டி. சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் நிறுவனம் இப்போது தயாரித்து வரும் படம் வாழ்த்துகள். தயாரிப்பில் உடன் கை கோர்த்துள்ள நிறுவனம் பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் லிட்.தம்பியின் தடாலடி வெற்றிக்குப் பின் சீமான் இயக்கும் படம்தான் வாழ்த்துகள். மாதவன், பாவனா பிரதான பாத்திரங்களை ஏற்க, கதையோ அன்பையும் பாசத்தையும் பிரமாதப்படுத்தி வலியுறுத்துகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் சீமான் பேசுகையில் பெற்றோர்களைக் காப்பாற்றும் பொறுப்பு பிள்ளைகளுக்கு உண்டு என்று சட்டம் போடும் அளவுக்கு நம்நாடு இருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகத்தையே தன் குடும்பமாக நினைத்தவன் தமிழன். ஆனால் இன்று தனித்தனி தீவாகிக் கிடக்கிறான். வியாபாரமாகி எந்திரமயமாகிப் போன வாழ்க்கையில் அன்புக்கும் பாசகத்திற்கும் இடமில்லாமல் போய்விட்டது. இப்படியே போனால் நாடு தாங்காது என்று எச்சரிக்கை மணியாக வரும் படம்தான் வாழ்த்துகள்.
பாவனா கோவை வேளாண்மைக் கல்லூரியில் படிக்கும் மாணவி. விவசாயம் என்பதையே கேவலமாகப் பார்க்கும் இக்காலத்தில் வேளாண்மைப் படிப்பை விரும்பிப் படிப்பவர். காரணம் அவரது அப்பா விவசாயி.
கணினி துறையிலுள்ள மாதவனுக்கும் பாவனாவுக்கும் இடையே காதல் பூக்கிறது. அவர்களிடையே உள்ள அனைத்து இடைவெளியையும் புரிதல் ஒன்றே இட்டு நிரப்புகிறது. பிணைக்கிறது. இணைக்கிறது.
காதலில் புரிந்து கொள்ளும் வாயப்பு அதிகம் உள்ளதால் காதலைத் தேர்தெடுத்ததாகக் கூறும் இயக்குநர், காதல் என்னும் சாதனத்தை வாகனமாக்கி அன்பு, குடும்பம், உறவுகள், நேசம், மனிதாபிமானம் போன்றவற்றை அழகாகக் காட்டியுள்ளதாக பெருமைப்படுகிறார்.
நாயகன், நாயகியாக மாதவன் பாவனா நடிக்க, வெங்கட்பிரபு, இளவரசு, கிருஷ்ணமூர்த்தி, தேவா, பிரண்ட்ஸ் விஜயலட்சுமி போன்றோருடன் கூத்துப்பட்டறை நிறுவனர் முத்துசாமி, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, பண்ரூட்டி எம்.எல்.ஏ.வேல் முருகன், நடிகர் பிரிதிவிராஜன் அம்மா மல்லிகா சுகுமாரன் போன்று திரைக்கு அறிமுகமாவோரும் உண்டு.
நாகரிகமான கதை, கண்ணியமாக காட்சிகள், இயல்பான நடிப்பு, காதைக் கூச வைக்காத பாடல்கள், விறுவிறுப்பான திரைக்கதை என படத்தை கெளரவப்படுத்தும் விதத்தில் இருக்கும்.
நா. முத்துக்குமார் எழுத மெல்லிழையாய் மெல்லிசை அமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. ஒளிப்பதிவு பி.எல். சஞ்சய், படத் தொகுப்பு பழனிவேல், கலை வீரசமர், சண்டைப்பயிற்சி, இந்தியன் பாஸ்கர், நடனம் கல்யாண் - தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை - என் மகேந்திரன், நிர்வாகத் தயாரிப்பு - நா. நாகேந்திரன் கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பு - சி. அருணா மகேஸ்வரி.
ஜனவரி 12ல் வர இருக்கிறது வாழ்த்துகள்