இந்த வருட தீபாவளி விருந்தாக விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோர் நடித்த படங்கள் உள்பட 6 படங்கள் வெளிவருகிறது. இதனால் அவர்களின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
படம் வெளிவர இன்னும் 4 நாட்களே உள்ளன. இதனால் ரசிகர்கள் இப்போதே தங்கள் அபிமான நடிகரகளின் படம் வெளிவரும் தியேட்டர்களில் பேனர், கொடி தோரணங்களை கட்ட ரெடியாகி வருகின்றனர்.
அஜீத், விக்ரம் ஆகியோரின் படங்கள் தீபாவளிக்கு வெளிவராததால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
தீபாவளிக்கு வெளிவரும் படங்கள் வருமாறு :
அழகிய தமிழ் மகன் : விஜய் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, நமீதா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். படத்தை பரதன் இயக்கியுள்ளார்.
ஒரே மாதிரியான தோற்றம் உள்ள இரண்டு இளைஞர்களை மையமாக கொண்ட கதை இது. மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாராகி இருக்கிறது.
வேல் : சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கும் முதல் படம் இது. அவருக்கு ஜோடியாக அசின் நடித்துள்ளார். இந்த படத்தை ஹரி இயக்கியுள்ளார்.
ஆயிரம் அரிவாள்களால் சாதிக்க முடியாததை, ஆறு அறிவால் சாதிக்கலாம் என்ற கருவை கொண்ட படம் இது. இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான பாசத்தையும், பகையையும் கதை சித்தரிக்கிறது.
பொல்லாதவன் : தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். சிலம்பரனுடன் குத்து படத்தில் நடித்த திவ்யா இந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். வெற்றி மாறன் இயக்கி இருக்கிறார்.
அப்பா மீது மிகுந்த பாசம் உள்ள ஒரு மகனின் கதை. அவனுடைய கனவு நிறைவேறுவதற்காக போராடுகிறான். இதற்காக, மூன்று மணி நேரம் மட்டும் பொல்லாதவனாக மாறுகிறான்.
கண்ணாமூச்சி ஏனடா : சத்யராஜ், ராதிகா, பிருதிவிராஜ், சந்தியா நடித்துள்ளனர். ப்ரியா இயக்கியுள்ளார்.
இளைஞர்களுக்கு ஏற்படும் காதல் பிரச்சினை, நடுத்தர வயதுள்ள ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்பட்டால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதே இந்த படத்தின் கதை. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலகலப்பாக கதை சொல்லப்பட்டு இருக்கிறது.
மச்சக்காரன் : திருட்டு பயலே படத்தில் நடித்துள்ள ஜீவன் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காம்னா நடித்துள்ளார். தமிழ்வாணன் இயக்கியுள்ளார்.
வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காத ஒரு இளைஞனும், எல்லாமே கிடைத்த ஒரு பெண்ணும் சந்தித்துக்கொள்ளும்போது ஏற்படும் பிரச்சினைகளை மையமாக கொண்ட கதை.
பழனியப்பா கல்லூரி : கல்லூரி மாணவர் - மாணவிகளின் மூன்று வருட வாழ்க்கையை சித்தரிக்கும் படம் இது.
இந்த படத்தில் புதுமுகங்கள் பிரதீப், மது சாலினி, அர்ஜுமன் மொகல், அட்சயா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். ஆர்.பவன் இயக்கியுள்ளார்.
விக்ரம் நடித்து, லிங்குசாமி இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள 'பீமா' படம் முடிவடைந்து விட்டதால், இந்த வருட தீபாவளிக்காவது திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் உள்ள சில பிரச்சினைகள் காரணமாக அது தீபாவளிக்கு வெளிவரவில்லை. தீபாவளிக்குப்பின் இரண்டு வாரங்கள் கழித்து திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள 'பில்லா' படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் படம் இன்னும் முடிவடையாத காரணத்தால், அந்த படத்தின் வெளியீட்டு தேதியும் தள்ளிப்போகிறது.