அஸின் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். அதுவும் பிராமணர் வீடுகளில் புழங்கும் வினோதத் தமிழில் வெளுத்து வாங்கி இருக்கிறாராம்.வட்டார வழக்கு ஆங்கிலம், ஜப்பானிய மொழிப் பயிற்சியாளர்கள் என ஒரு சிறிய குழுவுடன் இயங்கிக் கொண்டிருக்கிறார் கமல். தசாவதாரத்தின் 10 அவதாரங்களுக்கும் பத்து விதமான குரல் தோரணை.சிறப்பு ஒலிப்பதிவு அறிவுரையாளராக ஸ்ரீதர் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ப ஒலிப்பதிவு மைக்குகளை தேர்வு செய்கிறார்."
டிஜிட்டல் தந்திரங்களை பயன்படுத்தாமல் கமல் செய்திருக்கும் அசாத்தியமான குரல் குணாதிசயங்களை சற்றும் வளம் குறையாமல் ரசிகர்களிடம் சேர்ப்பதே மிக துல்லியமான சிரமமான வேலை என்கிறார் ஸ்ரீதர்.முதல் பகுதியில் வரும் 10 ஆயிரம் பக்தர்கள் கொண்ட காட்சிக்கான ஒலிப்பதிவை நேரு ஸ்டேடியத்தில் 5,000 பேரை வைத்து கள ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள். 100 பேரை வைத்து அதை டிஜிட்டல் முறையில் 1000-மாக 10,000-மாக மாற்ற முடியும். இருந்தாலும் நிஜத்துக்கு நிகரானது இல்லை. சத்யமேவ ஜெயதே.மூன்று பெரிய நிறுவனங்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகளை மும்முரமாய் செய்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு இடத்திலும் கிட்டத்தட்ட நூறு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் வேலை செய்கிறார்கள்.
தமிழக முதல்வர் கலைஞர் 10 பாத்திரங்களையும் பார்த்து ரசித்ததோடல்லாமல், அப்போது ஆஸ்திரேலியாவில் இருந்த கமலை தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார்.
சந்தானபாரதி, வாசு, ஆர். சுந்தர்ராஜன், ஈரோடு சவுந்தர், ரமேஷ்கண்ணா என பல இயக்குனர்கள் நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் என்ன வேடம் போடப்போகிறார் என்று ஆவலாய் எதிர்பார்த்திருக்கிறார்கள் அவரின் உதவி இயக்குனர்கள் குழு.
படத்தின் நலனை மட்டுமே கருத்தாகக் கொண்டு நம்பிக்கை தளராமல், பதற்றம் கொள்ளாமல் ராஜ்கமல் நிறுவனத்திற்குப் பின் தனக்கு மலைபோல் துணையாய் நின்ற ஒரே நிறுவனம் ஆஸ்கார் பிலிம்ஸ் என்று புகழ்ந்து யாருக்கும் கொடுக்காத ஆஸ்கார் விருது கொடுக்கிறார் கமல்.
தமிழ் படங்களிலும், கமல் படங்களில் கூட வராத ஒரு உச்சக்கட்ட சண்டைக்காட்சியை வடிவமைத்திருக்கிறார் ஜூப். இந்த சண்டைக்காட்சிக்காகவே அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஜூப், இந்தக் காட்சியை எடுக்க 20 நாட்கள் ஆகியது. கமலே கமலுடன் மோதுவதால் இத்தனை நாட்கள்.அமெரிக்கர்கள் ஆபத்தான காட்சிகளை செய்தாலும் அதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் பாதுகாப்பு அலாதியானது. கமல் செய்திருக்கும் சில வயிறு கலக்கும் ஸ்டண்டுகள் கிராபிக்ஸ் உதவியுடன் செய்யப்பட்டவை அல்ல. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து அமெரிக்கா, மலேசியா மற்றும் சிதம்பரத்தில் உள்ள பிச்சாவரம் பகுதியில் நடைபெற்றது. மூன்றுகோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான அரங்கங்கள் அமைத்து சென்னையில் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இதற்கான அரங்கங்கள் அமைக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து கலை இயக்குனர் தோட்டாதரணி ஈடுபட்டுள்ளார்.உலகத்தரத்திற்கு சவால் விடும் வகையில் அனைத்து தொழில்நுட்பத்திலும் முதன்மையாகவும், உலக நடிகர்கள் வியக்கும் வகையில் உலகநாயகனின் நடிப்பும் சேர்ந்த கலவையாகவும் உருவாகி வருகிறது 'தசாவதாரம்'.இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவர உள்ளது.
கமலஹாசனுடன், அஸின், நெப்போலியன், மல்லிகா ஷெராவத், நாகேஷ், கே.ஆர்.விஜயா, சந்தானபாரதி, ஜெயப்ரதா, எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, பி.வாசு, ஆர்.சுந்தர்ராஜன், ரமேஷ்கண்ணா, ஈரோடு சவுந்தர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
ஒளிப்பதிவு: ரவிவர்மன்
இசை: ஹிமேஷ் ரேஷ்மையா
கலை: தோட்டாதரணி, சமீர் சந்தா, எம்.பிரபாகர்
எடிட்டிங்: கே. தணிகாசலம்
பாடல்கள்: வாலி, வைரமுத்து
சண்டைப்பயிற்சி: தியாகராஜன், கனல் கண்ணன், ஜூப் கடானா, மேடோஸ் (US), ஆண்டி டிக்ஸன் (US)
நடனம்: பிருந்தா, பிரசன்னா
கதை, திரைக்கதை, வசனம்: கமல்ஹாசன்
டைரக்ஷன்: கே.எஸ்.ரவிக்குமார்
தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன்