ஜெய்மாதாஜி சினி கம்பைன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஏ.வெங்கடேஷ் மிகப் பிரமாண்டமான படமாகத் தயாரித்து வரும் படம் - வம்புசண்டை. இந்தப் படத்தில் சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இதுவரை ஏற்று நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். சத்யராஜுடன் இணைந்து தெலுங்குப் பட கதாநாயகன் உதய்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பல வெற்றிப் படங்களை இயக்கிய ராஜ்கபூர் திரைக்கதை, வசனம் எழுதி வம்புசண்டை படத்தை இயக்குகிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தில் கதாநாயகியாக தியா நடிக்கிறார். உதய்கிரணுக்கு ஜோடியாக நடிக்கும் தியா, பாடல் காட்சிகளில் படுகவர்ச்சியாய் நடித்து கலக்கி இருக்கிறார்.
மற்றும் ரியாஸ்கான், பெப்ஸி விஜயன், ரமேஷ் கண்ணா, மனோபாலா, சந்திரமுகி, ஷகீலா, லிவிங்ஸ்டன், சபிதா ஆனந்த், இளவரசு, பாலுஆனந்த், செம்புலி ஜெகன், ராஜன் பி தேவ், கீர்த்தனா இவர்களுடன் இயக்குனர் ராஜ்கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தவிர நைனா என்ற மும்பை அழகி ஒரேயொரு பாடலுக்கு கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார். இந்தப் பாடல் காட்சி பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டிருக்கிறது.
வம்புசண்டை படத்தின் முன்பாதியில் தான் யார் என்றே தெரியாத அளவுக்கு, தன் கடந்த காலத்தை மறந்தவராக நடித்திருக்கும் சத்யராஜ், படத்தின் பின்பாதியில் எடுக்கும் விஸ்வரூபம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். அந்தளவுக்கு அவரது கதாபாத்திரத்தை அதிரடியாய் அமைத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்கபூர்.
பல படங்களில் பல கெட்டப்புகளில் நடித்திருக்கும் சத்யராஜ், வம்புசண்டை படத்தில் முதல் முறையாக கதகளி நடனக்கலைஞராக நடித்திருக்கிறார். கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளி நடனத்தை சத்யராஜ் ஆடுவதோடு, அதே கெட்டப்பில் ஒரு சண்டைக்காட்சியிலும் நடித்திருக்கிறார்.
சத்யராஜுக்கு மேக்கப் போடுவதற்காக கேரளாவில் உள்ள ஒத்தப்பாலம் என்ற ஊரிலிருந்து நான்கு கதகளி நடனக்கலைஞர்கள் ஹைதராபாத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள். கதகளி நடனக்கலைஞர்கள் போடும் மேக்கப்பை போடுவதற்கு சுமார் நான்கு மணி நேரங்கள் ஆகும் என்பதால் ஒன்பது மணி படப்பிடிப்புக்கு, அதிகாலை மூன்றரை மணிக்கே சத்யராஜுக்கு மேக்கப் போட ஆரம்பிப்பார்கள். இந்த மேக்கப்பை போடும்போது அசையாமல் படுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மிக சிரமப்பட்டு சத்யராஜ் நடித்த காட்சிகள் நான்கு நாட்கள் படமாக்கப்பட்டன. கதகளி கலைஞர் கெட்டப்பிலேயே சத்யராஜ், வில்லன்களுடன் சண்டையிடும் காட்சியும் படமாக்கப்பட்டன. இக்காட்சி வம்புசண்டை படத்தின் ஹைலட்டாக இருக்கும்.
உதய்கிரணின் கதாபாத்திரமும் வம்புசண்டை படத்தில் பிரம்மாதமாக அமைந்திருக்கிறது. பிரச்சினைகளைத் தேடிப் போகாத உதய்கிரணை, தேவையில்லாத பல பிரச்சினைகள் தேடி வருகின்றன. அப்படி தன்னைத் தேடி வந்த ஒரு பிரச்சினையை அவர் எதிர்கொள்ள விழையும்போது ஏற்படும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.
பாடல், சண்டைக்காட்சிகளில் மட்டுமின்றி படம் முழுக்கவே தன் முழுத் திறமையைக் காட்டி நடித்திருக்கிறார் உதய்கிரண்.
பெப்ஸி விஜயன், ரியாஸ்கான் இருவருக்கும் வம்புசண்டை படத்தில் குறிப்பிடத்தக்க வேடம் அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை மிக அழகாகப் பயன்படுத்திக் கொண்டு, இருவருமே தங்களின் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
வம்புசண்டை படம் சென்னை, ஹைதராபாத், கேரளாவில் உள்ள ஆழப்புழை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது.
உதய்கிரண், தியா நடித்த மற்றொரு பாடல் காட்சி சென்னையில் மிகப்பெரிய செட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் காட்சியிலும் ஏகப்பட்ட நடனக்கலைஞர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
சத்யராஜ், உதய்கிரண் நடித்த ஒரு பாடல் காட்சி கொச்சியில் படமாக்கப்பட்டது. இந்தப் பாடல் காட்சி முழுக்க முழுக்க தண்ணீரிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. தவிர இப்பாடல் காட்சிக்காக கேரளாவில் மிகப் பிரபலமான படகுப் போட்டியும் படமாக்கப்பட்டிருக்கிறது.
வம்புசண்டை படத்தில் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான அம்சமாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது இப்படத்திற்கு ஹைலைட்டான விஷயமாகவும் அமைந்திருக்கிறது.
வம்புசண்டை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாகவிருக்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு: சுரேஷ்தேவன்
இசை: இமான்
பாடல்கள்: பா.விஜய், தபூ சங்கர்
கலை: சங்கர்
நடனம்: சுந்தரம், ராபர்ட், காதல் கந்தாஸ்
சண்டை: தளபதி தினேஷ், அனல் அரசு
படத்தொகுப்பு: வி.டி.விஜயன்
தயாரிப்பு நிர்வாகம்: சேரை ராஜு
தயாரிப்பு மேற்பார்வை: கே.பாலகுமார்
கதை: கே.செல்வபாரதி
இணை இயக்கம்: ஹிமேஷ் பாலா, பிரேம் நிஸார்
தயாரிப்பு : ஏ.வெங்கடேஷ்
திரைக்கதை, வசனம், இயக்கம்: ராஜ்கபூர்