காமெடியும் ஆக்ஷனும் கலந்த கதாபாத்திரத்தில் மருதமலை அர்ஜுன்
அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் படம் `மருதமலை'. இதில் இவருக்கு ஜோடியாக நிலா நடிக்கிறார். வழக்கமான அர்ஜுன் படம்தான் என்றாலும் ஆக்ஷனில் பின்னியெடுத்திருக்கிறாராம். இதில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கும் டானுக்கும் இடையே நடக்கின்ற மோதல்தான் கதையாம். டானாக மலையாள நடிகர் லால் நடிக்கிறார். படத்தின் முதல் பாதியை காமெடியாகவும் இரண்டாவது பாதியை ஆக்ஷனாகவும் எடுத்திருக்கிறார்களாம். சுராஜ் என்பவர் இயக்குகிறார்.
தமன்னா இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். தவியா என்பவர் கல்லூரி பெண்ணாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். காதல் தண்டபாணி, ராஜேஷ், சண்முகராஜன், போஸ் வெங்கட், கலைராணி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முமைத்கான் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார்.இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதற்காக அர்ஜுன் எடையை குறைத்து கச்சிதமாக இருக்கிறார். அதோடு அர்ஜுனோடு வடிவேலு கூட்டணி சேர்ந்து காமெடியில் கலக்கி இருக்கிறாராம். ஏட்டு ஏகாம்பரமாக வரும் வடிவேலு தங்கப்பதக்கம் சிவாஜியைப் போன்று கடமையில் கண்ணாக இருக்க வேண்டும் என்று நினைப்பாராம். ஆனால் விதிவசத்தால் அதை கோட்டை விட்டு தேமேயென்று அவர் முழிக்கும் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்குமாம்.தூம் 2 படத்தில் பணியாற்றிய அல் அமீன் மற்றும் பவர் பாஸ்ட் கருப்பையா போன்றோர் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கின்றனர். நடனத்தை ராஜுசுந்தரமும் கலை தோட்டாதரணியும் கவனிக்கின்றனர். படத்திற்கு இசையமைத்திருப்பவர் இமான். வைத்தி என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் படத்தை தயாரிக்கிறார்.