ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து டைட்டில் வைத்துக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் அதென்ன மஞ்சள் வெயில் என படத்தின் தலைப்பு!?
இப்படி ஒரு ஆச்சர்யத்தோடு விசாரித்தால் பின்னணியில் பிரமாதமான காரணம் சொல்கிறார்கள். அதாவது திறந்து கிடக்கும் மேனியின் மீது மாலை நேரத்து மஞ்சள் வெயில் பட்டால் எவ்வளவு ஆரோக்கியமானதோ, அதேபோல் தான் காதல் என்று விளக்கம் தருகிறார்கள்.
காதலை எந்தநேரத்தில் எப்படி அவசியமாக்கிக் கொள்ள வேண்டுமோ... அதை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதை சொல்வதுதான் மஞ்சள் வெயிலின் கதை. உலகத்திலேயே அள்ள அள்ளக் குறையாதது காதல் மட்டும் தான். தமிழ் சினிமாவில் கடந்த 75 ஆண்டுகளில் வெளிவராத காதலா?
என்றாலும் இந்தப் படத்தில் வரும் காதல், வழக்கமான கதை என்கிற வட்டத்துக்குள் சிக்காத வேற மாதிரியான காதல். களம் புதுசு என்று படம் பற்றி நிறைய சொல்கிறார் படத்தின் இயக்குனர் ராஜா. இவர் இயக்குனர் கே.எஸ்.அதியமானிடம் உதவியாளராக இருந்தவர். இந்தப் படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். ஹாசினி சினிமாஸ் சார்பில் சையத் தயாரிக்கிறார். ஹீரோ பிரசன்னா. ஹீரோயினாக காதல் சந்தியா நடிக்கிறார்.
இவர்களைத் தவிர விவேக், நாசர், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடிக்கிறார்கள். சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கி தொடர்ந்து ஊட்டியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.