தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் இந்த நவீன யுகத்தில், சிறுவர்களின் உலகில் பெற்றோர்களின் இடம் காலியாகவே உள்ளது. பரிசுகள் கொண்டோ, தண்டனைகளாலோ அந்த இடத்தை நிறைத்துவிட பெற்றோர்கள் முயல்கின்றனர். புறக்கணிப்பின் ஒரு பகுதியான பரிசுகளும், தண்டனைகளும் அந்த வெற்றிடத்தை மேலும் அதிகமாக்குவதை பெற்றோர்கள் உணர்வதில்லை.
இந்த எளிய உண்மையை அதைவிட எளிய வடிவில் திரையில் கொண்டுவந்தவர், பிரெஞ்ச் புதிய அலை சினிமா இயக்குனர்களில் ஒருவரான பிரான்கோஸ் த்ரூபோ (Francois Truffaut). படத்தின் பெயர் '400 Blows'.
1959ல் வெளியான இத்திரைப்படம் த்ரூபோவின் வாழ்க்கையை பிரதிபலித்தது எனலாம். 1932 ஆம் வருடம் பாரீசில் பிறந்தவர் த்ரூபோ. இவரது அம்மாவின் இரண்டாவது கணவர் இவரை ஏற்றுக்கொண்டாலும், பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார்.
நானூறு உதைகள் திரைப்படத்தில் வரும் சிறுவன் அந்த்யோனுக்கும் தகப்பன் இல்லை. தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவருடன் வாழ்கிறான். அந்த்யோனின் தாய் நேரம் கழித்து வரும்போது அவனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு, தாயின் இரண்டாவது கணவன் மீது விழுகிறது. இதனை முன்னிட்டு தனது மனைவியுடன் சண்டையிடுகிறான் அந்த கணவன்.
அந்த்யோவின் வீடு இப்படியென்றால், பள்ளிக்கூடமோ, தண்டனைகள் மட்டும் அளிக்கும் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான அமைப்பு. இந்த இரு பெரும் துயரங்களுக்கு நடுவில் திசைமாறுகறிது அந்த்யோனின் வாழ்க்கை.
உலகம் ஒரு அலுவலகமாக சுருங்கிவிட்டது என்றார் காஃப்கா. குழந்தைகளின் உலகம் இன்னும் மோசம். பெற்றோர்களின் ஆதிக்கமும் பள்ளிக் கூடங்களின் அதிகாரமும் அதனை சிறைக் கூடமாக மாற்றிவிட்டன. பிரச்சாரமோ, கண்ணீர் துளிகளோ எதுவுமின்றி த்ரூபோ இதனை துல்லியமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.
அத்துடன், தண்டனைகள் குற்றவாளிகளை திருத்துவதைவிட, குற்றங்களையும் குற்றவாளிகளையும் அதிகரிக்கவே துணைபோகின்றன என்பதையும் த்ரூபோவின் திரைப்படம் வெளிச்சமிட்டு காட்டுகிறது.
ஒரு நாள் காலை நேரத்தில் அவசர அவசரமாக பள்ளிக்குச் செல்கிறான் அந்த்யோன். வழியில் எதிர்படும் நண்பன் ரெனே, பள்ளிக்கு நேரமாகிவிட்டது. இனி சென்றால் வாத்தியார் உள்ளேயா விடப்போகிறார் என்று, அந்த்யோனை திரையரங்குக்கு அழைத்துச் செல்கிறான்.
இன்னொரு சமயம், ஆசிரியரின் தண்டனைக்குப் பயந்து அம்மா இறந்துவிட்டதாக கூறுகிறான். அது சிறிது நேரத்திலேயே பொய் என்று தெரிந்துவிடுகிறது. அவனது வளர்ப்பு தந்தை கன்னத்தில் அறைந்து சாயந்திரம் வா பார்த்துக் கொள்கிறேன் என்கிறான். அன்று முதல் முதலாக வீட்டிற்குச் செல்லாமல் தெருவில் தூங்குகிறான் அந்த்யோன். தண்டனையும் அது தரும் பயமும் சிறுவர்களை யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாதவர்களாக்கி, குறுக்கு வழியை திறந்துவிடுகின்றன. அந்த்யோன் புரியும் அனைத்து தவறுகளின் ஊற்றுக்கண்ணாக இருப்பதும் பெற்றோர்களின் புறக்கணிப்பும், தண்டனை குறித்த பயமும்தான்.
சிறுவர்களின் உலகம் இறுக்கமான அதிகாரங்களாலும், புரிந்துகொள்ளப்படாத புறக்கணிப்பாலும் எவ்வாறு சிதைவுறுகிறது என்பதை நேர்மையாக காட்சிப்படுத்திய திரைப்படம் என்று த்ரூபோவின் நானூறு உதைகளை கூறலாம்.
பிரான்சில் 1951ல் வெளிவரத் துவங்கிய காகியேது சினிமா என்ற பத்திரிக்கையில் சினிமா விமர்சனங்கள் எழுதிவந்த த்ரூபோ தனது கட்டுரைகள் மூலம் எப்படியொரு தாக்கத்தை உருவாக்கினாரோ, அதேபோல் திரைப்படங்கள் வாயிலாகவும் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
நானூறு உதைகளில் அவர் சிம்பதியை உருவாக்கவில்லை. யார் மீது தவறு என்று ஒருவரையும் சுட்டிக்காட்டவில்லை. இயல்பான நிகழ்வுகளின் மூலம் சொல்ல வேண்டியதை ரசிகர்களிடம் உணர வைத்துவிடுகிறார்.
பள்ளி அறையில் மாணவர்களின் குறும்புகளை அவர் படமாக்கியிருக்கும் விதம் அலாதியானது. செயற்கையின் நிழலே படராத காட்சிகள் அவை. ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி பாயாமல், செயற்கையாக உணர்ச்சிகளை தட்டியெழுப்பாமல் இயல்பான தன்னெழுச்சியை உருவாக்கும் நவீன சினிமாக்களில் நானூறு உதைகளுக்கு என்றும் இடம் உண்டு.
படத்தில் ஆந்த்யோன் தனது வளர்ப்பு தந்தையின் அலுவலகத்திலிருந்து டைப்ரைட்டர் ஒன்றை திருடுகிறான். திருடும் போது மாட்டிக் கொள்ளாதவன், அதனை திருப்பி வைக்கும்போது மாட்டிக் கொள்கிறான். சந்தர்ப்பங்களே ஒருவனை திருடாக்குகின்றன. ஆனால், திருப்பி வைக்கும் குணம் தனிப்பட்ட ஒருவரின் இயல்பு. அந்த திருப்பி வைக்கும் குணத்தை தவறவிடாதவர்கள் தவறவிடக்கூடாத படம் இது. ஒவ்வொரு பெற்றோரும், பள்ளிக் கூடங்களும் அந்த்யோனின் உலகை புரிந்துகொண்டால் தண்டனைகளுக்கான தேவையே இருக்காது.
காரணம், கடுமையான தண்டனைகள் திறமையான குற்றவாளிகளையே உருவாக்குகின்றன!