உலக நாடுகளின் எதிர்ப்பையும், வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டு, தனிமைப்பட்டுக் கிடந்த தென் ஆப்ரிக்காவில், பெரும்பான்மை கருப்பின மக்களை அன்றைய போத்தா இன வெறி அரசு எப்படியெல்லாம் ஒடுக்கியது என்பதை மிக தத்ரூபமாக சித்தரித்தப் படம் க்ரை ஃபிரீடம் (சுதந்திரத்தின் அழுகை).புகழ்பெற்ற இயக்குனர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ இயக்கிய இப்படம் 3 ஆஸ்கர் பரிசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 11 சர்வதேச விருதுகளையும் பெற்ற இத்திரைப்படம்தான் தென் ஆப்ரிக்க அரசின் இன வெறிக் கொடுமைகளை உலகத்தின் பார்வைக்கு கொண்டுவந்து அதிரவைத்தது.1987
ஆம் ஆண்டு வெளியான இப்படம், தென் ஆப்ரிக்காவின் வெள்ளை பத்திரிக்கையாளன் ஒருவனுக்கும், கறுப்பின விடுதலைப் போராளி ஒருவனுக்கும் இடையிலான ஆழ்ந்த நட்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.
சிறுபான்மை வெள்ளையின மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைவது கூட குற்றம் என்ற அளவிற்கு இன வெறி அராஜகம் தலைவிரித்தாடுகையில், “எங்கள் மண்ணில் எங்கும் சென்று வர எனக்கு சுதந்திரமுள்ளது” என்று கூறும் அந்த கறுப்பின போராளியின் வார்த்தைகள், திரைப்படம் பார்க்கின்றோம் என்கிற எண்ணத்தை மறக்கடிக்கடித்தன.
சம உரிமை கோரிப் போராடிய மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்வது, ஏதோ பொழுது போக்கு என்பது போல கறுப்பின சிறுவர்களை சில வெள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடும் காட்சிகள் நெஞ்சத்தைப் பதறவைத்தன.
தனது நண்பனும், கறுப்பின போராளியுமான ஸ்டீவ் பீக்கோ காவல் துறையினரின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது சித்ரவதை செய்யப்பட்டு சாகடிப்பட்டதை தென் ஆப்ரிக்க பத்திரிக்கையாளரான டொனால்ட் வுட் புலனாய்வு செய்து வெளிக்கொணர முயற்சிக்கும்போது அந்நாட்டு காவல் துறையினரால் மிரட்டப்படுகிறார். அவரது குடும்பமும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் வேறு வழியின்றி ரகசியமாக நாட்டை விட்டு வெளியேறும் அந்தப் பத்திரிக்கையாளர், தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக உலகத்தின் பார்வைக்கு கொண்டு வருகிறார். அவர் தென் ஆப்ரிக்காவை விட்டுத் தப்பித்து, அந்நாட்டின் எல்லைப் பகுதிக்குள்ளேயே உள்ள மற்றொரு நாடான லிசாத்தோவிற்கு தப்பி வருவதே கிளைமாக்ஸ். ஒரே நாட்டில் வாழும் இரண்டு இனங்களின் மிக வித்தியாசப்பட்ட வாழ்கையை, சிந்தனைப் போக்கை சிறப்பாக காட்டினார் ரிச்சர்ட் ஆட்டன்பரோ. இன வெறிக் கொள்கையை வெள்ளையின மக்கள் எவ்வளவு சாதாரணமாக, அது நியாயமானது என்பதுபோல ஏற்றுக் கொண்ட மனப்பாங்கை ஆட்டன்பரோ சிறப்பாக்க் காட்டியிருந்தார்.
திரையுலக வரலாற்றில் ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் தி சாரியட்ஸ் ஆஃப் பயர், பாசேஜ் டூ இந்தியா, காந்தி ஆகியவற்றின் வரிசையில் இடம்பெற்ற இந்தத் திரைப்படம் இன்றைக்கும் வீடியோ லைப்ர்ரிகளில் நிச்சயம் இருக்கும். வாங்கிப் பாருங்கள்.