Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரோமன் ஹாலிடே

Advertiesment
ரோமன் ஹாலிடே
, செவ்வாய், 4 மார்ச் 2008 (12:47 IST)
webdunia photoWD
பெல்ஜியத்தில் பிறந்து ஹாலிவுட்டை தனது அழகால் ஆட்சி செய்த ஆந்த்ரே ஹெப்பர்னின் ரோமன் ஹாலிடே படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? தனது குழந்தமை தவழும் அழகுடன் ரோம் வீதிகளில் ஹெப்பர்ன் நடந்து செல்லும் அந்த கறுப்பு வெள்ளை காவியத்தை ஒரு முறையாவது....

வுதரிங் ஹைட்ஸ், தி பெஸ்ட் இயர்ஸ் ஆஃப் அவர் லைவ்ஸ் போன்ற சிறந்தப் படங்களை இயக்கிவிட்டு 1953ல் இயக்குநர் வில்லியம் வைய்லர் ரோமன் ஹாலிடே படத்தை தயாரித்து இயக்கினார்.

படம் வெளியாகி ஐம்பத்தைந்து ஆண்டுகள் கழிந்து பிறகும், ஹெப்பர்ன் புற்றுநோயால் தனது 64வது வயதில் இறந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்த பின்பும், மெருகு குலையாத அழகுடன், வசந்தகாலத்தின் உல்லாசத்துடன் நம்மை ஆகர்ஷிக்கிறது ரோமன் ஹாலிடே.

ஐரோப்பாவிலுள்ள ஒரு நாட்டின் இளவரசி ஆன். ஒரு சந்தர்ப்பத்தில் கையில் சொற்ப பணத்துடன் ஆன் ரோம் நகரின் சந்தடிமிகுந்த வீதியில் நடக்க நேர்கிறது. உடம்பை உரசிச் செல்லும் மனிதர்களும், பேரம் பேசும் வியாபாரிகளும், ஓடி விளையாடும் சிறுவர்களும் ஆன்னுக்க புது அனுபவம். இந்த அனுபவத்திறக்க ஆன் மேற்கொண்ட துணிச்சல் மிகப் பெரியது. ரோமின் அரசு விருந்தினராக அரசு மாளிகையில் தங்கியிருந்த தனது உதவியாளர்கள், ஜெனரல்கள், பாதுகாப்பு வீரர்கள் அனைவரையும் ஏமாற்றி முதல் நாள் நள்ளிரவில்தான் அரசு மாளிகையையை விட்டு வெளியேறியிருந்தார். தூக்க மருந்தின் மயக்கத்தில் அந்த இளவரசி ரோம் தெருவோரம் படுத்துப் புரண்டு கொண்டிருந்தார். அவரது வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தது... "ஐ யாம் ஸோ ஹேப்பி!".

படம் தொடங்கிய சில நிமிடங்களில் ஆன்னின் `ஹேப்பி' நம்மையும் பற்றிக் கொள்கிறது. லண்டன், ஆம்ஸ்டர்டாம், பாரிஸ் என தொடரும் ஆன்னின் அரசு முறைப் பயணத்தைச் சொல்லும் அறிவிப்புடன் படம் தொடங்ககிறது. நீண்ட பயணத்தில் இளவரசியின் களைப்போ, சிறு சோர்வோ இல்லை என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வரும் காட்சியில் ரோமின் உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்தும் முக்கியமான நிகழ்வில், ஆன் தனது முனை குறுகலான குதிகால் செருப்பை கழற்றி, விரல்களை ஒருவரும் அறியாத வகையில் அசைத்து ஆசுவாசப்படுகிறார். வைய்லரின் இந்த நகைச்சுவை படம் முழுவதும் தொடர்கிறது.

ஆன் 20 வயதே நிரம்பிய இளம் பெண். அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பொறுப்பு தங்கக் கூண்டாக அவரை சிறைப்படுத்தியிருக்கிறது. ஆன்னின் ஒவ்வொரு மணித்துளியும் ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் அதன்படியே நடக்க வேண்டும். உண்ண வேண்டும், உடுத்த வேண்டும். எனக்கு இது பிடிக்கவில்லை என்று இரவு படுக்கையில் கத்துகிறார் ஆன். ஆனால் அவர் ஓர் இளவரசி. அவரது கடமையை செய்தாக வேண்டும். சாதாரண மனிதர்கள்போல் முரண்டுபிடிக்க அனுமதியில்லை. தூக்கத்திற்கான ஊசி போட்டு அவரை சாந்தப்படுத்துகிறார்கள்.

அன்றிரவு அரசு மாளிக¨யை விட்டு ஆன் வெளியேறுகிறார். அவரை தெருவில் கண்டுபிடிப்பது நிருபரான ஜோ பிராட்லி. வைய்லர் ஜோ கதாபாத்திரத்தை பிராக்டிகல் மேன், ஆனால் ஜென்டில்மேன் என்ற இரு துருவங்களுடன் உருவாக்கியிருக்கிறார். தெருவில் கண்டுபிடிக்கும் ஆன்னை இரவில் தனித்துவிட ஜோவுக்கு விருப்பமில்லை. அதே நேரம் தனது சிறிய அபார்ட்மென்டிற்கு அழைத்துச் செல்லவும் மனமில்லை. டாக்சி டிரைவரிடம் சிறிது பணம் கொடுத்து, ஆன்னுக்கு சுய நினைவு திரும்பியதும் அவரை அவரது வீட்டில் சேர்த்து விடுமாறு கூறுகிறார். அதே போல் மறுநாள், தனது அபார்ட்மென்ட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் இளம்பெண் ஆன் என்பது தெரிந்ததும், பத்திரிக்கை ஆசிரியனிடம் ஆன்னின் பிரத்யேக கட்டுரைக்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என்று பேரம் பேசுகிறார். படத்தின் இறுதியில் ஆன்னின் புகைப்படங்களை பிரசுரிக்காமல் தவிர்ப்பது வரை ஜோவின் பிராக்டிகல் மேன் - ஜென்டில்மேன் தடுமாற்றத்தை நுட்பமாக கையாண்டிருக்கிறார் வைய்லர்.


webdunia
webdunia photoWD
மறுநாள் கண்விழிக்கும் ஆன், தனது பெயர் ஆன்யா என்றும், தானொரு மாணவி என்றும் ஜோவிடம் கூறுகிறார். ஜோ ஆன்னுக்கு ரோமை சுற்றிக் காட்டுகிறார். நடைபாதை கடையில் ஹாம்பெய்ன் வாங்கித் தருகிறார். இருவரும் ஒன்றாக ஸ்கூட்டரில் பயணக்கிறார்கள். இரவு தனக்கு முடிவெட்டிய பார்பருடன் நடனமாடுகிறார் ஆன்.

இளவரசி எனும் தங்கக் கூண்டிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் தனக்கு ஒரு போதும் வாய்க்காத எளிய மனிதர்களின் தினசரி கொண்டாட்டங்களில் அந்த இளவரசி தன்னை கரைத்துக் கொள்கிறார். ஜோ தனது நண்பனின் உதவியுடன் இவையனைத்தையும் புகைப்படம் எடுத்துக் கொள்வது ஆன்னுக்குத் தெரியாது.

ஜோ, ஆன் இருவருக்குள்ளும் காதல் மொட்டவிழும் தருணங்கள் அருமையானவை. ஆன்னுக்கு தானொரு இளவரசி என்பதும், தனது கடமைகள் என்ன என்பதும், ஒரு போதும் ஜோ போன்றதொரு எளிய மனிதனை காதலிக்க தனது அதிகாரப் பின்னணி அனுமதிக்காது என்பதும் தெரியும். நிருபரான ஜோவுக்கும் இது தெரியும். தான் யார் என்ற விவரம் ஜோவுக்கு தெரியாது என்ற நம்பிக்கையுடன், தன்னை பின் தொடரக் கூடாது என்ற வேண்டுகோளுடன் விடை பெறுகிறார் ஆன். எப்படி நள்ளிரவில் அரசு மாளிகையிலிருந்து வெளியேறினாரோ, அதேப்போன்று மீண்டும் தனது இறுக்கமான இளவரசி கூண்டுக்கு ஆன் திரும்புகிறார். காதலின் வாசல்வரை சென்று திரும்பும் இந்த உறவு கனத்த பாரமாக பார்வயாளன் மனதில் தங்குகிறது.

ஜோவாக நடித்திருக்கும் கிரிகோரி பெக்கும், புகைப்படக் கலைஞராக வரும் எடி ஆல்பர்ட்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். டால்டன் ட்ரம்போவின் கதையும், இயான் மெக்லேலன், ஜான் டிக்டனின் திரைக்கதையும் பழுதில்லாதவை. வைய்லரின் இயக்கமும், ஜார்ஜியஸ் ஐரிக்கின் இசையும் அப்படியே. ஆனால், இவை அனைத்தையும் ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது ஹெப்பரினனின் அழகும், நடிப்பும். குழந்தையாக அடம்பிடிப்பது, அந்நியனின் அறையில் தனித்திருப்பதை உணர்ந்து பதட்டமடைவது, ரோம் வீதியில் சிறுமியின் உற்சாகத்துடன் சுற்றி அலைவது, காதலில் மெய்மறப்பது என ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு அசைவிலும் பிரமாதப்படுத்துகிறார் ஹெப்பர்ன். அவரது களங்கமில்லா முகமும், பளிங்கு கண்களும், புன்னகைக்கும் உதடுகளும்... ஆம், ஹெப்பர்ன் ஒரு இளவரசியேதான்.

இறுதிக் காட்சியில் அரசு குடும்பத்து மிடுக்குடன் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் ஆன். அங்கு ஜோவையும் அவரது நண்பனையும் பார்க்கிறார். எந்த நகரம் பிடித்திருக்கிறது என்ற கேள்விக்கு, எல்லா நகரத்திற்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்த பதிலை ஒப்பிப்பவர் திடீரென்று, "ரோம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் வாழ்நாள் முழுக்க அதை மறக்க மாட்டேன்" என்கிறார்.

சந்திப்பு முடிவடைகிறது. கடைசியாக ஆன்னும், ஜோவும் பார்த்துக் கொள்கிறார்கள். இனி ஒருபோதும் அவர்கள் சந்திக்கப் போவதில்லை. ஆன்னும், பத்திரிக்கையாளர்களும் நீங்கிவிட்ட அந்த பிரம்மாண்டமான அறையில் இப்போது ஜோ மட்டும். ஜோவின் அந்த தனிமையிலும், வெறுமையிலும் நம்மை நிறுத்திவிட்டு படத்தை முடீத்துக் கொள்கிறார் வைய்லர். மீண்டும் அந்த இளவரசியைக் காண, அவருடன் ரோம் வீதிகளில் அலைய மனசு ஆசை கொள்கிறது. ஐம்பத்தைந்து ஆண்டுகள் என்ன, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், அந்த ஆசை வற்றாத சுனையாக மனதில் கசிந்து கொண்டேதான் இருக்கும்.


Share this Story:

Follow Webdunia tamil