போனி டெயில், செழுமையான தாடி, சிநேகமான பார்வை. புல்லட்டில் வந்திறங்கியவர் நம்மை புரிந்து கொண்டு, ஒரு சாயா குடிச்சிட்டு பேசலாமே என்றார் புன்னகையுடன். மலையாளம் துலங்கும் தமிழ்ப் பேச்சு. இயல்பாக ஆர்ப்பாட்டமில்லாத கலை அமைதியுடன் இருந்தார், 2007 ம் ஆண்டுக்கான கேரள அரசின் சிறந்த கலை இயக்குனர் விருது பெற்ற ராஜசேகரன்.ராஜசேகரன் அடிப்படையில் ஒரு ஓவியர். சின்ன வயது முதல் தூரிகை மீது காதல். ஆனால், டிகிரி முடிக்கிற வரை என்டிஏ டிஃபன்ஸ் மாதிரியான வேலைகளே கனவாயிருந்தது என்கிறார் சிரித்துக் கொண்டே. வீடும் ஒரு காரணம். பேனுக்கு கீழ் மகன் வேலை பார்க்க வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை.அடூர் சாரின் மதிலுகள் படம் பார்த்த பிறகே சினிமா பற்றி படிக்கணும்னு தோன்றியது. அவரின் நிழல்குத்து படத்தில் அசிஸ்டெண்டாக சேர்ந்தேன் என்கிறார். டிகிரி முடித்த பின் நிறைய வேலைகள் பார்த்தார் ராஜசேகரன். ஸ்டெனோகிராபர், ரிசப்சனிஸ்ட், மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ்… இப்படி. எதிலும் திருப்தியில்லாமல் பிறகு அவர் தன்னை சுதந்திரப்படுத்திக் கொண்டது முழு நேர ஓவியனாக.மற்ற வேலைகள் எதிலும் சுதந்திரமில்லை என்பது புரிந்த போது, வேலைக்குப் போவதை விட்டுவிட்டு முழ நேர ஓவியனானேன்.ராஜசேகரன் ஆர்ட்ஸ் அலுவலகம் மார்த்தாண்டம் சந்திப்பில் ஒரு சிறிய சந்தில் முதல் மாடியில் இயங்குகிறது. ஊழியர்கள் இல்லை. அவரே திறக்கிறார். உள்ளே பத்தடி உயர பிரமாண்ட மோனலிசா. அந்த மந்தகாச சிரிப்பிற்கு கீழே உரையாடல் தொடர்கிறது.
அடூர் சார் பெரிய ஆள். ப்ரேம், லென்ஸ் எல்லாம் அவர்தான் முடிவு செய்வார். நம்ம சிஷ்யனுக்கு ஆர்ட்டில் ஆர்வம் இருக்கிறதே என்று அவரது கலாமண்டலம், ராமன் குட்டி நாயர் ஆவணப் படங்களில் என்னை கலை இயக்குனராக்கினார்.
அடூர் கோபால கிருஷ்ணனின் நாலு பெண்ணுங்கள் படம் கலை இயக்குனராக ராஜசேகரனுக்கு முதல் படம். இதன் இரண்டாம் பாகத்திலும் ராஜசேகரனே கலை இயக்குனர். படம் விரைவில் வெளியாக உள்ளது.
நாலு பெண்ணுங்கள் எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய கதைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. தகழியின் கதைகள் நடக்கும் அதே பகுதியில், அதே காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் படம் இருக்க வேண்டும் என்பதில் அடூர் சார் உறுதியாக இருந்தார். அதாவது நாற்பதுகளில் ஆலப்புழா குட்ட நாடு எப்படி இருந்ததோ அதை மறு உருவாக்கம் செய்ய வேண்டும்.
வீடுகள், சாலை, வெண்கல பாத்திரங்கள், கள்ளுக்கடை, கிணறு என்று இந்தப் படத்துக்கு தேவையானவற்றில் பெரும்பாலானவை ராஜசேகரனின் சொந்த சேகரிப்பில் இருந்து எடுக்கப்பட்டன. கிண்டி மாதிரியான பொருட்களை புதிதாக செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது போன்றவை பெரும்பாலும் என்னுடைய சேகரிப்பிலேயே இருந்தன. சில விஷயங்களை கிரியேட் செய்தோம். படத்தில் ஒரு சமையல்கட்டு வருகிறது. அதற்காக வீட்டின் சுவரை இடித்து, மேற்கூரை கான்கிரீட்டை மறைத்து புதிதாக உருவாக்கினோம். பனை மரத்தாலான நீண்ட ஜன்னல் ஒரு ஹோட்டலில் இருந்து கிடைத்தது.அடூர் போன்ற ஒரு மேதைக்கு கலை இயக்குனராக பணிபுரிவது எளிதான காரியமில்லை. ஒரு கிணறு தேவையென்றால், அது சாஸ்திரப்படி எங்கு அமைய வேண்டும் என்பதும் கலை இயக்குனருக்கு துல்லியமாக தெரிந்திருக்க வேண்டும்.
படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக சமையல்கட்டை ஒட்டி கிணறு ஒன்றை செய்தேன். அதைப் பார்த்த யாருக்கும் அது செட் என்பது தெரியவில்லை. அந்த காட்சியில் நடித்த நந்திதா தாஸ், கிணற்றின் உள்ளே பொடியன் ஒருவன் குட்டுவத்தில் நீருடன் இருப்பதை பார்த்தப் பிறகே அது செயற்கையாக உருவாக்கப்பட்ட கிணறு என்பதை தெரிந்து கொண்டார்.
இதேபோல் படத்தில் வரும் நியமலங்கனத்தின்ற கதா என்ற கதையில் சாலை ஒன்றை பழைய கல் ரோலரை வைத்து உருவாக்கியிருக்கிறார்கள். கொல்லைப்புறத்தில் கொத்தாக காணப்படும் வாழை மரங்களும் வேறொரு பகுதியிலிருந்து, மொத்தமாக பெயர்த்து கொண்டுவரப்பட்டன.
அடுரின் அப்சர்வேஷன் குறித்த ராஜசேகரனின் அவதானிப்பு அலாதியானது. ஒரு படத்தை அதன் உருவாக்கத்தை அதன் ஆன்மாவை அணுகி ஆராயும் நுணுக்கம் ராஜசேகரனுக்கு கை கூடியிருக்கிறது. ஒரு படத்தின் தரத்தை ஒரு ப்ரேமை பார்த்தே சொல்ல முடியும் என்கிறவர், அடூரிடம் வியப்பது, அவர் படத்தின் ஒலிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை.
நாலு பெண்ணுங்கள் படத்தில் வரும் கன்னிகா கதையில் வயலில் அறுவடை செய்யும் காட்சி வருகிறது. அரிவாளால் கதிர் கொய்யும் சத்தம் துல்லியமாக இருக்க வேண்டும். ஆனால் அந்தநேரம் கேரளாவில் அறுவடை எதுவும் நடக்கவில்லை. என்னுடைய நண்பர் குற்றாலம் போகும் வழியில் சேரமான்தேவியில் அறுவடை நடப்பதாக கூறினார். அதிகாலையில் நானும் அடூர் சாரும் சென்று அந்த சத்தத்தை பதிவு செய்தோம்.
படத்தில் இந்தக் காட்சி 30 வினாடிக்கும் குறைவாகவே வருகிறது. ஒரு வயலினை இசைக்கவிட்டு அந்தக் காட்சியை நிரப்பியிருக்கலாம். ஆனால் அடுர் சார் அதை செய்யவில்லை.
காலை நேரத்துக்கு ஒரு சத்தம் இருக்கும். மாலை நேர சத்தம் வேறாக இருக்கும். இரவு நேர ஒலி இவை இரண்டிலிருந்தும் மாறுபட்டு இருக்கும். அதே மாதிரி காளை வண்டி மண் சாலையில் போனால் ஒரு சத்தம். தார் சாலையில் போனால் ஒரு சத்தம். பாரம் இருந்தால் ஒரு சத்தம், இல்லாமல் ஒரு சத்தம். இரவு நேரத்தில் நடக்கும் காட்சிக்கு இரவு நேர சத்தத்தை மட்டுமே அடுர்சார் பயன்படுத்துவார். படத்தின் பட்ஜெட்டில் பாதி ஒலிக்கு செலவிட அவர் தயங்கியதில்லை.
ஒலியை பற்றி குறிப்பிடும் அதேநேரம் இந்திய திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் குறித்து ராஜசேகரனுக்கு கடும் விமர்சனம் இருக்கிறது.
பாடல்களை அடூர் சார் பாரசைட் என்று சொல்வார். படத்தில் பாடல்கள் இடம்பெறுவது மாவில் (மாமரம்) இத்தி பிடிப்பது போல. மரத்தையே அழித்துவிடும்.தமிழில் ராஜசேகரனை முழுமையாக ஆகர்ஷித்த இயக்குனர்கள் யாருமில்லை. மோகமுள்ளில் வித்தியாசமாக தெரிந்த ஞானராஜசேகரன் அடுத்தடுத்தப் படங்களில் பின்தங்கிவிட்டதாகவே அவர் கருதுகிறார். மேக்கிங் தெரிந்த இயக்குனர் என்று ராஜசேகரன் குறிப்பிடுவது மணிரத்னத்தை.தமிழில் தார்க்கோவ்ஸ்கி, குரோசவா பற்றியயல்லாம் பேசுறாங்க. ஆனால், அவர்களை தெரிந்ததற்கு அடையாளமாக பேசுகிறவர்களின் படங்களில் ஒரு ப்ரேம்கூட இல்லை. இன்னும் நூறு வரும் கழிந்தாலும் தமிழ் சினிமா திருந்தப் போவதில்லை.
படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கும் ராஜசேகரனை புத்துணர்ச்சியூட்டும் விஷயமாக ஓவியம் இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநில மாநாட்டையொட்டி திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பிரமாண்டமான ஈசல் ஸ்டேண்டை உருவாக்கினார் ராஜசேகரன்.
மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் கம்யூனிஸ்ட் முதல்வரான இ.எம்.எஸ். நம்பூதிரிபாடின் ஓவியத்தை அதில் தீட்டி வைத்தார். அனைவரையும் ஈர்த்த அந்த ஓவியம்தான் இன்று உலகின் மிகப்பெரிய ஈசல் ஓவியம். ஜெர்மன் ஓவியர் ரொனால்ட் யர்க் உருவாக்கியதைவிட இது பெரியது.
உருவ ஓவியம் மீதான ராஜசேகரனின் ப்ரேமை இன்னும் குறையவில்லை. ஒரு முகத்தைப் பார்த்து அதை அப்படியே ஓவியத்தில் கொண்டு வருவதில் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் இல்லை என்கிறார் பரவசத்துடன்.
கலை இயக்கத்துக்காக கேரள அரசின் விருது கிடைத்த பின்பும், படம் இயக்கும் எண்ணமே ராஜசேகரனின் மனதில் மேலேங்கி உள்ளது. கொரிய இயக்குனர் கிம் கி டக் கும், ரஷ்யாவின் அலெக்ஸாண்டர் சுக்ரோவுமே அவரின் ஆதர் இயக்குனர்கள்.
கிம் கி டக் கின் பியூட்டியும், சுக்ரோவின் முவ்மெண்டும் எனக்குப் பிடித்தமானவை. இவைகளை இணைத்து எனது படத்தை உருவாக்க வேண்டும்.
அடூரிடம் பணிபுரிந்தபின் அவரைவிட தகுதி குறைந்த ஒருவரிடம் பணிபுரிய ராஜசேகரனுக்கு ஆர்வமில்லை. இன்றைக்கு இந்தியாவிலிருக்கிற மிகச் சிறந்த இயக்குனர் அடூர்தான் என்பவர், குறைந்தபட்சம் அடூரின் திசையில் சிந்திப்பவராகவாவது இருக்க வேண்டும், என்கிறார் தீர்மானமாக.
ஒரு நல்ல படத்துக்கு ராஜசேகரனின் பட்ஜெட் ஒரு கோடி. அந்த ஒரு கோடி கிடைக்கும் தருணம் தனது கனவை செலுலாயிடில் தீட்ட ஆரம்பித்து விடுவார் ராஜசேகரன்.
விடைபெறும் போது, தார்க்கோவ்ஸ்கியின் சேக்ரிபைஸ் படத்தின் முதல் காட்சியான அந்த புகழ்பெற்ற லாங் ஷாட்டை குறிப்பிடுகிறார். அதுபோல் ஒரேயயாரு காட்சி எடுத்தாலே போதும்.
மார்த்தாண்டத்தில் சின்ன சந்தில் மோனாலிசாவின் புன்னகைக்கு கீழே காத்திருக்கிறார் ராஜசேகரன். கனிய வேண்டியது காலம் மட்டுமே.