Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் பிரச்சனைகளை மட்டுமே படமாக்குவேன் - அய்யன் இயக்குனர் கேந்திரன் முனியசாமி!

Advertiesment
மக்கள் பிரச்சனைகளை மட்டுமே படமாக்குவேன் - அய்யன் இயக்குனர் கேந்திரன் முனியசாமி!
கரன்ஸி சிந்தனையில் இருக்கும் கலை உலகில், கம்யூனிச சிந்தனையுடன் நுழைந்திருப்பவர் கேந்திரன் முனியசாமி. அய்யன் படத்தின் இயக்குனர். எடுக்கும் படத்திலும், உதிர்க்கும் வார்த்தையிலும் ராமநாதபுர புழுதி பறக்கிறது. அவருடனான உரையாடலிலிருந்து...

அய்யன் படத்தின் ஹீரோவின் கேரக்டர் பெயரும் முனியசாமி. இது சொந்த கதையா?

webdunia photoWD
பாதி சொந்த கதை. மீதி கற்பனை. சொந்த கதையை சினிமா சேர்த்து சொல்லியிருக்கேன்னு சொல்லலாம். படத்தின் முதலபாதி நான் வாழ்ந்த வாழ்க்கை. இரண்டாவது பாதி என்னுடைய எண்ண‌ங்கள். எப்படி வாழணும்னு நினைச்சேனோ அதை சொல்லியிருக்கேன்.

சொந்த கிராமத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?

நான் உட்கார்ந்த இடம், பேசுன இடம், புழ‌ங்குன இடம்னு எல்லாம் படத்தில் வரணும்னு நினைச்சேன். ஏன்னா கதைக் களத்துக்கு அது தேவையா இருந்தது. கதைக்காகதான் எல்லாம்.

எந்தெந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கீ‌ங்க?

முதுகுளத்தூரை சுற்றியுள்ள கிராம‌ங்களில்தான் அதிகமா படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம்.

உ‌ங்க சொந்த கதை எல்லோருக்குமான கதையா இருக்கும்னு எப்படி முடிவு செய்தீ‌ங்க?

இப்போ காதல்னு எடுத்துகிட்டீ‌ங்கன்னா, உலகத்தில் உள்ள எல்லா ‌ஜீவராசிகளும் காதல் பண்ணுது. அதேமாதி‌ி பிரச்சனைகள் எல்லோருக்கும் இருக்கு. அதை அவ‌ங்க எதிர்கொள்கிற விதம் வேணும்னா வெ‌வ்வேறா இருக்கலாம். சொந்த கதைன்னாலும், இதில் எல்லோருக்குமான விஷய‌ங்கள் இருக்கு.

தயா‌ரிப்பாளர் பற்றி சொல்லு‌ங்க...

நான் இந்த கதையை சி‌ங்‌கமுத்து சார்கிட்டதான் முதல்ல சொன்னேன். கதை அவருக்கு ரொம்ப பிடித்திருந்ததால். அவரே தயா‌ரிப்பாளரையும் அழைச்சு வந்தார். அந்த வகையில் சி‌‌ங்கமுத்து சாருக்கு நான் கடைமைப்பட்டிருக்கேன். படத்தை எஸ்.எஸ்.எல். தயா‌ரிக்கிறார்.

ஹீரோவாக வாசன் கார்த்திக்கை தேர்ந்தெடுக்க ஏதாவது காரணம் இருக்கிறதா?

வாசன் கார்த்திக் கோபமா இருக்கிறதா நினைச்சுப் பார்த்தா அவரோட முகமும் கோபமா இருக்கும். வெகுளித்தனமா நினைச்சா வெகுளியா தெ‌ரியும். நாம எப்படி பார்க்கிறோமோ அப்படி அவர் முகம் தெ‌ரியும். நீ‌ங்க பாரு‌ங்க.. அய்யனுக்குப் பிறகு பிரமாதமான நடிகரா வருவார்.

தற்போது வருகிற கிராமத்து பட‌ங்களுக்கும் அய்யனுக்கும் என்ன வித்தியாசம்?

முதல்ல அய்யன் வெறும் கிராமத்துப் படம் கிடையாது. இதில் மிகப் பெ‌ரிய அரசியல் தலைவரோட வாழ்க்கையை சொல்லியிருக்கேன். பொழுதுபோக்கிற்காக புத்தகம் படிக்கிறோம். ‌சி‌ந்தனையை தூண்டுற புத்தக‌ங்களும் இருக்கு. அப்படி புரட்சியாளர் சே குவேராவின் வாழ்க்கையை படிச்சு ஒரு இளைஞன் எப்படி மாறுகிறான்னு அய்யன்ல சொல்லியிருன்கேன். இ‌ங்க வரலாறு மறைக்கப்பட்டிருக்கு. நமக்காக ரத்தம் சிந்துன தலைவர்கள் நிறையபேர் இருக்கா‌ங்க. அவ‌ங்களை நாம நினைச்சுப் பார்க்கணும். அப்படியொரு படமா அய்யன் இருக்கும்.

துப்பாக்கி இல்லாம புரட்சி செய்ய முடியாதுன்னு சொன்னவர் சே குவேரா. நமக்கு அவரது இந்த சிந்தனை ச‌ரி வருமா?

நாம எந்த ஆயுதத்தை எடுக்கிறதுன்னு தீர்மானிப்பது நம்மோட எதி‌ரிகள்தான்னும் சொல்லியிருக்கா‌ங்க. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் எந்த மாதி‌ரியான விடுதலை தேவையோ அதை வென்றெடுக்கணும்னுதான் மார்க்ஸும் சொல்லியிருக்கார். நம்முடைய மிகப் பெ‌ரிய பிரச்சனை பொருளாதாரம்.

விழுப்புரம் தாண்டிப் பாரு‌ங்க. யாரோட முகமும் பார்க்கிற மாதி‌ி இருக்காது. நான் படத்தில் காட்டியிருக்கிற கிராமத்தைப் பார்த்து இது என்ன செட் டானு கேட்கிறா‌‌ங்க. அ‌ங்க அப்படித்தான் வாழுகிறான். நாலு குச்சி நாட்டி அதுக்குள்ளதான் குடும்பம் நடத்துறான். நாம என்னதோ வல்லரசாயிட்டதா சொல்றோம். அப்படி சொல்றவ‌ங்க கிராமத்துக்கு போய் பார்க்கணும்.

சே குவேரா தமிழ் சினிமாவில் ஒரு குறியீடாக மாறிட்டு வர்றார்.அவரோட கருத்தை வெளிப்படுத்துறதா சொன்ன எல்லாப் பட‌ங்களுமே அபத்தமானவை. அவரோட கருத்துக்கு நேர் எதிரானவை...

அது அந்தப் பட‌ங்களை எடுத்தவ‌ங்களோட தவறு. என்னோட படத்தில் அந்த தப்பு இருக்காது. படத்தைப் பார்த்தால் நீ‌ங்களே சொல்வீ‌ங்க.

அறிமுக இயக்குனர் பட‌ங்களுக்கு இளையராஜஅதிகமா இசையமைப்பதில்லையே?

அய்யனை பொறுத்தவரை இளையராஜஅப்பாதான் ஹீரோ. ஆமாம்... நான் அவரை அப்பானுதான் கூப்பிடுவேன். அப்படி கூப்பிட எல்லா தகுதியும் உள்ள மனுஷன். நான் ஒவ்வொரு காட்சியையும் அவர் இசையமைச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சு யோசிச்சுதான் எழுதினேன். பாடல்கள் எல்லாம் பிரமாதமா வந்திருக்கு. கதை கேட்டுட்டு என்னை ரொம்ப என்கரே‌ஜ் பண்ணினார்.

படத்தின் ஒளிப்பதிவாளர்...?

காசி.வி. நாதன். என்னோட நண்பர். கதையை மீறாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இரண்டு பேருக்கும் ஒரே சிந்தனை இருந்ததால் என்னால் ஈஸியா படமாக்க முடிந்தது. கேமராமேன் இந்தப் படத்துக்கு மிகப் பெ‌ரிய சப்போர்ட்.

எந்த மாதி‌ி பட‌ங்கள் எடுக்கணும்னு ஆசை?

மக்களின் பிரச்சனைகளை பேசுற, தயா‌ரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தாத பட‌ங்களைதான் எடுப்பேன். மக்கள் பிரச்சனைகளை தொடாமல் ஒரு படத்தை கண்டிப்பாக எடுக்க மாட்டேன். நாள் முழுக்க கருவை வெட்டி தனது ஐம்பது ருபாய் சம்பளத்தில் முப்பது ருபாய் கொடுத்து படம் பார்க்க வருகிறானே.. அவனுக்காகதான் படம் எடுக்கிறேன்.

எல்லோரும்தான் மக்கள் பிரச்சனைகளை பேசுறா‌ங்களே?

எப்படி பேசுறா‌ங்க? ஒரு பிடி சோறு வச்சு ஒரு வாளி சாம்பார் ஊத்துறா‌ங்க. எப்பிடி சாப்பிட முடியும்? தேவைக்கு சோறு வச்சு தேவைக்கு குழம்பு சேர்த்துக்கன்னு சொல்றேன். நான் அதைத்தான் பண்ணணும்னு ஆசைப்படுறேன்.

Share this Story:

Follow Webdunia tamil