கூட்டிக் கழித்துப் பார்த்தும் கணக்கு சரிவராத நடிகர்கள் என்று சிலர் இருப்பார்களே. ஜெய் ஆகாஷ் அந்த வகை. தலைகீழாக நின்றும் ஹிட் என்ற வார்த்தை மட்டும் இவர் கிட்டேயே நெருங்குவதில்லை. பொறுத்துப் பார்த்தவர், காதலன் காதலியில் நடிப்புடன் இயக்குனர் பொறுப்பையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென்று இயக்குனர் ஆகியிருக்கிறீர்களே?
நான் நடிக்க வந்து ஒன்பது வருஷமாச்சு. தமிழ், தெலுங்கில் 36 படங்கள் நடிச்சிருக்கேன். தெலுங்கில் கொடுத்த ஹிட் கூட தமிழில் இல்லை. ஓன்பது வருடத்தில் என்னோட படங்கள் ரசிகர்கள்கிட்ட ரீச் ஆகலை.
இதற்கு என்ன காரணம்?
ஒரு படத்தோட வெற்றி தோல்வி இயக்குனர்கள் கையில்தான் இருக்கு. நல்ல படங்கள், திறமையான இயக்குனர்கள் கிடைக்காததுதான் தோல்விக்கு காரணம். நடிகர்கள் என்பவர்கள் இயக்குனர்களின் கையிலிருக்கும் பொம்மை. நானும் இதுவரை பொம்மையாகதான் இருந்தேன்.
திடீரென்று துணிச்சல் வர என்ன காரணம்?
நண்பர்கள்தான் காரணம. நான் சொல்ற கதைகளை பாரபட்சம் இல்லாம விமர்சனம் பண்ணுவாங்க. நீயே டைரக்ட் பண்ணலாமேனு என்னை உற்சாகப்படுத்துவாங்க. நான் சொன்ன காதலன் காதலி கதை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. என்னை நானே உயர்த்திக்க டைரக்டராயிட்டேன்.
காதலன் காதலி பற்றி சொல்லுங்க..?
மூணு பேர் ஹீரோவை லவ் பண்றாங்க. இதில் யாரை ஹீரோ செலக்ட் பண்றார்ங்கிறது கதை.
முக்கோண காதல் கதையா?
முக்கோண காதல் கதைன்னாலும் இதுவரை நீங்க பார்த்த பழைய பல்லவி என்னோட கதையில் நிச்சயம் இருக்காது. படம் சூப்பர் ஹிட் ஆகலைன்னாலும் நிச்சயமா தோல்வி அடையாது. இதை ஒரு இயக்குனரா உறுதியா சொல்றேன்.
மூன்று காதலிகள் யார் யார்?
டெய்ஸி போபண்ணா, சுஹாசினி, நிதி சுப்பையா. இதில் நிதி சுப்பையா ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரங்களில் எல்லாம் நடிச்சிருக்காங்க.
படம் இயக்க அனுபவம் வேண்டாமா?
ரோஜாவனம் படம் நடிக்கிறப்போ தெலுங்கில் ஆனந்தம் படம் டைரக்ட் பண்ணுனவர்கிட்ட அசிஸ்டெண்டா வொர்க் பண்ணுன அனுபவம் இருக்கு. என்னோட படம் பார்த்து கிளைமாக்ஸில் எல்லோரும் உருகப் போறாங்க. இது நிச்சயம்.