டி.வி. சேனல்களைத் திறந்தால் தினம் நான்கைந்து முறையாவது நாயகன் படப்பாடல்கள் கேட்க முடிகிறது. அப்படி நம்மை ரசிக்க வைக்கும் ஹிட் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர் மரியா மனோகரை நம் வெப்துனியாவுக்காக சந்தித்தோம்.
தாங்கள் திரையுலகத்திற்கு வந்தது பற்றி?
நான் எந்த ஒரு பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவன். என் சொந்த ஊர் ராஜபாளையத்தில் உள்ள மேட்டு வடகரை. சினிமாவில் குறிப்பாக இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்று B.Sc. முடித்ததும்... இசையின் அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சென்னை திரைப்படக் கல்லூரியில் சவுண்ட் இன்ஜினியர் கோர்ஸில் சேர்ந்தேன். அப்போதே அம்மாபேட்டை கிருஷ்ணமூர்த்தியிடம் முறைப்படி சங்கீதம் பயின்றேன்.
படிப்பு முடிந்ததும் இசையமைக்க வந்துவிட்டீர்களா?
இல்லை. இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், மணிசர்மா, ஸ்ரீகாந்த் தேவா, யுவன் சங்கர் ராஜா, டி. ராஜேந்தர் போன்றவர்களிடம் சவுண்ட் இன்ஜினியராக இருந்தேன். ஆனால் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் என்னைப் பிடிக்கும். அப்படி சவுண்ட் இன்ஜினியராக இருந்துகொண்டே ·பெதர் என்ற ஆல்பத்துக்கு இசையமைத்தேன். ஹரிஹரன், எஸ்.பி.பி., சாதனா சர்கம் பாடியிருந்தார்கள். அந்த ஆல்பத்தின் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. மேலும், தொடர்கள், விளம்பரங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.
எஸ்.பி.பி. போன்ற ஜாம்பவானை நாயகனில் பாட வைத்திருந்தீர்களே பயம் இருந்ததா?
நாயகனில் 'இருந்தாக்க அள்ளிக்கொடு' பாடலைப் பாடினார். பாடி முடித்துவிட்டு கம்போஸிங் பற்றி என்ன சொல்லுவாரோ என்று பயந்து கொண்டுதான் இருநூதேன். பாடிவிட்டு ரெகார்டிங் தியேட்டரிலிருந்து வெளியே வந்ததும் கட்டிப் பிடித்துக்கொண்டு 'நல்லா பண்ணியிருக்கே' என்று பாராட்டினார்.
அந்தப் படத்துப் பாடல்கள் ஹிட் ஆனதுக்குக் காரணம் ஜே.கே. ரித்தீஷ் சாரும், தயாரிப்பாளர் விஜயகுமார் சாரும்தான். என்ன செலவு ஆனாலும் பரவாயில்லைனு சுதந்திரமா வேலை செய்யவிட்டாங்க. அவங்களுக்கு நன்றி சொல்ற அதே நேரம், 'நாயகன்' படம் வாய்ப்பு கிடைக்க காரணமான தயாரிப்பு நிர்வாகி லோகநாதன் சாருக்கும் நன்றி சொல்லக்கிறேன்.
படங்களுக்கு படம் ரீ-மிக்ஸ் செய்கிறார்கள் நீங்களும் அப்படி ரீ-மிக்ஸ் பாடல்கள் கொடுப்பீர்களா?
பழைய பாடல்களை ரீ-மிக்ஸ் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் இயக்குனர்கள் கேட்டால் இசையமைத்துக் கொடுப்பேன்.
நாயகனில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தது போல் மேலும் படங்களில் நடிப்பீர்களா?
நல்ல இசையமைப்பாளர் என்று பெயரெடுத்தால் போதும். நடிகனென்றெல்லாம் பெயர் எடுக்க விருப்பம் இல்லை. என் முழு கவனமும் இசையில் மட்டுமே இருக்கும்.
உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?
இசை ஞானி இளையராஜா. அவரோட ரசிகனா இல்லாம இசைத் துறைக்கு வரவே முடியாது. காலத்தை தாண்டி நிற்கும் பாடல்கள் அவருடையது. அவர்தான் என் இன்ஸ்பயர்.
தற்போது எந்தெந்த படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?
இரண்டு படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். அத்தோடு 'நாயகன்' தெலுங்கு ரீ-மேக் படமான அங்குசம் படத்துக்கும் இசைய¨த்து வருகிறேன். நேரடி தமிழ்ப் படம் 'நாலும் தெரிஞ்ச ரெண்டு பேர்'. இதன் இயக்குனர் எஸ்.எ.சி. ராம்கி. இவர் ஏற்கனவே விவேக்கை ஹீரோவாக வைத்து 'சொல்லி அடிப்பேன்' என்ற படத்தை இயக்கியவர்.
அசோக்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்காக இரண்டு பாடல்கள் கம்போஸிங் முடிந்துவிட்டது. இதையடுத்து 'மன்மதன்', 'திருடா திருடி' படங்களைத் தயாரித்த இந்தியன் தியேட்டர்ஸ் கிருஷ்ணகாந்த் தயாரிக்கும் 'கலசம்' என்ற படத்திற்கு இசையமைக்க இருக்கிறேன்.
இதன் இயக்குனர் மணிமாறன் பி. வாசுவிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதில் பருத்தி வீரன் சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சிலந்தி படத்தில் வில்லனாக நடித்த சந்துரு ஒரு ஹீரோவாகவும், கம்ப்யூட்டர் இன்ஜினியரான சாய் என்ற புதுமுகம் இன்னொரு ஹீரோவாகவும் நடிக்கிறார்.
நாயகியாக மிஸ் பெங்களூரு பட்டம் பெற்றவரும், தோழா படத்தின் நாயகியுமான லக்சனா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து எந்த வகையில் தனித்து நிற்க விரும்புகிறீர்கள்?
மக்களின் ரசனையைப் புரிந்துகொண்டு மெட்டுக்கள் அமைப்பேன். இயக்குனர்களின் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் விதமாகவும், டைரக்டரின் இசையமைப்பாளர் என்ற நல்ல பெயரை எடுக்கவேண்டுமென்றும் விரும்புகிறேன்.
தற்போது நாலும் தெரிஞ்ச ரெண்டு பேர் படத்துக்காக ஜெர்மனியில் பிரபலமான ஹிப் பாப் பாடல்களை தமிழில் அறிமுகம் செய்யவிருக்கிறேன். நல்ல பாடல்களோடு, பின்னணி இசையிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன். நாயகன் கொடுத்த வெற்றியை என் அடுத்த படங்களில் மேலும் உயர்த்த இருக்கிறேன்.