கிளாமர் வேடங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் த்ரிஷா. அவர் நடிப்பில் வெளிவரயிருக்கும் அபியும் நானும், சென்னையில் ஒரு மழைக்காலம் ஆகியவை த்ரிஷாவின் நடிப்பு திறமையை வெளிக் கொணரும் என்பது அனைவரின் நம்பிக்கை.
இதில் அபியும் நானும் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளார். அடுத்து நடிக்கயிருக்கும் மர்மயோகியும் த்ரிஷாவுக்கு சவாலான படம். தனது படங்கள் குறித்த அவரது பேட்டியிலிருந்து.
அபியும் நானும் படத்தில் புதுமுகம் கணேஷ் ஐயருக்கு ஜோடியாக நடித்திருக்கிறீர்களே?
அபியும் நானும் படத்தை பொறுத்தவரை ஸ்கிரிப்டை பார்த்துதான் அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். கோ ஸ்டார்ஸ் யார் என்று பார்க்கவில்லை. ஊட்டியில் படப்பிடிப்பு நடந்த போதுதான் என்னுடன் புதுமுகம் நடிக்கயிருப்பதை தெரிந்து கொண்டேன்.
மேக்கப் இல்லாமல் படத்தில் நடிக்க என்ன காரணம்?
இயற்கையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா சொன்னதால் மேக்கப் போட்டுக் கொள்ளவில்லை.
அபியும் நானும் படத்தை தொடர்ந்து மர்மயோகியிலும் மேக்கப் இல்லாமல் நடிக்கிறீர்கள் என்பது உண்மையா?
உண்மைதான். என்னுடைய கேரக்டருக்கு ஏற்ற நிறம் கிடைப்பதற்காக மேக்கப் போடாமல் நடிக்கிறேன்.
தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா?
நாகார்ஜுன் ஜோடியாக கிங் படத்தில் நடிக்கிறேன். சீனு வைதாலா படத்தை இயக்குகிறார்.
இப்போது நீங்கள் நடிக்கும் படங்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சர்வம் படத்தில் நடிக்கிறேன். இதில் எனக்கு மருத்துவ கல்லூரி மாணவி வேடம். சென்னையில் ஒரு மழைக்காலம் கௌதம் இயக்கும் படம். இதில் இன்றைய நாகரிக பெண்களை பிரதிபலிக்கும் வேடம்.
சென்னையில் ஒரு மழைக்காலம் முடிய இன்னும் பல நாட்கள் இருக்கிறது. கௌதம், ராதா மோகன், விஷ்ணுவர்தன் போன்ற இளம் இயக்குனர்களுடன் பணிபுரிய எப்போதும் ஆவலாக உள்ளேன்.
அடுத்து என்னென்ன படங்களில் நடிக்க இருக்கிறீர்கள்?
மர்மயோகிக்கு தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதால் வேறு படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.