வெற்றிகரமான இயக்குனர் போலவே வெற்றிகரமான நடிகர் என்ற பெயரையும் தனதாக்கியிருக்கிறார் சுந்தர் சி. அளவான மசாலாவுடன் இவர் நடித்து வெளிவரும் படங்கள் தயாரிப்பாளர்களின் பாக்கெட்டுகளை வளமாக்குகின்றன. இவரது ஐந்தாவது படம் 'தீ'. படத்தைக் குறித்த நம்பிக்கை சுந்தர் சி-யின் பேச்சில் பிரதிபலிக்கிறது.
'தீ' யில் உங்களுக்கு இரண்டு வேடங்களா?
காவல் துறை அதிகாரியாக சாதிக்க முடியாத ஹீரோ காக்கி சட்டையை கழற்றிவிட்டு கதர்சட்டை அணிந்து அரசியலில் சாதித்துக் காட்டுவதுதான் கதை.
இதனால் காவல் துறை அதிகாரியாகவும், அரசியல்வாதியாகவும் இரண்டுவிதமாக படத்தில் நடித்திருக்கிறேன்.
இதில் ராகினி, நமிதாவுக்கு என்னென்ன வேடங்கள்?
ராகினி எனக்கு மனைவியா அதாவது காவல் துறை அதிகாரிக்கு மனைவியா வர்றாங்க. நமிதா நடிகையாக இருந்து அரசியலுக்கு வரும் கேரக்டரில் நடிச்சிருக்காங்க.
தீ தெலுங்குப் படமென்றின் ரீ-மேக் என்று சொல்லப்படுவது உண்மையா?
ஆந்திராவில் 'ஆக்ஷன் துரியோதனா' என்ற பெயரில் வெளிவந்து வசூலை வாரிக்குவித்த படத்தின் ரீ-மேக்தான் 'தீ'. தமிழுக்கு ஏற்றமாதிரி சில மாற்றங்கள் செய்திருக்கிறோம்.
தீ-யில் என்ன ஸ்பெஷல்?
இதுவரை நான் நடித்த படங்களிலேயே அதிக ஆர்வமாக சிரத்தை எடுத்து உழைத்த படம் இதுதான். ஒரு காட்சியில் நிர்வாணமாகக்கூட நடித்திருக்கிறேன்.
நிர்வாணமாகவா...?
கதைப்படி சென்னை வரும் நான் ஒண்ணுமே இல்லாமல் வருவேன். ஒண்ணுமே இல்லைன்னா, டிரெஸ் கூட இல்லாமல். கதைக்கு தேவைப்பட்டதால், அந்தக் காட்சியில் நிர்வாணமாகவே நடித்தேன்.
படத்தின் இசை...?
ஸ்ரீகாந்த் தேவா. ரொம்ப பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.
பிஸியான நடிகராயிட்டீங்க. இயக்கம் அவ்வளவுதானா?
இல்லை. அடுத்ததா ஒரு படத்தை தயாரித்து இயக்கப் போறேன். பட்ஜெட் பதினைந்து கோடி!