சென்னை திரைப்படக் கல்லூரி இயக்குனர் பிரிவில் படித்த ராஜாமோகன் முதல் முறையாக இயக்கும் படம் 'திருவாசகம்'. படம் ஆரம்பித்து சற்று காலதாமதம் ஆனாலும் மீண்டும் தற்போது வேகமாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கும் அவரிடம் நம் வெப்துனியா இதழுக்காக சந்தித்தோம்.'
திருவாசகம்' என்று பெயர் வைத்திருக்கிறீர்களே அதற்கு என்ன காரணம்?
திருவாசகத்திற்கு உருகாதவர்கள் வேறு எந்த வாசகத்துக்கும் உருகமாட்டார்கள் என்பதுபோல், காதலுக்கு உருகாதவர்கள் வேறு எதற்கும் உருக மாட்டார்கள் என்பதற்காகத்தான் இந்த காதலை மையமாக உருவாக்கப்பட்ட இந்த கதைக்கு 'திருவாசகம்' என்று பெயர் வைத்தேன். இந்தப் பெயர் வைத்ததற்காக இந்த அமைப்பினரிடம் ஏதாவது கண்டனம் வந்ததா?இதுவரை வரவில்லை. அப்படி வந்தாலும் அதற்குரிய விளக்கம் சொல்லத் தயாராக இருக்கிறோம். முழுக்க முழுக்க இது காதல் கதைதானேத் தவிர வேறு எந்த அமைப்பையும் தாக்குவதோ, புண்படுத்துவது போன்ற காட்சிகளோ இல்லை. அதனால்தான் இந்த பெயரை துணிந்து வைத்தேன்.படம் ஆரம்பித்து இவ்வளவு கால தாமதத்திற்குப் பின்னால் மீண்டும் ஆரம்பித்திருக்கிறீர்கள். இந்த இடைவெளி எதனால்?
சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஏற்படும் பைனான்ஸ் பிரச்சனைதான் இந்தப் படத்திற்கும் ஏற்பட்டது. எனது நண்பரான மைக்கேல்தான் முதலில் தயாரித்தார். ஒன்பது நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். சிலரிடமிருந்து வரவேண்டிய பணம் வராததால் இந்த காலதாமதம். தற்போது மைக்கேலுடன் சேர்ந்து துரை பிரபாகரன், நெடுமாறன் ஆகியோர் சேர்ந்து தற்போது இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இதில் நெடுமான் திரைப்படக்கல்லூரியில் படித்தவர். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் கோ- டைரக்டராகவும் இருக்கிறார். கதை அவருக்கு மிகவும் பிடித்ததால் தயாரிப்பாளர்ராகவும் இறங்கியிருக்கிறார்.
முதலில் படம் ஆரம்பித்தபோது இருந்த டெக்னிஷியன்கள் தற்போது மாற்றப்பட்டிருக்கிறீர்கள். குறிப்பாக ஹீரோ, கேமராமேன் இதற்கு என்ன காரணம்?
எந்தவொரு படைப்பாளியுமே ஒரே படத்தை மட்டும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். முதலில் நவ்தீப் தான் நடிப்பதாக விளம்பரப்படுத்தினோம். எங்களுக்கு ஏற்பட்ட காலதாமதத்தால் அவர் வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார். தற்போது ஏகன், சொல்லச் சொல்ல இனிக்கும், ஆ...ஈ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோதான் மாறியிருக்கிறாரேத் தவிர ஹீரோயின் அதே காதல் ஷரண்யான்தான். அப்புறம் முதுலில் ஒளிப்பதிவாளராக சோவிலோ ராஜாவை தேர்வு செய்து விளம்பரப்படுத்தினோம். ஆனால் சம்பளப் பிரச்சனையால் விலகிக் கொண்டார். அதற்கடுத்து கேமராமேன் சதீஸை ஒப்பந்தம் செய்தோம்.
அவருக்கும் சில படங்கள் வந்தன, எங்களுக்கும் பைனான்ஸ் பிரச்சனையால் லேட்டானது. அதனால் அவர் தற்போது 'பேராண்மை' படத்தை ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார். தற்போது 'பிடிச்சிருக்கு' படத்தின் கேமராமேன் ஆர்.டி.ராஜசேகரிடம் பல படங்கள் வேலை பார்த்த ராமேஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். சோவிலோ ராஜா, சதீஸ் இருவரும் என் நல்ல நண்பர்கள்தான். அவர்களும் திரைப்படக் கல்லூரி மாணவர்கள்தான். இந்தப் படத்தில் வேலை செய்யாவிட்டாலும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.
இந்த படத்தின் ஹீரோ பற்றி சொல்லுங்கள்?
தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஏ.வி.வி.சத்திய நாராயணன். இவர் தெலுங்கில் ஏழு படங்கள் தயாரித்துள்ளார். அவரின் மகன் ராஜேஷ்தான் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'ஆல்பம்' படத்தில் நடித்தவர். கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தார். எனவே இவரை ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
தற்போது கிராமத்து கதையுள்ள படங்களுக்கு கூட ஒரு பாடலை வெளிநாட்டில் படம் பிடிக்கிறார்கள். நீங்கள் அப்படி வெளிநாட்டில் ஏதாவது படப்பிடிப்பு வைத்திருக்கிறீர்களா?
இந்த கதைக்கு அது தேவைப்படவில்லை. இது ஒரு உணர்வுப்பூர்வமான காதல் கதை. எதார்த்தமாகவும் இருக்கும். இடைவேளை வரை கும்பகோணத்தில் நடப்பது போன்ற கதை அதன்பின் சென்னை, பிறகு ஊட்டி என்று இந்த மூன்று இடங்களில் மட்டும்தான் படம் பிடிக்க இருக்கிறோம். இதற்காக ராயபுரத்தில் மீனவர் குப்பம் போல ஆறு லட்ச ரூபாய்க்கு செட் போட்டிருக்கிறோம். ஆர்ட் டைரக்டர் மணிராஜிடம் உதவியாளராக இருந்த ஜி.குமார் இந்தப் படம் மூலமா ஆர்ட் டைரக்டரா அறிமுகம் ஆகிறார்.
பாடல்களைப் பற்றி சொல்லுங்கள். அதுவும் எதார்த்தமாக உள்ளதா? குத்துப் பாடல்கள் எத்தனை?
அனைத்துப் பாடல்களும் எதார்த்தமான பாடல்கள்தான். குத்துப் பாடல் கண்டிப்பாக இல்லை. அதுவும் இந்த கதைக்குத் தேவைப்படவில்லை. எந்த ஒரு சீனையும், பாடலையும் திணிப்பது எனக்குப் பிடிக்காது, குடும்பத்துடன் அனைவரும் படம் பார்க்க வேண்டும். அயிட்டம் ஷாங் பார்த்து கூட யாரும் முகம் சுழிக்கக் கூடாது.
இசையமைப்பாளர் Jcesic கிஃப் '4 ஸ்டூடண்ட், தி.நகர், விளையாட்டு, பட்டாளம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கின்றன. மொத்தப் பாடல்களையும் வைரமுத்து சார்தான் எழுதியிருக்கார். ஒரு பாடல் பல்லவி.
''சொன்ன என்பது கட்டிடக்காடு
இதில் என் மலர் எந்த மலர்?
உடலால் செய்த கடல்தான் சென்னை
அதிலே என்னலை எந்த அலை'
என்று எழுதிக் கொடுத்துள்ளார். மிகவும் சிறப்பான பாடலாக அமைந்தது. இதை குமுதம் இதழ்கூட அவர் குறிப்பிட்டு சொல்லியிருந்தார். இது மட்டும் இல்லாமல் எல்லா பாடல்களுமே சிறப்பான வரிகளைக் கொண்டு எழுதி கொடுத்துள்ளார். குறிப்பாக இந்தப் பாடலுக்காக மட்டும் சென்னையிலுள்ள முப்பது லொகேஷன்களை தேர்வு செய்து வைத்துள்ளோம்.
மற்ற டெக்னிஷியன்கள், நடிகர்- நடிகைகள்?
'கத்தால கண்ணால' பாடல் பண்ணிய தீனா மாஸ்டர் டான்ஸ் பண்றார். காதல் கதைங்கறதால சண்டை காட்சிகள் இல்லை. மற்றபடி நடிகர்கள் 'பிதாமகன்' மகாதேவன், தாமு, சரண்ராஜ், சுமன்ரெட்டி, அஜய் ரத்னம் நடிக்கிறார்கள். நடிகர் ரகுவரனிடம் கதை சொல்லி ஓ.கே. வாங்கியிருந்தோம். திடீரென்ற அவரின் மரணத்தால் வேறு நடிகரை தேடிக் கொண்டு இருக்கிறோம்.
இந்த கதையைப் பற்றி சொல்லுங்கள்?
கவிதையாய் சொல்லப்படுகிற காதல் கதைதான் இது. ஒரு மலர் கண்ணுக்கு அழகா பூத்து நிக்கிறதை பார்த்து ரசிக்கிறோம். ஆனா மண்ணுக்குள்ள அந்த பூச்செடியோட வேர் அழுதுகிட்டு இருக்கிறதை யாரும் பார்க்க முடியாது. அதுபோலத்தான் இந்த கதையோட ஹீரோ. எதற்குமே உருகாத ஒருத்தன் காதலில் விழுந்த பின்னாடி எப்படி உருகி உருமாறுகிறான் என்பதைத்தான் இதில் சொல்லியிருக்கிறேன்.
அதை எதார்த்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் எடுக்க இருக்கிறேன். சின்ன வயதில் இருந்தே நான் பாரதிராஜாவோட ரசிகன். அரவோட மண்வாசனை கலந்த, வெள்ளந்தியமான மக்களை காட்டும் விதம் எனக்குப் பிடிக்கும். அதே போல இயக்குனர் மகேந்திரன், மணிரத்னம் படங்களையும் அடிக்கடி பார்த்து ரசிப்பேன். திரைப்படக் கல்லூரியில் கற்றுக் கொண்டதைவிட அவர்களின் படங்களையும், அவர்கள் எடுக்கும் விதத்தையும் ஒரு பாடமாகத்தான் எடுத்துச் கொண்டேன்.
குத்துப் பாடல்கள் இல்லாமல், வெட்டுக் குத்து இல்லாமல் நம் அக்கம் பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு அழகான காதல் ஜோடிகளை கண்முன்னால் நிறுத்தப் போறேன். 'மல்லி' டி.வி. தொடர், மனித முத்துக்கள், பூக்களை மிதிப்பவர்கள், இதயமே இதயமே, முற்றுப்புள்ளி, சுதந்திரவேர்கள் மற்றும் அந்தமானுக்காக சுனாமி பற்றி ஒரு ஆங்குலக் குறும்படம் என ஏகப்பட்ட குறும்படங்கள் எடுத்த அனுபவமும் எனக்கு இருப்பதால் சொல்ல வந்த விஷயத்தை அழகா படம் பிடிச்சி, அனைவரும் ரசிக்கும் படமா கொடுப்பேன்.