Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாழ் நூலக எரிப்பு ஒரு கலாச்சார தாக்குதல் - சோமிதர‌ன்!

யாழ் நூலக எரிப்பு ஒரு கலாச்சார தாக்குதல் - சோமிதர‌ன்!
webdunia photoFILE
கடந்த மாதம் ஒன்றாம் தேதி மாலை ரஷ்யன் கலாச்சார மையத்தில் எரியும் நினைவுகள் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஐம்பது நிமிடங்கள் படம் ஓடி முடிந்தபோது, அரங்கில் இறுக்கமான அமைதி. படம் உருவாக்கிய கொந்தளிப்பு பலரின் விழியோரம் கண்ணீர் துளியாக வெளிப்பட்டிருந்தது. என்னை அழவைத்துவிட்டது என்றார் உணர்ச்சிப் பெருக்கை கட்டுப்படுத்த முடியாத இயக்குனர் பாலுமகேந்திரா.

அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்த அந்த ஆவணப்படம் 1981 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி சிங்கள பேரினவாத அரசால் முற்றிலும் எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகத்தைப் பற்றியது. அதனை எடுத்த சோமிதர‌ன் யாழ்ப்பாண தமிழர். போரை அனுபவித்த தலைமுறை என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சோமிதர‌னிடம் ஆவணப்படம் குறித்து உரையாடினோம். முதலில் அவரைப் பற்றி...

"நான் யாழ்ப்பாணம் பக்கத்தில் பருத்திதுறைங்கிற கிராமத்துல பிறந்தேன். யாழ் நூலகத்தை எரிக்கிறதுக்கு 19 நாள் முன்னாடி அதாவது 1981 மே 13 பிறந்தேன். போரை அனுபவித்த தலைமுறை எங்களுடையது. யாழ்ப்பாணத்திலும் பிறநு மட்டக்களப்பு கல்லூரியிலும் படித்தேன்."

சோமிதரன் படித்தது கணிதம். ஆர்வமோ மீடியா. இலங்கை வானொலியின் நாடகங்களில் நடித்துள்ளார். பிறகு யாழிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையில் துணை ஆசிரியராக பணி.

webdunia
webdunia photoWD
"2002-ல் தினக்குரல்ல ஜாயின் பண்ணுனேன். அப்போ சமாதானப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததாலே யாழில் பிரச்சனைகள் அதிகமாக இல்லை. தினப் பத்திரிகையில் இருந்தாலும் எனக்கு ரிசர்ச் ஜர்னலிசம் மேல ஆர்வம் இருந்தது. வெஸ்ட் ஈஸ்டர்ன் ஹெரால்டு ஆங்கில பத்திரிகையில் இருந்த சிவராம் என்னை அவங்க பத்திரிகையில் கட்டுரை எழுத உற்சாபப்படுத்தினார். தினக்குரல்ல இருந்துகொண்டே ஈஸ்டர்ன் ஹெரால்டில் கட்டுரைகள் எழுதினேன்."

சோமிதர‌ன் வெஸ்ட் ஈஸ்டர்ன் ஹெரால்டில் கட்டுரைகள் எழுத ஊக்கப்படுத்திய சிவராம் இலங்கை பத்திரிகையாளர்களில் மிக முக்கியமானவர். 2005-ல் அடையாளம் தெரியாதவர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் இலங்கை பாராளுமன்றத்திற்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. அவருடன் பணிபுரிந்த மற்றுமொரு முக்கிய பத்திரிகையாளர் திசநாயகம். ராஜபக்சே அரசு அவரை கைது செய்ய, கடந்த மூன்றரை மாதமாக ஜெயிலில் இருக்கிறார் திசநாயகம்.

"யாழ்ப்பாணத்தில் பத்திரிகைக்காரங்க நிலைமை எப்போதும் இப்படித்தான் இருக்கு. எப்போ என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் பத்திரிகையில எழுதிகிட்டிருந்த போது வயசு இருபத்திரெண்டு. சின்ன பையன். எங்கே போனாலும் சந்தேகம் வராது. அப்போ பிபிசி தொலைக்காட்சி மிஸ்ஸிங் பர்சன்ஸ்ன்னு ஒரு டாக்குமெண்ட்ரி தயாரிச்சாங்க. நான் இதுபற்றி வெஸ்ட் ஈஸ்டர்ன் ஹெரால்டுல ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதனால பிபிசி டாக்கு குழு கூட சேர்ந்து வொர்க் பண்ற வாய்ப்பு கிடைத்தது. அதுதான் விஷுவல் மீடியா மேல எனக்கு ஆர்வம் வர காரணமாக இருந்தது."

விஷுவல் கம்யூனிகேஷன் குறித்து முறைப்படி கற்க தமிழகம் வந்த சோமிதரன், சென்னை லயோலா கல்லூரியில் வஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை தேர்வு செய்தார். அவரை அத்துறையில் ஊக்குவித்தவர்கள் என லயோலா ராஜநாயகம் அடிகளார் சரிநிகர் பத்திரிகையின் ஆசிரியர்கள் சிவகுமார், கவிஞர் சேரன் ஆகியோரின் பெயரை குறிப்பிடுகிறார். 2005-ம் ஆண்டு சிவகுமாரும், சோமிதரனும் யாழ் நூலக எரிப்பு குறித்த ஆவணங்களை சேகரிக்கத் தொடங்குகின்றனர்.

"நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதுதான் முதன் முதலாக யாழ் நூலகத்தை பார்க்கிறேன். அப்போ புலிகள் யாழ் கோட்டையை பிடித்தார்கள். இது அங்கே ஒரே பேச்சா இருந்தது. புலிகளுக்கு உதவி செய்ய பங்கர் தோண்ட பள்ளியில் படிச்ச பெரிய பையன்கள் செல்வார்கள். அப்படி அவங்க போன பேருந்தில் சின்னப் பையன் நானும் ஏறிப் போனேன். அப்போ பேருந்தெல்லாம் யாழில் ரொம்ப அபூர்வம்."

தனது அம்மா மூலமாக யாழ் நூலகம் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்கிறார் சோமிதரன். அன்றைய ஞாபக அடுக்குகளை நினைவுப்படுத்திப் பார்க்கும்போது, யாழ் நூலகத்தை அப்போது தமிழ்ச் சமூகம் மறந்துவிட்டது என்கிறார் சோமிதரன். யாழ் பொது நூலகம் தமிழரின் சொத்து, ஒரு இனத்தின் ஒரு கலாச்சாரத்தின் அடையாளம். அதன் மீதான தாக்குதல் ஒரு இனத்தின் மீதான உச்சபட்ச வன்முறை... ஒரு கலாச்சாரம் எதிர்கொண்ட ஆகக்கொடிய பேரிழப்பு.

"1933-ல் கே.எம். செல்லப்பாங்கிறவர் ஒரு நூலகம் வேணும் என்று கடிதம் எழுதுகிறார். இதுதான் யாழ் நூலகத்துக்கான முதல் முயற்சி. 34-ல் நூலகம் சின்ன அளவில் செயல்படத் தொடங்குகிறது. புத்தகங்கள் அதிகமாக சேர ஆரம்பித்ததும் நூலகத்தை மாநகராட்சி கிட்ட ஒப்படைக்கிறாங்க. புத்தகங்கள் அதிகமாக சேர ஆரம்பிச்சதும் நூலகத்திற்கு பெரிய கட்டடம் கட்ட முடிவு பண்றாங்க. நூலகத்துக்கான டிஸைனை வடிவமைத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ஆர். ரங்கநாதன், புகழ்பெற்ற லைப்ரரியன். கட்டடத்துக்கான டிஸைனை உருவாக்கியது தமிழ்நாட்டைச் சேர்ந்த நரசிம்மன். திராவிட பாணியில் நூலகத்தை அவர் அமைக்கிறார். 1954-ல் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்க தூதுவர்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்படுகிறது. இந்திய அரசு நூலகத்துக்கு பத்தாயிரம் ரூபாய் தர்றாங்க. அமெரிக்க அரசு இருபத்திரெண்டாயிரம் டாலர்கள் தருது. இலங்கை அரசு உதவியதா எந்த தடயமும் இல்லை."

1959-ல் அப்போதைய மாநகராட்சி மேயர் ஆல்பிரட் துரையப்பாவால் நூலகம் திறந்து வைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்தும் நூலகத்திற்கு புத்தகங்கள் குவிகின்றன. தனி நபர்களின் அரிய சேகரிப்புகள் பொது நூலகத்தில் சேகரமாகின்றன. தனித்து இயங்கிவந்த அமெரிக்க லைப்ரரியும் ஆயிரக் கணக்கான புத்தகங்களுடன் யாழ் நூலகத்துடன் இணைந்து கொள்கிறது.

webdunia
webdunia photoFILE
"தமிழர் விடுதலை கூட்டணி 1988-ல் தனிநாடு கோரி வட்டுக் கோட்டையில் தீர்மானம் கொண்டு வர்றாங்க. அதற்குப் பிறகு நடந்த தேர்தலில் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி வடகிழக்கில் அமோக வெற்றி பெற்று, அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகிறகார். இலங்கை வரலாற்றில் ஒரு தமிழர் எதிர்க்கட்சித் தலைவரானது அதுதான் முதல் தடவை. அதற்குப் பிறகு யாரும் அந்தப் பதவியில் அமரவில்லையென்பதும் முக்கியமாது."

இது சிங்கள பேரினவாத அரசுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இனப்பிரச்சனைக்கு தீர்வு என்கிற முகமூடியுடன் தமிழரின் அதிகாரத்தைப் பறிக்க மாவட்ட அபிவிருத்தி சபைகள் என்ற ஒன்றை தொடங்கி அதற்கான மோதலை அறிவிக்கிறது.

"உச்சகட்ட பிரச்சாரம் 1981 ஜூன் 31 நடந்து கொண்டிருக்கு. யாழ்ப்பாணத்தில் இல்லாத வெளியூர் சிங்கள போலீசார் குவிக்கப்பட்டிருக்காங்க. சிங்கள காடையர்களும் நூற்றுக்கணக்கில் வெளியூரிலிருந்து யாழில் தங்கவைக்கப் பட்டிருந்தார்கள். 31 இரவு மேயர் விசுவநாதன் பேசுகிற கூட்டத்தில் அவரது பாதுகாப்பு போலீஸ் ஒருத்தரை யாரோ சுட்டுவிடுகிறார்கள். உடனே அவரை காரில் மருத்துவமனைக்கு கொண்டு போகிறார்கள். கார் திரும்பி வரும்போது சிங்கள ராணுவத்தால் கார் தடுத்து நிறுத்தப்பட்டு முற்றிலுமாக எரிக்கப்படுது. பேசியது தமிழன், சுடப்பட்டது தமிழன், ஆனால் அதையே காரணமாக வைத்து சிங்கள போலீசும், சிங்கள காடையர்களும் யாழ்ப்பாணத்தை எரிக்கிறார்கள். கலவரம் மறுநாளும் தொடர்கிறது. ஜூன் ஒன்று காலை பத்து மணிக்கு 97,000 அரிய நூல்கள், ஓலைச் சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளுடன் யாழ் நூலகம் எரிக்கப்படுகிறது. இலங்கையின் முதல் பிராந்திய பத்திரிகையான ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தையும் அவர்கள் முற்றிலுமாக எரிக்கிறார்கள்."

webdunia
webdunia photoFILE
ஒரு இனத்தின் அறிவுச் செல்வத்தை எரிப்தென்பது அந்த இனத்தை, கலாச்சாரத்தை அழிப்பதற்கு ஒப்பானது என்று கூறும் சோமிதரன், அந்த அழிவு குறித்து எந்தப் பதிவும் தமிழர்களிடையே இல்லை என குறைபட்டுக் கொள்கிறார். சில பத்திகள், சில கவிதைகள், சுஜாதா எழுதிய ஒரு சிறுகதை என அந்த அழிவுச் சம்பவம் மிகக் குறுகிய பதிவுகளுடன் நின்றுபோனது.

"யாழ் நூலகம் எரிக்கப்பட்ட 25வது ஆண்டு தினத்தில் அதுபற்றிய ஆவணப் படத்தை கொண்டு வரணும் என்பதற்காக நானும் சரிநிகர் சிவகுமாரும் அதுபற்றிய விடங்களை சேகரிக்கத் தொடங்கினோம். தமிழ்ச் சமூகம் எதையும் ஆவணப்படுத்தியது இல்லை. அதுவும் யாழை பொறுத்தவரை இன்றிருப்பது நாளை இருக்காது. ஆவணப் படம் எடுப்பது சிரமமாகவே இருந்தது. யாழில் பகிறங்கமாக கேமரா எடுத்துச் செல்ல முடியாது. படப்பிடிப்புக்கு அங்குள்ள சிங்கள கேமராமேன் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தேன். முதல் நாள் இரவு நாங்கள் போக வேண்டிய பகுதியில் குண்டு வெடிக்கவே, அந்த கேமராமேன் வரமுடியாது என்று கூறிவிட்டார். பிறகு நண்பர் ஒருவரிடமிருந்து கேமராவை வாடகைக்கு எடுத்து நானே ஷூட் செய்தேன்."

யாழ் நூலகம் ராணுவத்தின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறது. பத்தடிக்கு ஒரு சிங்க ராணுவ வீரன். ரிசர்ச் ஸ்டூடண்ட் என்று கூறியே, யாழ் நூலகத்தை படம் பிடித்துள்ளார் சோமிதரன்.

"1981-ல் நூலகம் எரிக்கப்பட்ட பிறகு தமிழர்கள் அனைவரும் ஒரு புத்தகம் அல்லது செங்கல் தரவேண்டும் என்று இயக்கம் நடத்தி 1984-ல் மீண்டும் நூலகத்தை திறக்கிறாங்க. நூலகம் கட்டும்போது இரண்டு பிளான்கள் இருந்தது. ஒரு பிளானில் தான் கட்டடம் கட்டப்பட்டது. அதுதான் எரிக்கப்பட்டது. அனை நினைவுச் சின்னமாக வைத்துவிட்டு பிளான் இரண்டில் புதிதாக நூலகம் ஒன்றை 1984-ல் திறந்தார்கள். 1985 மே 9 அந்த கட்டடமும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது."

வன்கொடுமையின் அடையாளமாகவும் சாட்சியாகவும் நின்ற யாழ் நூலகத்தை புதுப்பித்து, சமாதானத்தின், அமைதியின் போலி அங்கி தரிக்க சந்திரிகா தலைமையிலான அரசு விரும்பியது. உலக அரங்கில் தனது கொடூர முகத்தை ஒளித்து வைக்க சந்திரிகாவுக்கு அது தேவையாக இருந்தது.

webdunia
webdunia photoFILE
"2004-ல் குண்டு வைத்த நூலகத்தை அதை நினைவுச் சின்னமாக வைக்க வேண்டும் என்ற தமிழர்களின் வேண்டுகோளை நிராகரித்து, சிதைந்த கட்டடத்தையே புனரமைத்தார் சந்திரிகா."

சோமிதரனின் ஆவணப் படம் யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்த 2006 ஜூன் 1-லிருந்து தொடங்குகிறது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ் நூலகம் படத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கு முதல் நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய மேயர் விசுவநாதன், சந்திரிகாவின் யாழ் நூலக புனரமைப்பு குழுவில் இடம்பெற்ற முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா, அரசியல் விமர்சகர்கள், யாழ் நூலகர்கள் என அனைவரின் பேட்டிகளும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

"யாழ் நூலகம் எரிக்கப்பட்ட போது அப்போதைய அமைச்சர்கள் காமினி திஸநாயக்க, சிறில் மத்தேயு இருவரும் யாழ்பாணத்தில்தான் இருந்தனர். அன்று பிரதமராக இருந்தவர் பிரேமதாசா. 1991-ல் பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு எதிராக கட்சிக்குள் செயல்பட்டவர் காமினி திஸநாயக்கே. யாழ் நூலகத்தை யார் எரிக்க காரணமாயிருந்தார்களோ அவர்கள்தான் இப்போது எனக்கு எதிராக கட்சியில் செயல்படுகிறார்கள் என்றார் பிரேமதாச. அரசால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒரு பேரழிவு என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

பிரேமதாசாவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர, சிங்கள அரசே இதை முன்னின்று நடத்தியதை, அதற்கு வாழும் சாட்சியாக இன்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களின் பேட்டிகளை, இன்றும் தணியாத அந்த கொடுமையின் கொந்தளிப்பை, புனரமைக்கப்பட்ட நூலகத்தை தமிழ் கலாச்சார அழிவின் கல்லறையாகப் பார்க்கும் மனநிலையை சிரத்தையாக பதிவு செய்துள்ளது சோமிதரனின் எரியும் நினைவுகள்.

webdunia
webdunia photoWD
"யாழ் நூலகம் யாழ்ப்பாண தமிழருக்கு மட்டுமானதல்ல. அது உலகில் உள்ள எல்லா தமிழழக்குமானது. உலகின் எல்லாப் பகுதிகளிலிருக்கூம் தமிழர்களின் பங்களிப்பும் அதில் இருக்கிறது. அதை வடிவமைத்ததும் கட்டியதும் தமிழ்நாட்டு தமிழர்கள். ராமேஸ்வரத்தில் இருந்து யாழ் சென்று புத்தகங்களை லெண்டிங் எடுத்து படித்திருக்கிறார்கள். சரஸ்வதி மகால் எப்படி தஞ்சையிலுள்ளவர்களுக்கு மட்டுமல்லாது எல்லா தமிழர்களுக்கும் சொந்தமோ அதுபோல்தான் யாழ் நூலகமும். அது எரிக்கப்பட்ட பிறகே இலங்கையில் இன மோதல் பெருமளவில் வெடித்தது. அப்படிப்பட்ட பேரழிவு குறித்து எந்தத் தடயமும் ஆவணமும் நம்மிடையே இல்லை. யாழ் நூலகம் எரித்த 25வது ஆண்டு தினத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். அங்கு ஒரு நினைவுக் கூட்டம் கூட நடத்தப்படவில்லை. என்னுடைய ஆவண்பபடம் தமிழர்களுக்கு அதனை நினைவூட்டினால் அதுவே போதுமானது."

Share this Story:

Follow Webdunia tamil