'வைரம் மூவிஸ்' பட நிறுவனம் சார்பாக 'புதிய பயணம்' என்ற படத்தை இயக்குவதோடு, ஹீரோவாகவும் நடிக்கிறார் எம்.டி. முத்து. எம்.எஸ்.சி பட்டதாரியான இவர் இதுவரை காதலை இதுபோல வித்தியாசமான முறையில் யாரும் சொன்னதில்லை என்று கூறுகிறார்.
அவரை நமது வெப்துனியாவுக்காக சந்தித்தோம்...
சினிமாவின் தாக்கம் உங்களுக்கு எப்படி வந்தது? எப்போது வந்தது?
பத்தாம் பகுப்பு படிக்கும் போதே எனக்கு சினிமா மேல ஒரு மோகம் வந்திருச்சி. அப்போ வந்த படங்கள் ஒவ்வொன்றையும் குறைந்தது ஐந்து முறையாவது பார்த்துடுவேன். வழக்கமா எல்லோரும் படம் பார்க்க போவாங்க ஆனா நான் பள்ளிக் கூடத்துக்கு போற மாதிரி கையில ஒரு நோட்டு புக்கோட போவேன். முதல் தடவை படத்தை ரசிக்கப் போவேன். இரண்டாவது தடவை போறப்போ நோட்டோட போயி முதல் காட்சியில இருந்து படம் முடிகிற வரைக்கும் ஒவ்வொரு சீன்லயும் யார் யார் வர்றாங்க அடுத்த அடுத்த சீன்கள் என்ன வருதுன்னு ஒரு சீனுக்கு ஒரு பக்கமா எழுதிக்குவேன். கூட வர்ற நண்பனுங்க எல்லாம் 'வந்துட்டான்யா சினிமா சிற்பி'ன்னு கிண்டல் பண்ணுவாங்க. ஆனா நான் அதையெல்லாம் கண்டுக்கமாட்டேன். அப்புறம் வீட்டுக்கு வந்து அதை தெளிவா சீன் ஆர்டர்படி எழுதிக்குவேன். இப்படித்தான் சினிமாவை பழகினேன்
அப்படி யாரோட இயக்கம் உங்களை மிகவும் பாதித்தது?
இயக்குனர் ஸ்ரீதர், பாலசந்தர், மணிரத்னம் இவங்களோட படம்னா கண்டிப்பா பல தடவை பார்த்துடுவேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்துல பாதிச்சிருக்காங்க. ஸ்ரீதர் சாரோட படங்கள்ல அழுத்தமான கதையிருக்கும். கொஞ்சம் கூட குழப்பமே இல்லாம சொல்ல வந்ததை சுருக்கமா அழகா சொல்லுவாரு. காட்சி மக்களுக்கு நல்லா புரியனுங்கிறதுக்காக நிறைய காட்சிகள் 'குளோசப்ல' இருக்கும் முகம் மட்டும் திரை முழுக்க இருந்தாலும் ரசிக்கும்படியா இருக்கும்.
அதே போல பாலசந்தர் சார் இருபது வருஷத்துக்கு முன்னாடி என்ன நடக்குமோ அதை முன்கூட்டியே திரையில சொல்லுற தைரியம் என்னை பிரம்மிக்க வெச்சிருக்கு. இதுக்கு அவரோட பல படங்களை உதாரணமாக சொல்லலாம். அப்புறம் மணிரத்னம் வழ, வழா வசனமெல்லாம் இருக்காது. டையலாக்கே இல்லாம ஒரு விஷயத்தை புரிய வைக்கறதுன்னா அது மணிசாரால மட்டும்தான் முடியும். அதேபோல காட்சிகள்ல ப்யூட்டி இருக்கும். அதனால இவங்களோட படங்கள் எனக்கு பாடமா அமைந்தது.
சினிமாவில் யாரைப்போல வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வந்தீர்கள்?யாரைப்போலவும் இல்லாம புதுசாத் தெரியனும். என்னோட படம்னா தனியா தெரியணும். அதுக்காகத்தான் போராடிகிட்டு இருக்கேன். அதேமாதரி படம் பாக்குற மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்கணும். சும்மா பொழுது போக்குக்காக மட்டும் ஒரு படத்தைக் கொடுக்கிறதுல எனக்கு உடன்பாடில்லை. அப்படி பணிணினா அது வேஸ்ட். படத்தை இயக்குவதோடு, ஹீரோவாகவும் நடிக்கிறீர்கள். இதற்குமுன் யாரிடமாவது சான்ஸ் கேட்டு போனதுண்டா?இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ள வாய்ப்பு பேட்டு அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்றேன். ஏற்கனவே நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கே வாய்ப்பு கொடுக்கமுடியவில்லை என்று கூறிவிட்டார். முதலில் உதவி இயக்குனராக இருந்து பின் நடிக்கலாம் என்ற திட்டத்தில்தான் உதவி இயக்குனராக வாய்ப்பு கேட்டு போனேன். அதற்கப்புறம் யாரிடமும் வாய்ப்புக் கேட்டு சென்றதில்லை. ஆனாலும் எனக்குள் இந்த சினிமா மோகம் இருந்துக்கிட்டே இருந்தது. எனக்கு என்னென்னா எந்த ஒரு சின்ன விஷயத்தையும் அழகா கதையாக்குகிற திறமை எனக்குள்ள இருந்தது. இந்தக் கதைக்கூட ஒரு சின்ன 'ஸ்பார்க்' தான் அதை அப்படியே டெவலப் செய்து காதல், சென்டிமெண்ட் கதையாக்கிவிட்டேன். இந்த படத்தின் கதை என்னவென்று சொல்லுங்கள்?
இதை கதையா சொல்றதைவிட ஒரு சம்பவத்தை நேரடியாக பார்க்கிற மாதிரி இருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் ஒரு விஷயம் இருக்கும். ஆண்களையே வெறுக்கும் ஒரு பெண்ணோட மனதில் முதல்முதலா ஒரு காதல் நுழையுது. அப்படி நுழையும்போது அவருக்கு ஏற்படுகிற அந்த உணர்வுப்பூர்வமான, மென்மையான மாற்றங்கள் என்ன. காதலுக்குப்பின் அவள் அடைந்த குதூகலங்கள் அதனால் அவள் அடைந்த விஷயம் பற்றியெல்லாம் அழகா சொல்லியிருக்கேன். புறா தூது டெலிபோன், பாட்டு, கவிதை, நேரடியா எஸ்.எம்.எஸ். லவ்லெட்டர் இப்படி எத்தனையோ விதத்துல காதலை சொல்லியிருக்காங்க. ஆனா நான் இதையெல்லாத்தையும் விட்டுட்டு புதுமையா காதலை சொல்லியிருக்கேன். வித்தியாசமா, புதுமையா இருக்கும்.
நீங்கள் சினிமா துறைக்கு வந்தது பற்றி வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
என்னோட திறமையை கண்டுபிடித்து சொன்னதே என் அம்மாதான். குடும்பத்துல மூத்த பையன் நான்தான் குடும்பப் பொறுப்புகள் எவ்வளவோ இருந்தும் என்னை வாழ்த்தி அனுப்பி வெச்சிருக்காங்க. பள்ளிக்கூடம் படிக்கிறப்பவே சினிமாவுக்கு போயிட்டுவான்னு அனுப்புவாங்க. காரணம் நான் படிப்பிலும் கெட்டிக்காரன்.
இன்னைக்கு நான் ஹீரோ ஆனதுக்கும், இயக்குனரா ஆனதுக்கும் என் அம்மோவாட தூண்டுதல்தான் காரணம். உனக்கு திறமை இருக்கு. சினிமாவுல நிச்சயம் பெரிய ஆளா வருவேன்னு சொன்னதும் அம்மாதான். ஷுட்டிங் நடந்த ஒவ்வொரு நாளும் போன் பண்ணி இன்னைக்கு என்ன சீன் எடுத்தீங்க, படம் எப்படி வந்துக்கிட்டு இருக்குன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க.
இதுவரை எத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது?
25 நாட்கள் நடந்து முடிந்துவிட்டது. இன்னும் முப்பது நாட்கள் பாக்கியிருக்கின்றன. இரண்டு பாடல்க்ள் மற்றம் ஒரு சண்டைக்காட்சி எடுக்கப்பட்டுவிட்டது. ஏவிஎம், ஏஆர்எஸ் கார்டன், புஷ்பா கார்டன், எம்.ஜி,ஆர். பிலிம்சிட்டி, பீச் என பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது, 'இதயம் காணலையே' என்ற பாடலுக்கு வெளிநாடு சென்று படம்பிடிக்க இருக்கிறோம்.
இந்தப் படத்தின் நடிக, நடிகைகள் மற்றும் டெக்னீஷியன் பற்றி சொல்லுங்களேன்?
படத்தோட நாயகியா மாமதுரை படத்துல நடிச்ச மிதுனா நடிக்கிறாங்க. அப்புறம் கில்லி படத்துல விஜய் தங்கையா நடிச்ச ஜெனிபர் நடிக்கிறாங்க. அப்புறம் மனோரமா, டெல்லிகணேஷ், நளினி, சார்லி, தேவதர்சினி-சேத்தன், அல்வா வாசு, ஆர்த்தி இப்படி நிறையபேர் நடிக்கிறாங்க. படத்தோட ஒளிப்பதிவாளர் கே.வி. மணி. நிறைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அனுபவசாலி. இசை - பிரசாத் கணேஷ். எட்டு பாடல்கள் அத்தனையும் ஹிட் பாடல்களா போட்டுக் கொடுத்திருக்காங்க. பாடல்கள் எம்.ஜி. கன்னியப்பன், எஸ்.ஆர்.பாவலன், பாரதிகல்யாண், வீர ஆதித்யன் எழுதியிருக்காங்க. நடனம்- சிவசங்கர், வின்சென்ட், எடிட்டிங்- சலீம் ஸ்டண்ட்- ஸ்டண்ட் எஸ். குணா. 'வைரம் மூவிஸ்' சார்பாக மெஹமத்ரபி படத்தை தயாரிக்கிறார். இணை தயாரிப்பு- ஹீராஜான், எல். கருணாநிதி.
எப்போது படம் வெளியிட இருக்கிறீர்கள்?
அனைவரோட ஒத்துழைப்பும் நல்லபடியா இருக்கு. முதல் முதலா டைரக்ட் பண்றேங்கிற மாதிரி இல்லாம எல்லா நடிக, நடிகைகள், டெக்னீஷியன்கள் எல்லோருமே பம்பரமா சுழன்று வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம். மனோரமா ஆச்சி, டெல்லி கணேஷ், சார்லி எல்லாம் ரொம்ப சீனியர்கள் அவர்கள் எல்லாம் படம் நல்லா வரணும்கிறதுக்காக ரொம்பவும் சிரத்தை எடுத்துக்கொண்டு நடிச்சிக்கிட்டு வர்றாங்க. பாதிபடம் முடிந்த மாதிரிதான். இன்னும் ஒரு மாத படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகளும் நடந்து முடிக்க குறைந்தது இரண்டு மாதமாவது வேணும். எப்படியும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்ல படம் ரிலீஸ் செய்துடுவோம். படம் பாருங்க உங்களோட உண்மையான விமர்சனத்தை சொல்லுங்க.