தோல் சீவிய தக்காளி போலிருக்கிறார் நதியா. இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்று கற்பூரம் அடித்துச் சொன்னாலும் நம்ப முடியாத தோற்றம். திருமணமான பின் நடிக்க வந்தவர்களில் இவர்தான் டாப். இத்தனைக்கும் ஒரு டஜன் நிபந்தனைகளுக்குப் பிறகே கால்ஷீட் தருகிறார். தன்னைப் பற்றிய நதியாவின் தடாலடி பேட்டியிலிருந்து...
பட்டாளம் படத்தில் நீங்கள்தான் ஹீரோயினாமே?
பட்டாளம் படத்தின் லீட் நடிகை நான்தான். மற்ற ஒன்பது பேரும் புதுமுகங்கள். இதில், கண்டிப்பான பள்ளி தாளாளராக இல்லாமல் மாணவர்களுடன் நட்புடன் பழகும் தாளாளராக நடிக்கிறேன். இந்த வேடம் எனக்குப் பிடித்திருந்ததால் நடிக்கிறேன்.
நீங்கள் நிறைய நிபந்தனைகள் போடுவதாக குற்றச்சாட்டு இருக்கிறதே?
திருமணத்துக்கு முன்பே நிறைய நிபந்தனைகள் போட்டு, அதற்கு ஒத்துக்கொண்டால் மட்டுமே நடிப்பேன். இப்போது திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாய். முன்பைவிட நிறைய நிபந்தனைகளுடன்தான் நடிக்க ஒப்புக்கொள்வேன்.
ஒரு படத்தை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
படத்தில் எனக்கே முக்கியத்தும் இருக்க வேண்டும். கேரக்டர் பிடிக்க வேண்டும். நல்லவேளையாக அப்படிப்பட்ட வேடங்கள்தான் என்னைத் தேடி வருகின்றன.
நீங்கள் அதிகம் சம்பளம் கேட்பதாக இன்னொரு குற்றச்சாட்டும் இருக்கிறதே. குறிப்பாக, ஹீரோயின்களைவிட அதிக சம்பளம் கேட்பதாக...?
நான் நடித்த எல்லாப் படங்களிலும் புதுமுகங்கள்தான் ஹீரோயின்கள். என்னுடைய கேரக்டருக்குதான் முக்கியத்துவம் இருக்கும். அதற்குத் தகுந்தபடிதான் சம்பளம் கேட்கிறேன்.
ஜோடியாக நடிப்பதை ஏன் தவிர்க்கிறீர்கள்?
நான் ஜோடியாக நடிக்காதது எதேச்சையாக நடந்தது. நானாக விரும்பி ஏற்படுத்திக் கொண்டதில்லை.
உங்கள் பழைய ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தால்...?
தாராளமாக சேர்ந்து நடிப்பேன்!
இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தால்...?
நல்ல கதையென்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை.
'சண்டை' படத்தில் சுந்தர். சி உங்களை தூக்கி வருவது போன்ற காட்சியில் நீங்கள் நடிக்க மறுத்தது உண்மையா?
அந்தக் காட்சியில் நான் நடிக்கவில்லை. டூப்பை பயன்படுத்தினார்கள்.
உங்கள் இளமையின் ரகசியம்?
உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நான் பட்டினி எல்லாம் கிடப்பதில்லை. எல்லோரையும் போல சாப்பிடுவேன், உடற்பயிற்சி செய்வேன். இப்போது கொஞ்சம் அதிகமாக உடற்பயிற்சி செய்கிறேன், அவ்வளவுதான்!