'நெஞ்சைத் தொடு' புதுமுகம் ஜெமினி - லட்சுமிராய் நடித்து வெளியான படம். இயக்குனர் பாக்யராஜ், 'ரெட்டை சடை வயசு', ஆயுத பூஜை' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சி. சிவகுமார் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக இருந்து தொழில் கற்றவர். தற்போது இரண்டாவது படமாக 'காட்டான்' எனும் பெயர் கொண்ட படத்தை இயக்கவுள்ளார். அவரிடம் நமது வெப்துனியாவுக்காக சந்தித்தபோது...
உங்களுடைய சொந்த ஊர் எது. எப்படி சினிமா ஆர்வம் ஏற்பட்டது?
என்னோட சொந்த ஊர் புதுக்கோட்டையில இருக்கிற பொன்னமராவதி. எனக்கு சினிமா ஆர்வம் பள்ளிக்கூடம் படிக்கும்போதே இருந்தது. எங்க ஊர்ல இருந்த அலங்கார், மீனா ரெண்டு தியேட்டர்கள் இருக்கும். டிக்கெட்டுக்கான காசை கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு படத்துக்கு ஓடிடுவேன். அப்போ பாலசந்தர், பாரதிராஜா அப்புறம் பாக்யராஜ் எல்லாரும் கொடிகட்டி பறந்தாங்க.
அவங்களோட ஒரு படத்தையும் நான் பார்க்காம விட்டதில்லை. 'சுவர் இல்லாத சித்திரங்கள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அந்த ஏழு நாட்கள்', 'நீர்க்குமிழி' போன்ற படங்களைப் பார்த்து அதோட வெற்றி ·பார்முலா என்னங்கறத தெரிஞ்சுகிட்டேன். அதே மாதிரி மணிரத்னம் சாரோட படங்களையும் பார்த்து அவரோட மேக்கிங் ஸ்டைலைப் பார்த்து வியந்திருக்கேன். அதேபோல யாஷ் சோப்ரா. சுராஜ் ஆர். பார்த்தியாயா இயக்கின இந்தி படங்களும் பார்த்தேன். 'வசந்த மாளிகை', 'வருஷம் 16' படங்களை எத்தனை தடவை பார்த்தேன்று எனக்கே தெரியாது. அதுக்கப்புறம் விக்ரமன், பாசில், மணிரத்னம் சாரோட பங்களை விரும்பி பார்த்தேன்.
சென்னைக்கு நீங்கள் வந்ததுமே உதவி இயக்குனர் வாய்ப்பு கிடைத்துவிட்டதா?
அப்போது இருந்த எல்லா இயக்குனர்கள்கிட்டயும் தினம் வாய்ப்பு தேடி அலைவேன். கிடைக்கல, ஆனாலும் சோர்ந்து போகாம விடா முயற்சியோட பாக்யராஜ் சாரை மட்டும் பார்த்துகிட்டே இருந்தேன். அவர் மூலமா கோ-டைரக்டர் மெய்யப்பன் சாரோட அறிமுகம் கெடைச்சி சிவகுமார் சார்கிட்ட உதவி இயக்குனரா சேர்ந்தேன். அப்படி சேர்ந்ததுக்கும் ஒரு கதை இருக்கு. சிவகுமார் சாரும் அவரோட நண்பரும் 'தில்வாலியே துல்ஹானியா லேஜாயங்கே' படத்துக்கு ரெண்டு தடவை வந்தும் டிக்கெட் கிடைக்காம திரும்பிப் போனதைப் பார்த்த நான் மூணாவது நாள் டிக்கெட்டோட தியேட்டர் வாசல்ல காத்துக்கிட்டு இருந்தேன். அன்னைக்கும் அவங்க டிக்கெட் கிடைக்காமப் போக, நான் எதேச்சையா பார்த்த மாதிரி என்கிட்ட இருந்த டிக்கெட்டை கொடுத்து படம் பார்க்க வெச்சேன்.
அதுக்கப்புறம் ஒரு வாரம் அவர் கண்லயே படாம திடீர்னு ஒரு நாள் முன்னாடி போயி நின்னேன். என்னப்பா 'அன்னைக்கு இடைவேளை விட்டதும் தேடினேன், ஆளக்காணுமே' என்றார். அப்படி பார்த்திருந்தா தேங்ஸ்னு சொல்லிட்டு போயிருப்பீங்க. அதனாலதான் சார் ஒரு வாரம் கழிச்சி பார்க்க வந்தேன்றதையும், என் ஆர்வத்தையும் சொல்ல உடனே 'ரெட்டை ஜடை வயசுல' சேர்த்துக்கிட்டார். அதுக்குப் பின்னாடி பாக்யராஜ் சாரோட டிஸ்கஷன், அப்புறம் 15 குறும்படம், எட்டு சீரியல்ல வேலை பார்த்தேன். அதுக்கப்புறம்தான் 'நெஞ்சைத் தொடு' படம் இயக்கும் வாய்ப்பு நண்பர் கிட்டு மூலம் கிடைச்சது. அதேபோல, என் மூத்த அண்ணன் நாகராஜன் மூலமாவும் நிறைய ஒத்துழைப்பு கெடைச்சது.
உங்கள் அடுத்தப் படமான 'காட்டான்' படத்தைப் பற்றி சொல்லுங்கள்?
ஆரம்பத்துல 'காட்டான்'னு தலைப்பு வெச்சேன். ஆனா அதே சாயல்ல இன்னொரு டைட்டிலும் பேப்பர்ல வந்ததால நான் வேற பெயர் தேடிட்டு இருக்கேன். இந்த கதையோட நாயகன் காட்டான் மாதிரிதான் இருப்பான். எதை செஞ்சாலும் காட்டுத்தனமா இருக்கும். வீட்டுக்கும் ஊருக்கும் அடங்காதவனை காட்டான் மாதிரி வளர்ந்திருக்கான் பாருன்னு சொல்லுவாங்க. அதே மாதிரி ஒருத்தருக்கும் கட்டுப்படாதவன்தான் இந்தப் படத்தோட ஹீரோ. முதல் படத்துல காதல், செண்டிமெண்ட் எல்லாம் வெச்சிருக்கேன். அதுக்கு முற்றிலும் மாறுபட்ட படம் இது. முழுக்க முழுக்க ஆக்சன்தான். மதுரை-காரைக்குடி இடைப்பட்ட ஊர்ல நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தான் இதுல காட்டப் போறேன்.
அடிதடி, வெட்டுக்குத்து, கலவரம் எல்லாம் உண்டு. கதையோட மெயின் 'தீம்'னு பார்த்தீங்கன்னா ரவுடியிசம், வன்முறை வேணாங்கறதுதான். ஆனா ஆக்சன் மூலமாத்தான் அதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒருத்தன் ரவுடியிசத்தை கையில எடுத்ததால பின்னாடி என்னென்ன மாதிரியெல்லாம் கஷ்டப்படறான்னு சொல்ற படமாவும், ரவுடித்தனம் செய்யறவங்க மனசுல ஒரு பயத்தை உண்டாக்கவும், யாரும் இனிமே ரவுடியாகி வன்முறையில இறங்கக் கூடாதுன்னு எடுத்துக் காட்டுற படமாவும் இது இருக்கும். அதுக்கா ஆள் உயரமா, மாநிறமான ஹீரோ தேடிட்டு இருக்கேன்.
சென்ற படத்திலும் புது ஹீரோ. இந்தப் படத்திலும் புது ஹீரோ 'ரிஸ்க்' எடுப்பதாகத் தோன்றவில்லையா?
இந்தக் கதைக்கு எந்த சாயலும் இல்லாத ஒரு பையன் தேவைப்படறான். அப்படி ஏற்கனவே இருக்கிற ஹீரோவைப் போட்டாலும் சுத்தமாக மேக்கப் போட்டு மாத்தியாகணும். அதுக்கு ஒரு நல்ல புது ஹீரோவையே அறிமுகம் செய்யலாம்னு இருக்கேன்.
'நெஞ்சைத் தொடு'வில் காமெடி சீன்கள் இருந்தும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் போய் சேரவில்லை. இந்தப் படத்தில் காமெடி உண்டா?
இந்தக் கதை ரெடியானதும் முதல்ல வடிவேல் சாரைத்தான் நடிக்க வைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அவர்கிட்ட அதுக்காக பேசி சம்மதமும் வாங்கிட்டேன். போலி டாக்டரா வர்றார். வயிறு வலிக்க வலிக்க சிரிக்கப் போறீங்க. அவர் வர்ற ஒவ்வொரு சீனும் கலகலப்பா இருக்கும். எத்தனையோ கேரக்டர்ல காமெடி பண்ணிட்டார். இந்தப் போலி டாக்டர் கேரக்டர்ல பண்ணல. காமெடி சீன்களும் பிரமாதமா வந்திருக்கு. அவர் கூட சிங்கமுத்து, அல்வா வாசு, போண்டாமணி அப்புறம் மயில்சாமின்னு ஒரு காமெடி பட்டாளமே இருக்கு. அதனால இந்தப் படத்துல காமெடிக்கு பஞ்சம் வராது.
மற்ற டெக்னீஷியன் பற்றி சொல்லுங்கள்?
இந்தப் படத்தோட தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ பெரிய நாயகி ·பிலிம்ஸ் சார்பா கோவையைச் சேர்ந்த விஸ்வநாதன்-ரமேஷ் தயாரிக்கிறாங்க. எந்த தலையீடும் இல்லாம படத்துக்குத் தேவையான அனைத்தும் செஞ்சுக் கொடுத்துட்டு இருக்காங்க. படத்தோட ஹீரோயினியா 'தாமிரபரணி' படத்துல நடிச்ச பானு நடிக்கிறாங்க. பிரகாஷ்ராஜ் சார்கிட்ட பேசிட்டு இருக்கோம். சாயாஜி ஷிண்டே நடிக்கிறார். இசை போன படத்துல பண்ணின ஸ்ரீகாந்த் தேவா. எடிட்டிங் மோகன். இவர் பாக்யராஜ் சாரோட பல படங்களுக்கு எடிட்டரா இருந்தவர். மற்ற டெக்னீஷியன் தேர்ந்தெடுத்துட்டு இருக்கேன்.
படத்தின் மற்ற விஷயங்கள் பாடல், சண்டை காட்சிகள் சொல்லுங்கள்?
படத்துல மொத்தம் நான்கு பாடல்கள், ஐந்து சண்டைக் காட்சிகள் இருக்கு. படத்தோட க்ளைமாக்ஸ் காட்சிக்காக பத்து ஏக்கர் அளவுக்கு செம்மன் காடா தேடிட்டு இருக்கோம். அப்புறம் காரைக்குடி பக்கத்துல இருக்கிற கிராமங்களான பிரான்மலை, வார்பட்டி, சொல்லியப்பட்டி, இங்க நடந்த உண்மை சம்பவங்களை அந்தந்த ஊர்களுக்கே போய் 'ஷ¥ட்' பண்ணப் போறேன். அடுத்த ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் ரிலீஸ் பண்ண இருக்கோம். இதையடுத்து ஜீவன் இல்லன்னா பரத் இவங்களை வெச்சி பெரிய பட்ஜெட் படம் ஒண்ணு இயக்க இருக்கேன். ரியல் எஸ்டேட் பண்ணிட்டு இருக்கிற சுந்தர்-ஜெலன் தான் தயாரிக்கிறாங்க. அதுவும் ஒரு ஆக்சன் படம்தான்.
இனி வர்ற ஒவ்வொரு படத்திலும் இன்னொரு ராஜ்கண்ணனா தெரியனும்னு ஆசைப்படறேன். தெரியவும் செய்வேன். ஆரம்பத்துல ஆக்சன் படம் இயக்க ஆர்வமில்லாம இருந்த எனக்கு தொடர்ந்து ஆக்சன் படமா வர்றதால முழு மூச்சா ஆக்சன்ல இறங்கிட்டேன். எல்லாம் என் குலதெய்வத்தோட செயல்தான்.