வ. கெளதமன் தான் படைக்கும் ஒரு படைப்பு, தான் சார்ந்துள்ள சமூகத்தின் முன்னேற்றத்தை ஒரு அங்குலமாவது உயர்த்துவதாய் அமைய வேண்டும் என்ற நோக்கமும், எண்ணமும் கொண்ட படைப்பாளிகளின் வரிசைகளில் குறிப்பிடத்தக்கவர்.
"கனவே கலையாதே" படத்தின் இயக்குநரான இவரது ஆட்டோ சங்கர் தொடரும், தற்போது வெளிவந்துகொண்டுள்ள சந்தனக்காடு தொடரும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்வுகளை உண்டுபண்ணியுள்ளது. திரைப்படங்கள் குறித்தும், தனது தொடர்கள் குறித்து கெளதமன் அளித்த பேட்டியிலிருந்து...
ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கும், தொலைக்காட்சி தொடர் இயக்குவதற்குமான வித்தியாசங்களாய் எதைச் சொல்லுவீர்கள்?
என்னைப் பொறுத்தவரை ஒரு வித்தியாசமும் இல்லை என்றுதான் சொல்லுவேன். இரண்டையுமே நான் என்னுடைய படைப்பாக, பங்களிப்பாகத்தான் பார்க்கிறேன். இதில் எந்தவித பாகுபாடும் எனக்கில்லை. நாம் சரியான விதத்தில் கொடுத்தோமானால் பார்வையாளனும் இதில் வித்தியாசம் பார்க்கமாட்டான். என்னைப் பொறுத்தமட்டில் ஒரு சதவீதம் கூட திரைப்படத்துக்கும், தொடருக்கும் ஒரு இயக்குநர் வித்தியாசம் பார்க்கக்கூடாது என்பது என் கொள்கை.
ஆட்டோ சங்கர், வீரப்பன், போன்றவர்கள் வில்லன்களாக, எதிர் பண்புகள் கொண்டவர்களாக மக்கள் மத்தியில் சித்தரிக்கப்பட்டவர்கள். இவர்களைப் பற்றிய கதையை செய்வதில் உங்களுக்கு தயக்கம் இருந்ததா?
கொலை செய்பவனைவிட, அந்தக் கொலையை செய்யத் தூண்டுபவன்தான் குற்றவாளி என்கிறது சட்டம். அப்படிப் பார்க்கையில் ஆட்டோ சங்கரும், வீரப்பனும் உருவாகக் காரணமாக இருந்தது என்ன? அதுபோன்ற காரணங்கள் என்ற கள்ளிச் செடிகள் களையப்பட வேண்டாமா என்ற நோக்கத்தின் அடிப்படையில் யோசித்தபோது, நீங்கள் கேட்ட தயக்கம் என்னிடமிருந்து தகர்ந்து போனது.
என்னதான் இருந்தாலும் கொலைகளும், குற்றங்களும் புரிந்த குற்றவாளிதானே வீரப்பன்?
வீரப்பன் செய்த கொலைகளுக்கும், சில அட்டூழியங்களுக்கும் நான் வக்காலத்து வாங்கவில்லை. எனக்கும் இதில் உடன்பாடு இல்லைதான். ஆனால், "சந்தனக்காடு" தொடருக்காக நானும், சந்தனக்காட்டுக்கு வசனம் எழுதியுள்ள பாலமுரளிவர்மனும் களப்பணியில் ஈடுபட்டோம். அப்போது நாங்கள் சந்தித்த வீரப்பனின் கூட்டாளிகள், ஊர் மக்கள், வீரப்பனுக்கு ஆதரவான, எதிரான காவல் துறையினர், அரசு அதிகாரிகள் அவ்வளவு ஏன்? வீரப்பனின் எதிரிகள் சொன்ன விஷயங்கள், சம்பவங்கள் எங்களுக்கு வீரப்பனின் வேறொரு முகத்தை காட்டியது.
அது என்ன அப்படியான, இதுவரை பத்திரிகைகளும், ஊடகங்களும் காட்டிராத முகம்?
ஒரு பக்கம் வீரப்பன் கொலைகாரன் என்றும் குற்றவாளி என்றும் சொல்லப்பட்டாலும் வீரப்பன் மனித நேயம் மிக்கவனாக இருந்துள்ளான். காவிரி பிரச்சனையால் கர்நாடகத் தமிழர்கள் பரிசலில் ஏறி ஓடிவந்தபோது அவர்களுக்கு உணவும், உடையும் கொடுத்ததும், கர்நாடக எல்லை காவல் நிலையத்தில் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டபோது "யாரடா என் தமிழ்ப் பெண்ணை மானபங்கப்படுத்தியது" என்று காவல் நிலையத்தை தரைமட்டமாக்கி, துப்பாக்கிகளை சூறையாடிய போதும் அவனது தமிழ் இன உணர்வு வெளிப்படுகிறது. அவ்வளவு ஏன்? அவன் இருந்தவரை கர்நாடகத் தமிழர் மேல் கை வைக்கும் தைரியம் கன்னடர்களுக்கு இருந்ததா? இப்படிப்பட்ட உணர்வாளன், மனித நேயமுள்ளவன் ஏன்? எப்படி? யாரால்? எதனால்? குற்றவாளியானான் என்பதை மக்களுக்குச் சொல்வதே சந்தனக்காட்டின் நோக்கம்.
130 எபிசோடுகள் முடிந்த நிலையில், "சந்தனக்காடு" குறித்த விமர்சனங்கள் எப்படி இருக்கிறது?
தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் பாதித்திருக்கிறது. குழந்தைகள், பெண்களிடத்தில்தான் அதிகப்படியான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை விஷயங்கள் நடத்தனவா? அதிரடிப்படை இத்தனை அக்கிரமங்களை பொதுமக்களுக்கு வீரப்பன் வேட்டை என்ற பெயரில் செய்தனரா? "நான்காவது தூண்" என மார்தட்டிக்கொள்ளும் பத்திரிகைகள் ஒன்றுகூட அப்போது இதைப்பற்றி பேசவில்லையே என பதைபதைக்கிறார்கள். அண்மையில் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து திரும்பிய பழ. நெடுமாறன், புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் இரவு 1 மணி வரை காத்திருந்து சந்தனக்காட்டை பார்க்கிறார்கள். (அப்போதுதான் அங்கு ஒளிபரப்பு). இலங்கையில் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் பட்ட பாட்டைவிட கொடுமையாயிருக்கிறது அதிரடிப்படையால் சத்தியமங்கலத்தில் பொதுமக்கள் பட்ட அவதி என்று அவர்கள் சொன்னதாக மனம் குமைந்து என்னிடம் சொன்னார்.
சந்தனக்காடு நிறைவு எப்போது?
கதை 85% முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள 15% கனமான, அழுத்தமான, புதிர் அவிழக்கூடிய வீரப்பன் இறப்பும், அது சம்பந்தமான நிகழ்வுகளுமே பாக்கி. அது வரும்போது வீரப்பன் இறப்பில் சம்பந்தப்பட்டுள்ள காவல்துறையும், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வீரப்பனின் உடலை போஸ்ட்மார்டம் செய்த மருத்துவர் குழுவும் மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும். மக்களின் சேவகர்கள் இவர்கள் என்றால் நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும்.
சந்தனக்காடுக்கு பிறகு உங்களது அடுத்த ப்ராஜெக்ட்?
அடுத்ததாக திரைப்படம் பண்ண இருக்கிறேன். குறித்த நேரத்தில் அதற்கான தகவல்களை உங்களைப் போன்றவர்களுக்கு தரவிருக்கிறேன். அதன்பின்னர் என்னுடைய ஈழ சொந்தங்களின் விடுதலைக்கு உதவும் வகையில் நெருப்புத் துண்டங்களாக வந்து விழுந்து, உலகத்தின் கதவுகளை தட்டி எழுப்பும் உயிர் உருக்கும் உன்னத படைப்பிற்கான வேலையிலும் ஈடுபடவுள்ளேன்.