பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிப்பதில்லை என்ற தனது நீண்டநாள் விரதத்தை கலைத்தார் எஸ்.கே. சூர்யா. தோல்வி குறித்தும், தனது சினிமா வேட்கை குறித்து அரிதாரம் பூசாத அவரின் பேட்டியிலிருந்து...
மீண்டும் பிற இயக்குனர்களின் படங்களில் நடிப்பது ஏன்?
என்னை நானே இயக்கி நடிப்பதில் பெரிய விசேஷம் இல்லை. என்னை நானே இயக்கி நடித்ததில் முழுமையான நடிகனாக முடியவில்லை. அதனால், பிற இயக்குனர்களின் படத்தில் நடித்தேன். ஆனால் அந்தப் படங்கள் வெற்றி பெறவில்லை. எனது தோல்விகளுக்கு நானே காரணம்.
மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து ஒரு வெற்றிப்படம் கொடுத்தால்தான் முழுமையான நடிகர் என்ற அங்கீகாரம் கிடைக்கும். அதனால் நல்ல கதைக்காக ஒரு வருடம் சினிமாவிலிருந்தே ஒதுங்கி இருந்தேன்.
'நியூட்டனின் மூன்றாவது விதி' நல்ல கதை என்று தோன்ற என்ன காரணம்?
இயக்குனர் தாய் முத்துச்செல்வன் சொன்ன நியூட்டனின் மூன்றாவது விதி கதை புதிதாக இருந்தது. தன் காதலியை பலாத்காரம் செய்து அழித்தவனை ஒரு இளைஞன் பழிவாங்கும் கதை. இதில் என்ன புதுமை என்று தோன்றலாம். பழிவாங்க ஹீரோ ஐந்தோ பந்தோ வருடங்கள் எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. இரண்டே மணி நேரத்தில், கோடீஸ்வரனாக இருக்கும் அவனை பிச்சைக்காரனாக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வருகிறான்.
என்னுடைய முந்தையப் படங்கள் பெண்களிடம் வரவேற்பு பெறவில்லை. எனவே, இந்தப் படத்தில் அவர்களுக்கு பிடிக்கும் விஷயங்களை வைத்திருக்கிறோம். நான் புதிய எஸ்.கே. சூர்யாவாக மாறிவிட்டேன்!
உங்களின் புலி புராஜெக்ட் என்னவாயிற்று?
பவன் கல்யாணை வைத்து புலியை தெலுங்கில் இயக்கி வருகிறேன். நியூட்டனின் மூன்றாவது விதியை முடித்துவிட்டு புலியை தமிழில் நானே இயக்கி நடிக்கிறேன்.
உங்களுக்கு பெண் பார்ப்பதாக வரும் செய்திகள் உண்மையா?
சினிமா மீது எனக்குள்ள காதல் கடலளவு. நான் சினிமாவில் குறைவாகவே சாதித்திருக்கிறேன். திருமணம் செய்து கொண்டால் என்னுடைய லட்சியத்தை அடைய முடியாது.
சினிமாவில் யாரும் அடைய முடியாத இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் பிரமச்சாரியாக இருக்க முடிவு செய்துள்ளேன்!