'
சந்தோஷ் சுப்ரமணியம்' சிறப்பாக வந்திருக்கும் சந்தோஷம் ஜெயம் ரவியின் முகத்தில். நிறைவான படம் செய்த பூரிப்பு தொனிக்கும் அவரது பேட்டிலிருந்து...சந்தோஷ் சுப்ரமணியம் எப்படி வந்திருக்கு?
இந்தப் படம் எனக்கு முக்கியமானது. இப்படியொரு படத்தில் நான் நடித்தது இல்லை. என் அண்ணன் ராஜாவும் இப்படியொரு படத்தை இயக்கியது இல்லை. என்னுடைய இளமையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமோ அதை இதில் செய்திருக்கேன். இதுபோன்ற ஒரு படம் எனக்கோ, என் அண்ணனுக்கோ இனி அமையாது. நான் வேறு நல்ல கேரக்டர்களில் நடிக்கலாம். ஆனால் இந்தப் படத்தின் கேரக்டர் எனக்கு இனி திரும்பக் கிடைக்காது.
உங்க அண்ணனுடன் பணிபுரியும் அனுபவம் எப்படிப்பட்டது?
ராஜா என்னுடைய அண்ணன் என்றாலும் கொஞ்சம் கூட அவரிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது. அவருக்குத் தேவையான நடிப்பை வாங்கிய பிறகே நம்மை விடுவார்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு மூன்று அண்ணன்கள். சொந்த அண்ணன் ராஜா, சந்தோஷ் சுப்ரமணியத்தின் ஒரிஜினல் பொம்மரிலுவை இயக்கிய பாஸ்கர். அப்புறம் என்னோட கேரக்டரில் நடித்த சித்தார்த். இந்த மூன்று பேரின் உழைப்பை நான் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் பிரதிபலித்திருக்கிறேன், அவ்வளவுதான்.
படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயம்?
இந்தப் படத்தில் நடித்த ஜெனிலியா, சந்தானம், பிரேம்ஜி, பிரகாஷ் ராஜ், ஒளிப்பதிவாளர்னு எல்லோருமே ஒரு குடும்பம் போல இருந்தோம். அந்த அனுபவம் மறக்க முடியாது.
சந்தோஷ் சுப்ரமணியம் எந்த மாதிரி படம்?
எல்லாரும் பார்க்கக் கூடிய வகையிலான சிறப்பு அம்சங்கள் இந்தப் படத்துல இருக்கு. குடும்பத்தோடு படம் பார்க்கணும்னு பிரியப்படுகிறவர்கள் மறுபேச்சு இல்லாமல் சந்தோஷ் சுப்ரமணியம் படட்ததுக்கு வரலாம். அதுக்கு எங்கள் யூனிட் கியாரண்டி. அந்தளவு தரமான படமா உருவாக்கியிருக்கோம். கண்டிப்பா இந்தப் படமும் வெற்றி பெறும்.
அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?
தாம் தூம் படம் முடிஞ்சிருக்கு. பேராண்மையில் நடிச்சிட்டிருக்கேன். அடுத்து அமீர் டைரக்ஷனில் கண்ணபிரான் படத்தில் நடிக்கிறேன்.