வாரணம் ஆயிரம் படத்தைத் தொடர்ந்து ஏவி.எம். தயாரிக்கும் அயன் படத்தில் நடிக்கிறார் சூர்யா. அயன் என்றால் தனித்துவமானவன் என்று பொருள். படம் குறித்து சூர்யா அளித்த பேட்டி...இந்த வாய்ப்பு எப்படி அமைந்தது என்று கூற முடியுமா?
நான் ஒரு வருஷமா பலர்கிட்ட கதை கேட்டுக்கிட்டு இருக்கேன். நாலு மாசம் முன்னாடி ஆனந்த் சார் கூட விளம்பரப் படம் பண்ணினேன். அப்போ சாதாரணமா பேசிக்கிட்டு இருந்தபோது ஒரு கதை சொன்னார். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்தக் கதையில கண்டிப்பா நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். நான் இந்தளவு ஒரு கதையில இம்ப்ரஸ் ஆனது கிடையாது. நான் ஆசைப்பட்ட மாதிரியே அயன் வாய்ப்பு கிடைச்சது.
ஆனந்த் சாரோட கனா கண்டேன்ல நான்தான் நடிக்கிறதாக இருந்தது. அன்னைக்கு அது முடியவில்லை. இப்போ அயன் வாய்ப்பு கிடைச்சது சந்தோஷம்.
படத்தில் உங்க கேரக்டர் என்ன?
நான் இருபத்தைஞ்சு வயசு இளைஞனா நடிக்கிறேன். படத்துல நிறைய கெட்டப்புகள் இருக்கு. ஆனா, அதை இப்போதைக்கு சொல்ல முடியாது. ஒவ்வொரு படத்துலயும் வித்தியாசங்களை காட்டி நடிக்கிறேன். இந்தப் படத்திலும் அது இருக்கும்.
ஏவி. எம் நிறுவனம் பற்றி....
ஏவி. எம் நிறுவனத்தின் `பேரழகன்' படத்தில் நடிச்சிருக்கேன். அயன் இரண்டாவது படம். ஏவி.எம். மாதிரியான ஒரு நிறுவனத்தில் பணிபுரிவது பெருமைக்குரிய விஷயம். அதுவும் `சிவாஜி'க்குப் பிறகு அவங்க தயாரிக்கிற படம். இதை வெற்றிப் படமாக்க எல்லோரும் கடுமையாக உழைப்போம்.
அயனில் பணிபுரியும் டெக்னீஷியன்கள் யார்?
தமன்னா என்னோட ஜோடியா நடிக்கிறாங்க. ஹாரிஸ் ஜெயராஜ் மியூஸிக். காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம்னு தொடர்ந்து அவர் மியூசிக்கில நடித்துள்ளேன்.
படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது?
மே மாசம் ஷூட்டிங் போறோம். மலேசியா, செளத் ஆப்பிரிக்காவிலும் ஷூட்டிங் நடக்குது. பெரும்பாலான சீன்ஸ் சென்னையில எடுக்கிறோம். இதுவரை நீங்க பார்க்காத சென்னையா அது இருக்கும்.