பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து பொங்கலுக்கு வெளியான பீமா வெளியீட்டுக்குப் பின் உற்சாகமாக இருந்தார் விக்ரம். படம் வெளியனதில் தான் மகிழ்ச்சியே தவிர படத்தில் நடித்த அனுபவம் கசப்பானது என்று கூறி வருத்தப்படுகிறார்.இனி விக்ரமிடமே...பீமா இவ்வளவு தாமதமானதற்கு காரணம்?
படம் வெளியாகிவிட்டது. இனி பழைய விஷயங்களை போஸ்ட் மார்ட்டம் செய்வதில் அர்த்தமில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. ஆனால் பீமா தயாரிப்பாளர் மூலம் நான் அடைந்த இழப்புகள் நிறைய. 1 கோடிக்கும் மேல் பணத்தை மட்டுமல்ல பலவற்றை விட்டுக் கொடுத்தேன். எனக்கு அது கசப்பான அனுபவமாக அமைந்துவிட்டது. இதனால் பல படங்கள் நடிக்க முடியவில்லை. பல கோடி இழப்பு எனக்கு.
பீமாவில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?
லிங்குசாமி சொன்ன க்ளைமாக்ஸ் ஷாக் கொடுத்தது. இந்தக் கதையை விட எனக்கு க்ளைமாக்ஸ்தான் பிடித்தது. ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் முடிவாக மனதிற்குப் பட்டது. அதனால்தான் இந்த க்ளைமாக்ஸ் எனக்கு பளீரென ஆணியடித்தது போலத் தெரிந்தது. அது பிடித்துதான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
படத்தில் துப்பாக்கி நிறைய பேசும்போது உடல் எடையை கூட்ட வேண்டிய அவசியம்....?
எல்லாக் காட்சிகளிலும் துப்பாக்கி இல்லையே. அடிதடி காட்சிகளில் நாலுபேரை பீமா அடிக்கிறான் என்றால் நம்ப வேண்டும் அல்லவா? நம்ப முடியாமல் போய்விட்டால் சிரிப்புக்குரிய விஷயமாகிவிடும். எனவேதான் உடம்பை கஷ்டப்பட்டு வெயிட் ஏற்றினேன். முறுக்கேற்றி டைட் செய்தேன். அதனால்தான் சண்டைக் காட்சிகள் நம்பும்படி இருக்கிறது.
பீமா ஒரு வன்முறைப் படமாக இருக்கிறதே?
படங்களில் வன்முறைகள் இப்போது சகஜம்தான். அதில் வரும் சண்டைகளுக்கு வெட்டு, குத்து, ரத்தம் என்று அருவருப்பு ஏற்படுத்தாமல் அளவோடு அழகாக காட்டியிருப்பார் டைரக்டர். மற்றபடி கதையை முடிவு செய்வது அவர்தான். படத்தின் உள்ளடக்கம் பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். நான் ஒரு நடிகன் மட்டுமே. முந்தைய படக்கதை எப்படி இருந்தது. இப்போதைய படம் எப்படி கதை இருக்கிறது என்று மட்டுமே பார்ப்பேன். என் பார்வையில் இந்த ஒப்பீடுதான் இருக்கும். மறுபடியும் சொல்கிறேன். நான் நடிகன் எனக்கு ஏதாவது நடிக்க வாய்ப்பு இருக்கிறதா? வித்தியாசம் காட்ட என்ன சூழல் இருக்கிறது இப்படித்தான் என் தேடல் இருக்கும். கதை என்ன சொல்கிறது என்பது பற்றி நான் கவலைப்படுவது கிடையாது. அது டைரக்டரின் ஏரியா. ஒரு படத்தில் எதை எந்த அளவில் எப்படிச் சொல்வது என்று அவர்களுக்குத் தெரியும். தெரிய வேண்டும்.
பிரகாஷ்ராஜ் உங்களுக்கு சமமாக நடித்திருப்பது பற்றி?
அது கதைப்படி சரியான கேரக்டர்தான். எனக்குச் சமமாக எனக்குப் போட்டியாக என்று கூறினாலும் சரி.. இப்படி இன்னொருவர் இருப்பது எனக்கு சவாலான விஷயம்தான். இப்படி பிதாமகன் படத்தில் சூர்யாவுடன் நடித்தேன். மஜாவில் பசுபதி இருந்தார். இன்னொரு கேரக்டர் நம்மை விழுங்கிவிடும் என்கிற தயக்கமோ பயமோ எனக்கில்லை. பிரகாஷ்ராஜ் பிரமாதமான நடிகர். அவர் என்னுடன் நடிப்பது சந்தோஷம். அவரைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகி நானும் நடிக்க வாய்ப்பாக இருந்தது. இதில் எனக்கு திருப்தியான அனுபவமே கிடைத்து.
படங்களின் இடைவெளி இனி குறையுமா?
மீண்டும் விட்ட இடத்துக்கே வரவேண்டியுள்ளது. பீமாவால் என் மூன்று வருடங்கள் போய்விட்டன. மஜாவுக்கும் பீமாவுக்கும் இடையில் 3 ஆண்டுகள் என்பது என்னைப் பொருத்தவரை இருக்கக் கூடாத / தவிர்த்து இருக்க வேண்டிய இடைவெளிதான். ஆனால் நான் என்ன செய்வது யாரோ செய்த தவறுக்கு நான் மாட்டிக் கொண்டு இழப்புகளை சந்தித்தேன். இந்நேரம் நான் நடித்து ஐந்தாறு படங்கள் வந்திருக்கும். ஆனாலும் பீமா நம் குழந்தை. அது நன்றாக வர வேண்டும் என்கிற எண்ணத்தில் மன உளைச்சல்களை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒத்துழைப்பு கொடுத்தேன். இனி வருடத்துக்கு 3 படங்கள் நடிப்பேன்.
பீமா மூலம் பெற்ற லாபம்?
படத்தின் விற்பனை 23 கோடி ஆனது பெரிய மகிழ்ச்சி. திருநெல்வேலி, தஞ்சாவூர் ஏரியாவில் 1 கோடி வசூலாகும் என்று விநியோகஸ்தர்கட்ள கணித்துள்ளது திருப்தி. ஜாக்கிசான், வான்டமி படங்களைப் போல சண்டைக் காட்சிடிகள் இருப்பதாக பலரும் பாராட்டியிருப்பதும், அந்நியன் படத்தை விட இது நன்றாக இருப்பதாக சக நடிகர் ஒருவர் பாராட்டியிருப்பதும் லாபம்.
அறிமுக இயக்குநர் படங்களில் இனி நடிப்பீர்களா?
மாட்டேன். இனி முதல்படம் இயக்கும் புதியவர்கள் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். சிலர் மூலம் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.
காசி, பிதாமகன் போன்று மாறுபட்ட வேடங்கள் தந்தாலும் புது இயக்குநர் படங்களில் நடிக்க மாட்டீர்களா?
என் முடிவில் மாற்றமில்லை. அனுபவத்துடன் வரட்டும் நடிக்கத் தயார். கேரக்டருக்காக மட்டும் புதியவர்கள் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டேன். அனுபவமின்மையால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் இம்முடிவு. திறமைசாலிகள் அனுபவமுள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் படங்களில் நடிப்பேன்.
இப்போது நடிப்பவை?
இப்போது சுசி கணேசன் இயக்கத்தில் கந்தசாமியில் நடிக்கிறேன். கதை குழந்தைகளை மையமாக வைத்து உருவாகிறது. எல்லாருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அடுத்து செல்வராகவன் படம். இனிமேல் வருடத்துக்கு 3 படங்களில் நடிப்பேன்.