ஒன்பது ரூபாய் நோட்டு அண்மையில் வெளிவந்து தர முத்திரை கொண்ட படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வணிக சினிமாவுக்கான எல்லா இலக்கணங்களையும் வெற்றி சூத்திரங்களாக புனைந்து வைக்கப்பட்டிருந்த அத்தனை கணக்குகளையும் உடைத்துக் கொண்டு வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் அதன் இயக்குநர் தங்கர்பச்சானுடன் ஒரு சந்திப்பு
இந்தப் படத்தை எடுக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டீர்களா?
இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம். கதை சொல்லவும் நடிப்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும் சுமார் இரண்டு ஆண்டுகள் போய்விட்டன. இது பல கதாநாயகர்களிடம் போன கதை. ஆனால் கடைசியில் தான் அண்ணன் சத்யராஜ் கிடைத்தார். இதை எடுத்தே தீர வேண்டும் என்று ஒரு கட்டத்தில் முடிவு செய்தேன். படம் எடுக்க விரும்பி நான்கு ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிறது. ஆனாலும் வருத்தப்பட வைக்கவில்லை. முன்பே எடுக்கப்பட்டிருந்தால் இத்தனை வீச்சுடனம், வீரியத்துடனும் சொல்லியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. அதனால் இந்த தாமதம் தகுதியானதுதான். இந்தப் படத்தை முதலில் ஒரு தயாரிப்பாளரை வைத்து தொடங்கினேன். அவர் சத்யராஜை மாற்ற வேண்டும் என்றார். அது சரிப்பட்டு வருமா? நானே தயாரிப்பில் இறங்கிவிட்டேன். என்ன ஆனாலும் ஆகட்டும் என்று கோபத்தில் இறங்கிவிட்டேன். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பைத் தொடர முடியாமல் திணறித் தத்தளித்தேன். அப்போது நிதி உதவி செய்ய வந்தவர்தான் ஏ.எஸ். கணேசன். உதவிய அந்த உயர்ந்த உள்ளத்தையே தயாரிப்பாளர் ஆக்கிவிட்டேன்.
படம் பல பிரச்சினைகளைக் கடந்துதான் வந்திருக்கிறது போலிருக்கிறதே?
படத்தின் கதையே வாழ்ந்து கெட்ட ஒரு விவசாயியின் வாழ்க்கையின் பதிவுதான். மாதவரின் வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டம்தான். அவர் கதையை நானும் பல போராட்டங்களை, சோதனைகளைக் கடந்துதான் படமாக்க வேண்டியிருந்தது. குருவி சேர்க்கிற மாதிரி சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து படப்பிடிப்பு நடத்திய அனுபவம் கூட உண்டு. நான் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. மக்களின் வரிப்பணத்தில் நான் திரைப்படக் கல்லூரியில் படித்தேன். அதே மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். ஒரு நல்ல படத்தைக் கொடுத்து அவர்களைக் கெளரவப் படுத்த நினைத்தேன். அதுதான் இந்தப் படம். இந்தப் படத்தின் கதையைவிட அதை எடுத்து முடித்தது பெரிய கதை.
அந்த அனுபவத்தைச் சொல்ல முடியுமா?
நான் இதை ஒரு படமாக நினைத்துச் செய்யவில்லை. ஒரு தவமாக நினைத்துதான் செய்தேன். இதை நாவலாக எழுதியபோது அந்தந்த ஊர்களுக்குச் சென்றுதான் எழுதினேன். அதே போல அந்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்றுதான், படப்பிடிப்பு நடத்தினேன். பண்ருட்டி, பத்திரக்கோட்டை, ஆம்பூர், வாணியம்பாடி என்று எங்கெல்லாம் கதை செல்கிறதோ அங்கெல்லாம் போனேன். படப்பிடிப்பு நடத்தினேன். இதில் என்ன வேதனை என்றால் என் சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் எனக்கு படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அதற்கு அனுமதி தரவில்லை. கதைப்படி மாதவர் வாழும் காலம் வேறு அல்லவா. அப்போது இப்போதுள்ள அரசியல் கட்சிகள் இல்லை அல்லவா? இப்போது எங்கள் ஊரில் ஏகப்பட்ட கட்சிக் கொடிமரங்கள், சுவர் விளம்பரங்கள் இருக்கின்றன. ஒற்றுமையாக இருந்த உறவினர்கள் எல்லாம் அரசியல் புகுந்து பிளவு பட்டுக் கிடக்கிறார்கள். நான் சொன்னேன், கதை சில ஆண்டுகளுக்கு முன்ப நடக்கிற மாதிரி இருப்பதால் இந்த கொடிகள் மரங்களை அப்புறப்படுத்திவிட்டு, சுவர் விளம்பரங்களை எல்லாம் அழித்துவிட்டு படப்பிடிப்பி நடத்திவிட்டு மீண்டும் எல்லாவற்றையும் பழையபடி வைத்து விடுகிறேன் என்றேன். முதலில் ஒப்புக் கொண்டார்கள். பிறகு படப்பிடிப்புக்குத் தயாராக வந்தபோது மறுத்தவிட்டார்கள். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சொந்தக்காரர்களே மறுத்துவிட்டார்கள். எனக்கு வெட்கமாகவும், வேதனையாகவும் இருந்தது. எதற்காக நான் படமெடுக்கிறேன்?
சொந்த மண்ணிலேயே எனக்கு இந்தக் கொடுமை நடந்தது. என் படப்பிடிப்பு தடைபட்டதில், அங்கு ரத்தானதில் எனக்கு வருத்தமில்லை. அரசியல் நுழைந்து எப்படியெல்லாம் இந்த மக்களை கெடுத்து பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. இந்த அரசியல் மாயையிலிருந்து என் மக்களை மீட்கப் போவது யார்? நினைக்கும் போதே வேதனையாக இருக்கிறது. இந்தப் படத்தில் இன்னொரு கசப்பான அனுபவம். விலங்குகள் நல வாரியம் நல்ல நோக்கத்தில் உள்ள அமைப்பு. பல படங்களில் விலங்குகள் சித்திரவதை செய்யப்படுகின்றன. சண்டைக் காட்சிகளில் எத்தனையோ குதிரைகள் இறந்துள்ளன. அதையெல்லாம் தடுக்க ஓர் அமைப்பு தேவைதான். ஆனால் எந்த விலங்கையும் துன்புறுத்தாமல் நல்ல படம் எடுக்க நினைக்கும் நான் அவர்களின் விதிமுறைகள், கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டேன். இப்படி நிறைய உண்டு.
படத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள்?
இன்று சமுதாயத்திற்குத் தேவையான பலவற்றை கூறியிருக்கிறேன். பெற்றவர் பிள்ளைகளுக்குள் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். மத நல்லிணக்கம் முதல் சொந்த மண்ணை நேசி, மரம் வளர்த்திடு, பண்பாட்டைக் காப்பாற்று என்று நிறைய சொல்லப்பட்டிக்கிறது. பார்க்கப் பார்க்க பல செய்திகள் கிடைக்கும்.
மாதவர் படையாச்சி யார்?
அது தனிமனித கதாபாத்திரமல்ல். ஒரு சமூகத்தின் பிரதிநிதி போல் காட்டியிருக்கிறேன். அந்த பாத்திரத்தில் பெரும்பான்மையான குணங்கள் எங்கள் அப்பாவுடையது. அந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகள் யாவும் உண்மையானவை. வெவ்வேறு மனிதர்களுக்கு ஏற்பட்டவை. என் அனுபவமும் கூட இருக்கிறது.
படத்தில் சத்யராஜின் பங்களிப்பு பற்றி?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்குக் கூட அண்ணன் சத்யராஜ் மீது சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது. சரியாக செய்வாரா என்று. சரியாக ஒத்துழைப்பு கொடுப்பாரா... என்றெல்லாம் நினைத்தேன். கதையில் தெளிவாகிவிட்டார். மாதவரை உள்வாங்கிக் கொண்டபின், அவர் கூறியது என்ன தெரியுமா... என்னை இன்று நடிக்க வந்த நடிகனாக நினைத்துக் கொள்ங்கள். புதிதாக வந்தவர்களை எப்படி வேலை வாங்குவீர்களோ அப்படியே நடத்துங்கள் என்றார்.
படத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூறி அவர் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. பல காட்சிகளில் கட் சொல்ல மறந்திருக்கிறேன். மொத்த படப்பிடிப்புக்குழு, வேடிக்கைப் பார்த்தவர்கள் அழுத அனுபவம் உண்டு. வணிக ரீதியாக 170 படங்களில் நடித்த அவருக்குள் இப்படி ஒரு நெருப்பு இருந்தது ஆச்சரியமான விஷயம். அர்ச்சனாவும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி பிரம்மிக்க வைத்தார். வெறும் கதை சொல்லும் படமாக இது அமையாமல் உருவாக்கினேன். படத்தை பார்த்துவிட்டு அற்புதமாகப் பாடல் எழுதிக் கொடுத்தார் வைரமுத்து. அருமையாக இசை அமைத்து கொடுத்தார் பரத்வாஜ். இவர்களுக்கெல்லாம் நான் எப்படி நன்றி சொல்வது? இப்படம் என் படமல்ல. இதன் பெருமையில் பலருக்கும் பங்கு இருக்கிறது என்பதே உண்மை.