கனவுகள் எல்லாமே பலிக்கும். ஏனெனில் சாத்தியப் படாதவை கனவுகளில் தோன்றுவதில்லை- அப்படி ஒருவர் கண்ட கனவு இன்று பலித்துள்ளது.
ஒன்றின் மீது ஆசை வந்து விட்டாலே அதை அடையும் திறமை வந்துவிட்டது என்றுதான் அர்த்தம்.
அப்படி ஒருவர் ஆசைப்பட்டு அதை அடைந்தும் விட்டார். அவர் சித. செண்பகக் குமார். பிடிச்சிருக்கு படத்தின் தயாரிப்பாளர். சொந்த ஊர் தூத்தூக்குடி. துபாயில் தொழில் செய்கிறார். நாடு விட்டு நாடு போனாலும் இவருக்கு இசை, சினிமா மீது காதல். இசை நிகழ்ச்சிகள் நடத்தி தன் இசையார்வத்துக்கு வடிகால் கண்டவர். சினிமா தயாரித்து தன் கனவை நிறைவேற்றியிருக்கிறார். படமெடுக்கும் விருப்பம் பிடிச்சிருக்கு மூலம் புதிய திருப்பம் கண்டுள்ளது. கூல் புரொடக்ஷன்ஸ் இவரது பட நிறுவனம்.
பணத்தைப் போட்டு பணத்தை எடுக்க சினிமாவுக்கு வருகிறவர்களிடையே பணத்தைப் போட்டு நல்ல படத்தை எடுக்க வந்திருக்கிறார் இவர். இனி கூல் குமார்...
உங்கள் சினிமா ஆசையின் பின்னணி என்ன?
இதுநாள் வரை நான் ஒரு ரசிகன்தான். நல்ல படங்களை ரசிப்பேன். நகைச்சுவை வந்தால் சிரிப்பேன். பொழுது போக்குள்ள படங்களை பார்ப்பது. இதுதான் என் போக்காக இருந்தது. எனக்கு இசையார்வம் உண்டு. நன்றாகப் பாடும் ஆர்வம் உண்டு. இசைக்குழு வைத்திருக்கிறேன். சவுதி அரேபியாவில் உள்ள தமிழர்களுக்கு எங்கள் குழு பிரபலம்.
உங்கள் குழு மூலம் என்ன செய்து இருக்கிறீர்கள்?
எதையும் திருத்தமாக புதுமையாக கவர்ச்சிகரமாகச் செய்ய எனக்குப் பிடிக்கும். எங்கள் நிகழ்ச்சிகள் அப்படித்தான் புகழ் பெற்றன. என் இசையார்வம் இளையராஜா சார் ஷோவை ஏற்பாடு செய்து துபாயில் நடத்தும் அளவுக்கு விரிந்து வளர்ந்தது. ராஜா சார் ஷோவை பிரம்மாண்டமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தினோம். அதுவரை ஒரு சாராருக்கு மட்டுமே ஷோ நடத்தப்பட்டு வந்தது. அதை மாற்றி வெகுஜன மக்கள் - அடித்தட்டு மக்கள் வந்து பார்க்கும்படி செய்தோம். ஷார்ஜா ஸ்டேடியத்தில் நடத்தினோம். நட்சத்திரங்களை வைத்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தினோம். இதில் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. இப்படி நான் சினிமாவை நெருங்கியே வந்திருக்கிறேன்.
தயாரிப்பாளராகும் தைரியம் வந்தது எப்படி?
என்னைக் கேட்டால் நான் போட்டுள்ள முதலீடு தைரியம் மட்டும்தான். அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு முறையல்ல பல முறை யோசித்துப் பார்த்ததுண்டு. ஒரு நாள் டிவியில் ஒரு பேட்டியைப் பார்த்தேன். நீங்கள் ஏன் மசாலா படம் எடுக்கிறீர்கள்? நல்ல படம் ஏன் பண்ணவில்லை என்று கேட்டபோது யாராவது ஒரு கோடி ரூபாய் கொடுத்து நல்ல படம் மட்டும் பண்ணுங்கள் என்று சொன்னால் எடுத்துக் கொடுக்க நான் தயார் என்றார். சொன்னவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷ். அவர் எங்கள் ஊர்க்காரர். சிறு வயதில் இருந்து நண்பர்கள். கல்லூரி முடிந்து நான் துபாய் போய்விட்டேன். அவர் டைரக்டராகிவிட்டார். அவர் அப்படிச் சொன்னதும் அவரைத் தொடர்பு கொண்டேன். சந்தித்துப் பேசினேன். ஒரு கோடி ரூபாயில் நல்ல படம் எடுக்க முடியுமா என்ற போது... அவரிடம் உதவியாளராக இருந்த கனகுவை சிபாரிசு செய்தார். அவரும் தெரிந்தவர்தான். ஊர்க்காரர். குடும்பத்துடன் தொடர்பில் இருந்தவர்கள்.
உடனே படத்தை தொடங்கி விட்டீர்களா?
பணம் போடுகிறவன் நான். நீங்கள் பணத்தைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். பணத்தை திருப்பித் தரும் பொறுப்பு உங்களிடம் தரவில்லை. நல்ல படம் எடுத்துக் கொடுங்கள். நல்ல படியா தருவது உங்கள் திறமைக்குள்ள சவால் என்று சொன்னேன். கனகுவைத் தேர்ந்தெடுக்கும் முன்பு நிறைய யோசித்தேன். அவரது திறமை பொறுப்பு எல்லாம் பற்றி நல்ல அபிப்ராயங்கள் கிடைத்தன. மேலும், என்னை மாதிரி முழு சுதந்திரம் கொடுக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு மோசம் செய்ய மாட்டார் என்று நம்பினேன். படம் கொடுத்தேன். பணம் கொடுத்தேன். படப்பிடிப்பு நடந்த இடத்துக்குக் கூட போகவில்லை. இதோ பிடிச்சிருக்கு படம் முடிந்து இருக்கிறது. எனக்கு திருப்தி. இனி முடிவு மக்கள் கையில்.
நட்சத்திர நடிகர்களை வைத்து படம் எடுப்பீர்களா?
என்னைப் பொறுத்தவரை சினிமாவைத் தொழிலாக தொடரவே ஆசைப்படுகிறேன். சூதாட்டமாக அல்ல. வருமோ பணம் வராதோ ஜெயிக்குமோ கவிழ்க்குமோ என்கிற பதற்றத்தில் தொழில் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. அளவான பட்ஜெட்டில் தரமான படங்கள் தயாரிக்கவே விருப்பம்.
அடுத்து தயாரிக்க இருப்பவை?
பிடிச்சிருக்கு படத்தையடுத்து மூன்று படங்கள் தயாரிக்கிறேன். லிங்குசாமி உதவியாளர் ரவி இயக்கும் படம் நாயகன் பி வாசுவின் மகன் ஷக்தி. அடுத்து பரத்தை வைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் படம். பிறகு மலையாளப் பட இயக்குநர் லால் ஜோஸ் இயக்கும் படம். இதில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
இயக்குநர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் ரசிகனை ஏமாற்றக் கூடாது. ஏன்டா வந்தோம் என்று வருத்தப்பட வைக்கக் கூடாது. நல்லதொரு பொழுதுபோக்காக படம் அமைய வேண்டும். ஆயிரம் கஷ்டங்களிலிருந்து சினிமா தியேட்டருக்கு வருகிறவனை நாமும் கஷ்டப்படுத்தக் கூடாது. நல்ல விஷயங்களை சொல்லாவிட்டாலும் கூட தப்பில்லை. கெட்டவற்றை சொல்லிக் கொடுக்கக் கூடாது. இதுதான் நான் சொல்கிற நிபந்தனை. இந்த அடிப்படையில் இதற்குச் சம்மதிப்பவர்களையே நான் தேர்வு செய்கிறேன். நல்ல படங்களை மக்களும் மீடியாவும் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தரமான படங்கள்தான் என் தாரக மந்திரம். நல்ல படங்கள் என் கொள்கை. இதை என்றும் கைவிட மாட்டேன் என்கிறார் கூல் குமார்,
கூல் குமாரின் கனவுகள் மெய்ப்படட்டும். பல இளைஞர்களின் திறமைகள் மெய்ப்பிக்கப்படட்டும்.