புலன் விசாரணை - 2 படத்தின் மூலம் மீண்டும் வந்திருக்கும் செல்வமணியுடன் கைகோர்த்து மீண்டும் கலக்க வருகிறார் பிரசாந்த்.
இனி அவரிடமே தொடர்வோம்
ஏன் இந்த இடைவெளி?
சரியான படங்கள் அமையாதது ஒரு காரணம். என் வாழ்க்கையில் ஒரு புயல் அடித்தது இன்னொரு காரணம். ஆனால் நான் நம்பிக்கையுடன்தான் இருக்கிறேன்.
வம்பு வழக்கு பிரச்சினை என்று வரும்போது எப்படி மீள முடிகிறது?
எனக்கு என் அம்மா -அப்பா இருக்கிறார்கள். அப்பா என் கூட இருந்தால் அந்த ஆண்டவனே கூட இரக்கிற மாதிரி. இந்த விஷயத்தில் நான் ரொம்ப லக்கி. வேறு என்ன சொல்வது?
நீண்ட இடைவெளிக்குப் பின் செல்வமணியின் இயக்கத்தில் நடிப்பது பற்றி?
செல்வமணி என் சகோதரர் மாதிரி. என்னை அவருடைய செம்பருத்தி படத்தில் நடிக்க வைத்தார். என்னைப் பரவலாக ஆடியன்சிடம் கொண்டு சேர்த்தார். பிறகு கண்மணியில் நடித்தேன். அதில் என் இமேஜ் வலுத்தது. அவருக்கும் எனக்குமான நட்பு சகோதரப்பாசம் போன்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புலன் விசாரணை 2ல் பணியாற்ற இருக்கிறோம். இது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
படத்தில் உங்கள் பாத்திரம்?
இந்த படத்தில் என் பாத்திரம், நடிப்புப் பற்றி கூற மாட்டேன். செம்பருத்தி போலவே இதில் வித்தியாசமாகவே காட்டியிருக்கிறார். இது பேசப்படும் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதை மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறேன்.
சினிமாவில் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
எனக்கு எவ்வளவோ சினிமா கற்றுக் கொடுத்து இருக்கிறது. ஆரம்பத்தில் பேசவே கூச்சப்படுவேன். இப்போது சரளமாகப் பேசுகிறேன் இதற்கிடையே எத்தனையோ கேள்விகளை எனக்கேக் கேட்டுக் கொண்டுதான் இப்போது இப்படி பேசுகிறேன். இதுபோல் சினிமா எனக்கு எவ்வளவோ விஷயங்களைக் கற்றுக் கொடுத்து இருக்கிறது.
சொந்த வாழ்க்கை உங்கள் சினிமா வாழ்க்கையை எந்த அளவுக்குப் பாதித்தது?
சினிமாவில் அதிகம் கவனம் செலுத்த முடியாத அளவிற்குப் பாதித்தது. அதனால் எனது சினிமா வாழ்க்கை பாதித்தது. நம்பிக்கையுடன் மீண்டு வந்திருக்கிறேன். என் அப்பா மட்டும் அருகில் இல்லையென்றால் நான் இந்த அளவுக்கு உற்சாகமாக இருப்பேனா என்று சொல்ல முடியாது. எனக்கு கடவுள் கொடுத்த கி·ப்ட் என் அப்பாதான்.
உங்கள் படத்தேர்வில் அப்பாவின் பங்கு?
எனக்கு சினிமா தெரியாத காலத்தில் எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார். பிறகு என்னைக் கதைக் கேட்கச் சொல்வார். அவர் என் விஷயத்தில் தலையிடுகிறார் என்று சிலர் கேட்டதுண்டு. பிள்ளையின் வளர்ச்சி பற்றி அப்பாவை விட வேறு யார் கவலைப்பட முடியும், என் எல்லா முன்னேற்றத்திலும் என் அப்பாவின் பங்கு இருந்தே வந்திருக்கிறது. இதிலென்ன தப்பு?
உங்கள் நாயகிகள் மும்பை வரவுகளாகவே இருப்பதேன்?
என் ஆரம்பக்காலப் படங்களில் செம்பருத்தியில் ரோஜா நடித்தார். வைகாசி பொறந்தாச்சு படத்தில் காவேரி. இவர்கள் எல்லாம் மும்பைக்காரர்கள் இல்லையே. மும்பை நாயகிகள் பலர் என்னுடன் நடித்துள்ளது உண்மைதான். அது தானாக அமைவதுதான்.
எதிர்மறையான நெகடிவ் பாத்திரத்தில் நடிப்பீர்களா?
படம் என்பது நடிப்பை வெளிப்படுத்தும்படிதான் இருக்க வேண்டும். நடிப்புக்கு வாய்ப்பு இல்லாமல் படம் முழுக்க வருவதை விட நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் நெகடிவ் வாய்ப்புகள் எவ்வளவோ மேல். நான் வில்லனாகக் கூட நடிக்கத் தயார்.அது வித்தியாசமாக இருக்க வேண்டும். ஆர்.கே. செல்வமணியின் அடுத்த படத்தில் இப்படி ஒரு நெகடிவ் கேரக்டரில் நடிக்க இருக்கிறேன்.