இளைஞர்களின் விழிப்புணர்ச்சிக்காகவே `மிருகம்' - சாமி
, வெள்ளி, 28 டிசம்பர் 2007 (12:10 IST)
யார் இந்த சாமி? யாரும் தொடாத பரபரப்பான சர்ச்சைக்குரிய கதையைக் கையிலெடுத்து படமாக்கியிருக்கிறாரே... யாரிந்த ஆசாமி... என்று தன் முதல் படமான 'உயிர்' மூலமே பேச வைத்தவர். அதே பரபரப்பு பரிவாரங்களுடன் மீண்டும் களத்திற்கு வந்திருக்கிறார் `மிருகம்' படத்தின் மூலமாக. அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள், கேளிவிக்குறிகள் ஆகியவற்றின் மொத்தக் கலவையாக வந்திருக்கும் `மிருகம்' நல்லதும் கெட்டதுமான அதிர்வலைகளையும் விமர்சனங்களையும் சுமந்து கொண்டு திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் சர்ச்சைத்திலகம் சாமியுடன் ஒரு சந்திப்பு. மிருகம் படத்தின் மூலம் பரபரப்புக்காக கெட்டதை அதிகம் சொல்லியிருப்பது நியாயமா?நான் எடுத்துக் கொண்ட கதைக்கு - சொல்ல வந்த விஷயத்துக்கு தேவையான அளவில்தான் காட்சிகளை வைத்திருக்கிறேன். நான் நினைத்ததை சொல்லியிருக்கிறேன். சொல்ல வந்த கருத்துக்கு வலு சேர்க்கும் காட்சிகளையே வைத்திருக்கிறேன். இந்த விஷயத்தில் நான் சினிமாவுக்கான நேர்மையுடன் நூறு சதவிகிதம் சரியாகவே நடந்து கொண்டு கதையைக் கையாண்டு இருக்கிறேன். இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. அதற்காக நாயகன் கெட்டவன் என்று காட்ட இவ்வளவு விரிவாக அவனது வக்கிரங்களைக் காட்டியிருப்பது சரியா?நாயகன் அய்யனார் ரொம்பவும் கெட்டவன். இதை எப்படிச் சொல்வது? அவன் மிக மிக மோசமானவன் என்று எப்படிக் காட்டுவது? அந்தக் கேரக்டரை அழுத்தமாகச் சொல்லவேண்டும். அவனது வரைமுறை இல்லாத வாழ்க்கையை யாருக்கும் அடங்காத முரட்டுத்தனத்தை எதற்கும் கட்டுப்படாத ரவுடித்தனத்தை சொல்லியாக வேண்டும். அப்படிப்பட்டவன் தகாத உறவுகளால் நோய் வந்து வீழ்வதைக் காட்டவேண்டும். அப்படிப்பட்ட முரடன் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டால் எப்படியெல்லாம் குலைந்து நாசமாகிறான் என்பதைச் சொல்லவேண்டும். இந்த அவசியம் கருதியே... அவன் எந்த அளவுக்குத் தப்பான ஆள் என்பதற்காகவே அப்படிக் காட்டினேன். மிருகம் பார்ட் 1, மிருகம் பார்ட் 2, மிருகம் பார்ட் 3 என்று எடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டலாம். ஒரே படத்தில் சொல்லியாக வேண்டும். அதனால்தான் அப்படி மோசமானவனைக் காட்ட வேண்டியதாகிவிட்டது. எனக்கு நூறு சதவிகித மன திருப்தியுடன் தான் படம் வந்திருக்கிறது. படத்திற்கு எதிர்ப்பு விமர்சனங்கள் வருமென்று எதிர்பார்க்கவில்லையா?
எதிர்பார்த்ததுதான். சிலவற்றை சந்தித்துதான் ஆகவேண்டும். நம் நாட்டில் இப்படி முறை தவறிய உறவுகளால் எவ்வளவு நோய்கள் பரவுகின்றன. எய்ட்ஸ் நோயாளிகள் பெருகி வருவதை சொன்னால் கேட்கும்போது கசக்கத்தான் செய்கிறது. ஆனால் சில கசப்புகளை சொல்லித்தான் ஆகவேண்டும். நல்லதை வலியுறுத்தி சில கெட்டதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். படத்தைத் திட்டிக் கொண்டே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் தியேட்டர்களில் பார்த்த வரை முதலில் திட்டுகிறார்கள். படம் முடிந்து அவர்களிடம் ஏற்படும் பாதிப்பே வேறு.
குடும்பத்துடன் பார்க்கும்படி படம் இல்லையே...?
இது குடும்பத்தினருடன் பார்க்க எடுக்கப்பட்டது அல்ல என்றே வைத்துக் கொள்ளுங்களேன். வயது வந்த இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட படம்தான். அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை எச்சரிக்கை செய்யவே இப்படம். இளமை, திமிர் எல்லாம் நிலையில்லாதது. எப்படிப்பட்ட பலசாலியும் முரடனும் முறை தவறிப் போகும்போது என்ன ஆகிறான் என்பதை நன்றாக சொல்லியிருப்பதாகவே நம்புகிறேன். திட்டிக் கொண்டே பார்ப்பவர்கள் படம் முடிவில் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதுதான் நிஜம். இந்த அய்யனார் நிஜப் பாத்திரமா?இப்படிப்பட்ட ஒருவர் திருவாரூர் மாவட்டம் களப்பால் அருகிலுள்ள குலமாணிக்கம் என்கிற ஊரில் வாழ்ந்த உண்மைப் பாத்திரம். கதாநாயகனாக ஒரு புதுமுகம் ஆதியை நடிக்க வைத்தது ஏன்?இப்படிப்பட்ட ஒரு கேரக்டருக்கு எந்த ஹீரோ நடிக்க கால்ஷீட் கொடுப்பார்கள். இந்த ஆதியை எனக்கு சினிமாவுக்கு வரும் முன்பே தெரியும். இவர் இப்போது தெலுங்கில் ஒரு படம் ஹீரோவாக நடித்துவிட்டார். `மிருகம்' தமிழில் அவருக்கு முதல் படம். 10 கிலோ எடை கூட்டி 20 கிலோ எடை குறைத்து அவர் காட்டிய ஈடுபாடு சாதாரண விஷயமல்ல. பத்மபிரியா பிரச்சினை உங்களுக்கு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியது?
அது நடந்து முடிந்த கதை. எல்லா பிரச்சினையும் முடிந்துவிட்டது. இதில் யார் யார் எப்படி நடந்து கொண்டார்கள் என்று இப்போது பேசுவது பயனற்றது. அவரவர் கோணத்தில் அவரவருக்கு சரியானதை செய்கிறார்கள். அவ்வளவுதான். பத்மபிரியா சிறந்த நடிகை என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. 'மிருகம்' அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாகவே இருக்கும்.
பரபரப்பு திலகமாகவே அறியப்பட்டு இருக்கிறீர்கள். இது பலமா பலவீனமா?
சில நேரம் மைனஸ். சில நேரம் ப்ளஸ். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும். எப்போதும் பரபரப்பு - சர்ச்சை என்றிருந்தால் வேறு எதுவும் தெரியாது என்று முத்திரை குத்தி விடுவார்கள். இந்த வட்டத்திலிருந்து நான் வெளிவர வேண்டும். அடுத்து நான் இயக்க இருக்கும்படம் எந்தவித சர்ச்சையும் இல்லாமலிருக்கும். ஆறு கதைகள் தயாராக உள்ளன. என் அடுத்தப் படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் கதையாகவே இருக்கும். 'மிருகம்' தயாரிப்பாளருக்கே அடுத்தப் படம் இயக்குகிறேன். நடிப்பது யார் என்று இன்னும் முடிவாகவில்லை.