அண்மையில் வெளி வந்துள்ள 'மிருகம்' படத்தில் அய்யனாராக வாழ்ந்து அசத்தியிருப்பவர் ஆதி. முதல் படத்தின் மூலமே முத்திரை பதிந்து இருக்கிறார். திரையரங்குகளில் ரசிகர்களின் வசவுகளையே வாழ்த்துகளாக பெற்று வரும் ஆதியுடன் ஒரு சந்திப்பு.மனிதனாக இருந்த நீங்கள் எப்போது மிருகமானீர்கள்...?எனக்கு பூர்வீகம் ஹைதராபாத். ஆனால் நான் வளர்ந்தது படிச்சது எல்லாம் இங்கு சென்னையில்தான். ஸ்கூல் படிப்பு டான் பாஸ்கோவில். காலேஜ் ஸ்ரீபெரும்புதூர் வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் காலேஜ். எனக்கு சின்ன வயசிலேயே நடிப்புல ஆர்வம் உண்டு. ஸ்கூல்ல மேடையில நிறைய நடிச்சதுண்டு. கல்ச்சுரல் புரோகிராம்ஸ்ல ஆர்வமா கலந்துக்குவேன். ஆர்வத்தை மனசுல வச்சிக்கிட்டே இன்ஜினியரிங் முடிச்சேன். என் சினிமாக் கனவு உள்ளுக்குள் நெருப்பா கனிஞ்சுக்கிட்டு இருந்திச்சு. மேஜிக் லண்டன்னு ஒரு அமைப்பு இருக்கு. அதை ஆரம்பிச்சு நடத்திட்டு வர்றவர் ரவி. அவர் பிரான்சில் நடிப்பு பயிற்சி கற்றவர். அவர்கிட்டே நான் மூணு மாதம் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அது மட்டுமல்லாம கூத்துப்பட்டறை அனுபவம் உள்ள மு. ராமசாமிகிட்டே நடிப்பு கத்துக்கிட்டேன். இவர் 'பிதாமகன்'ல விக்ரமை வளர்ப்பவரா நடிச்சிருப்பவர். பாண்டியன் மாஸ்டர்கிட்டே சிலம்பம் பயிற்சியும் எனக்கு உண்டு.`
மிருகம்' பட வாய்ப்பு கிடைத்தது பற்றி...?பாண்டியன் மாஸ்டரைப் பார்க்க வந்தப்போ சாமி சார் அறிமுகம் கிடைச்சுது. அதை சாதாரணமா அப்போ நினைச்சிருந்தேன். அங்கே சாமி சாரை நான் சந்திச்சபோது அவர் 'உயிர்' படம் கூட பண்ணலை. அதுக்கும் முன்னாடியே அவரை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தாங்க. அது நடந்து பல மாதங்கள் ஓடிப் போச்சு. நானும் தெலுங்கில் ஒரு படத்துல ஹீரோவா அறிமுகமாகி நடிச்சிட்டேன். அந்தப் படம் பேரு 'ஒக்க விசித்திரம்' தேஜா தான் டைரக்டர். 'ஜெயம்' 'சித்திரம்' படங்களை தெலுங்கில் எடுத்தவர் அவர். நான் மறந்தே போய்ட்டேன். அப்போ நான் பாங்காக்கில் இருந்தேன். சாமி சார் கிட்டேயிருந்து திடீர்னு அழைப்பு வந்திச்சு. பாங்காக்ல இருக்கிறேன்னு சொன்னேன். உடனே வரச் சொன்னார். வந்தேன். 'மிருகம்' பட வாய்ப்பு கொடுத்தார். நடிப்புக்காக எதையும் செய்யத் தயாரா இருக்கும் என் ஆர்வம் அவருக்குப் பிடிச்சதால தான் இந்த வாய்ப்பைக் கொடுத்தார். படத்துக்காக உடல் எடையை கூட்டிக் குறைத்தது எப்படி?
இயக்குனர் சாமி முதலில் சொன்னது என்ன தெரியுமா... '10 கிலோ எடை கூட்டணும் 20 கிலோ எடை குறைக்கணும்'. முதலில் எடையைக் கூட்டிட்டு வான்னார். நான் சாதாரணமா 83 கிலோ இருந்தவன் 94 கிலோ வரை கூட்டிக் காட்டினேன். ஒரே மாதத்தில் இதைச் செய்தேன். படத்தில் முதல்பாதியில் இந்த வெயிட்டோடதான் நடிச்சேன். மறுபாதியில் இளைக்கணும். 20 கிலோ இளைச்சேன்.
இதுக்கு எனக்கு பெரிசா உதவியது அகில் மாஸ்டர். அவர் தான் சேரன் சார், அமீர் சாருக்கெல்லாம் இப்படி உடம்பை எடை கூட்டவும் குறைக்கவும் பயிற்சி தர்றவர். 'கற்றது தமிழ்'ல ஜீவாவுக்கு உடம்பு குறைச்சதும் அவர்தான். இந்த விஷயத்தில் அவர் எக்ஸ்பர்ட். அவர் சொன்னபடி செஞ்சேன். கஷ்டமில்லாமல் எடை அதிகமானது. அதே போல குறைஞ்சது.
எடை அதிகமாகணும்னா அரிசி சாதம், முட்டை, மட்டன், பால், சிக்கன்னு, உருளைக்கிழங்குன்னு புரோட்டீன் ஃபேட் அயிட்டங்களை நிறையச் சாப்பிடணும். குறைக்க இவற்றை தவிர்க்கணும். அவர் யோகா முறையில் பயிற்சி தர்றவர். பயிற்சியால நல்ல மாற்றத்தை உணர முடியும்.
படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி இருந்தது?
ஷுட்டிங்ல நான் மட்டுமல்ல பத்மபிரியாவும் ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. படம் வந்த பிறகு ரெண்டு பேருக்கும் பாராட்டு கிடைச்சுட்டு இருக்கு. படத்துல நான் ஒண்ணுமே செய்யலை. டைரக்டர் சாமி சார் சொன்னதை அப்படியே செஞ்சேன். அவர் எல்லாத்தையும் நடிச்சுக் காட்டிடுவார். படம் ரிலீசான தியேட்டர்ல போய்ப் பார்த்தேன். மதுரை, சேலம், கோயமுத்தூர்னு பல ஊருங்களுக்குப் போனேன். என் கேரக்டருக்கு நல்ல ரெஸ்பான்ஸ். திட்டோ திட்டுன்னு திட்டுறாங்க. அதுதான் எனக்கு கிடைச்ச பாராட்டு. படத்தோட முதல் பாதியில் திட்டுறாங்க. கோபப்படுறாங்க. பின்பாதியில் பார்த்துட்டு அழறாங்க. கண் கலங்குறாங்க. என்ன ஒரு வேடிக்கைன்னா எல்லா இடங்களிலும் ஆடியன்சோடு உட்கார்ந்து படம் பார்த்தேன். யாரும் என்னைக் கண்டுக்கலை. ஆனால் சென்னை உதயம் தியேட்டர்ல பார்க்கிறப்போ என்னை அடையாளம் தெரிஞ்சு ஒரே ரகளை. ஒரு கூட்டமே என்னை சூழ்ந்துக்கிட்டு படம் மனசை ரொம்பவே பாதிச்சுதுன்னு சொன்னாங்க. பல வாலிபப் பசங்க. ஜாலின்னு தாங்க பண்ணின தப்பை நெனைச்சுப் பயப்படறதா சொன்னாங்க. உங்கள் கேரக்டருக்கு எத்தகைய விமர்சனங்கள் வந்தன?படம் இந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது சந்தோஷமான விஷயம். படம் பார்த்துட்டு சொல்ற அபிப்ராயங்கள் வெறும் எமோஷனா இல்லாம யதார்த்தமா மெச்சூர்டா இருக்கு. நாகப்பட்டினத்திலிருந்து எனக்கு ஒரு போன் வந்திச்சு. ஒருத்தர் அரைமணி நேரம் அழுதிட்டே பேசினார். அவருக்கு பிராஸ்ட்டியூட்ஸ்கிட்டே போறது பழக்கமாம். அன்னைக்கும் அப்படித்தான் போக புறப்பட்டாராம். ஒரு பிரச்சினையால அன்னைக்குப் போக முடியலை. ஒரு சேஞ்சுக்காக 'மிருகம்' படத்துக்குப் போனாராம். படம் பார்த்து மனசு மாறி... என்னைப் பாராட்டணும்னு என் கூடப் பேசணும்னு ரொம்பக் கஷ்டப்பட்டு நம்பர் வாங்கி பேசியிருக்கிறார். கடைசியில் அவர் என்கிட்டே ஒரு சத்தியம் செஞ்சார்.
இனி நான் விலைமாதர்களிடம் போகமாட்டேன்னார். இது தன்னைப் போல உள்ள எல்லாருக்கும் கொடுத்திருக்கும் செருப்படி. இனி எவனும் இப்படி ஜாலி தேடி போகக் கூடாதுன்னார். எனக்கு தேசிய விருது கிடைத்தால் சந்தோஷம் என்றார் ஆதி.