Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பண திருப்தியை விட மன திருப்தி முக்கியம் - சங்கீதா

Advertiesment
பண திருப்தியை விட மன திருப்தி முக்கியம் - சங்கீதா
, செவ்வாய், 11 டிசம்பர் 2007 (15:45 IST)
படத்தில் நமது கேர‌க்டரை‌ப் ப‌ற்‌றி ஏதாவது பேசப்படும் அம்சம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படத்தில் நடிப்பதுதான் சங்கீதாவுக்குப் பிடிக்குமாம். தனக்குப் பண திருப்தியை விட மன திருப்தி முக்கியம் என்று கூறும் இவர் மற்ற நடிகைகளிடமிருந்து மாறுபட்டுத் தெரிகிறார்.

இனி சங்கீதா‌விட‌ம்....

பரபரப்பு ஏற்படுத்தும் படங்களில் மட்டும்தான் நடிப்பீர்களா?

இது தவறான தகவல். நான் நடிக்கும் படக்கதை பரபரப்பு ஏற்படுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல. டைரக்டர்தான் பொறுப்பு. நான் நடித்த 'உயிர்' படத்திற்குப் பிறகு தான் இப்படி ஒரு தவறான இமேஜ் ஏற்படுத்தியிருக்காங்க. ஆனால் நான் சர்ச்சை - பரபரப்புல சிக்குற மாதிரி கதையைத் தேடுறதில்லை. தானா அமையுறதுதான் எல்லாமே.

'தனம்' படத்தில் நடிப்பது கூட பாலியல் தொழிலாளி வேடம். இது பரபரப்பு இல்லையா?

நான் முன்னாடியே சொன்னமாதிரி 'தனம்' பட வாய்ப்பும் தானா வந்தது தான். படம் வெளியானால் பேசப்படும். பாலியல் தொழிலாளியாய் நடிப்பது பாவமல்ல. இந்தியில் பெரிய பெரிய நடிகைங்க எல்லாம் நடிச்சிருக்காங்க. ஆனா அங்கே யாரும் இப்படி பெரிசுபடுத்திக் கேட்கிறதில்லை. ஆனா இங்கே எல்லாத்தையும் சர்ச்சையாக்கிடறாங்க.

ஏன் நிறைய படங்களில் நடிப்பது இல்லை?

இப்போ 'எவனோ ஒருவன்' வெளியாகியிருக்கு. அப்புறம் `தனம்' போய்க்கிட்டிருக்கு. அடுத்ததா `காள', `நாயகன்'. இது தவிர தெலுங்குல ரெண்டு படம் பண்றேன். எனக்கு படங்களோட எண்ணிக்கை முக்கியமில்லை. எப்படிப்பட்ட படம்கிறது தான் முக்கியம். எனக்கு பணம் சம்பாதிக்கணும்கிறதை விட நல்ல படம் சம்பாதிக்கணும்கிறதுலதான் ஆர்வம், விருப்பம் எல்லாம். சுருக்கமா சொன்னா எனக்கு பண திருப்தியை விட மன திருப்திதான் முக்கியம்.

ஒண்ணு தெரியுமா உங்களுக்கு? ஒரு கட்டத்துல எனக்கு சினிமாமேல கோபம், வெறுப்பு, விரக்தி எல்லாமும் இருந்திச்சு. இனி சினிமாவுல நடிக்கக் கூடாதுன்னு இருந்தேன். அப்படிப்பட்ட சூழ்நிலைலதான் 'பிதாமகன்' வாய்ப்பு வந்திச்சு. எனக்கு சினிமாமேல மறுபடி பந்தத்தை ஏற்படுத்தினது பாலாசார்.

`எவனோ ஒருவன்' அனுபவம் எப்படி?

அந்தப்படம் மராத்தியில வந்து நிறைய அவார்ட்ஸ் வாங்கினதுன்னு சொன்னதுமே அதுமேல எனக்கு மரியாதை வந்திச்சு. தமிழ் தெரியாத டைரக்டர்கிட்டே தமிழ்ப்படம் நடிச்சது புதுவித அனுபவம். மாதவன் சார் எல்லாருக்கும் சப்போர்ட்டா இருந்தார். நிஷிகாந்த் சீன்ஸ் ரியலிஸ்டிக்கா இருக்க ரொம்ப நுணுக்கமா பார்ப்பார். ரொம்ப கூலான கேரக்டர். பதற்றமே இருக்காது அவரிடம் - அவரோட நிதானம், பொறுமை எனக்கு ஆச்சரியமா இருந்திச்சு. `எவனோ ஒருவன்' படம் முடிஞ்சதே தெரியலை. வெரிகுட் எக்ஸ்பீரியன்ஸ். இதுக்கெல்லாம் காரணம் மாதவன் சார்தான்.

அதில் உங்கள் கேரக்டருக்கு எந்த அளவில் பொருந்தியிருக்கிறீர்கள்?

பெரிய டைரக்டர். தெளிவான யூனிட். மாதவன் சார் பேனர். என்னை செலக்ட் பண்ணிய போதே நாமதான் நல்ல சாய்ஸா இருந்திருக்கணும்னு எனக்கு நம்பிக்கை வந்திருச்சு. பேசாம சொன்னபடியே நடிச்சேன். ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமா பார்த்துப் பார்த்து படமாக்கினாங்க. அதனாலதான் எல்லா கேரக்டர்ஸும் பாராட்டுகிற அளவுக்கு இருக்கு.

என் கேரக்டர் ஒரு மிடில் க்ளாஸ் பேமிலியில ஹவுஸ் ஒய்ஃப். அது எல்லாரும் சந்திச்ச கேரக்டர். இந்தப் படத்துல எல்லாருமே அப்படித்தான். எல்லாருமே நாம அன்றாடம் சந்திக்கிறவங்க. அந்த யதார்த்தம் தான் என் கேரக்டரையும் பாராட்ட வச்சிருக்கு. மத்தவங்க சொன்ன அபிப்ராயத்தை வச்சித்தான் நான் நல்லா பண்ணியிருக்கிறதா நம்பறேன்.

படங்களைத் தேர்வு செய்யும் முன் நீங்கள் எதிர்பார்ப்பது எது?

நல்ல கதை. என் கேரக்டர் நல்லா இருக்கணும். இது எல்லாரும் சொல்றதுன்னு நினைச்சிடாதீங்க. நிஜமா இதை நான் சீரியஸாப் பார்க்கிறேன். ஏன்னா ஏதாவது படம் பண்ணினால் போதும்னு எனக்கு எந்தவித கட்டாயமும் இல்லை. அப்படி அவசியமும் இருந்ததில்லை.

நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்று ஏதாவது உண்டா?

என்னைப் பொறுத்தவரை ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு இமேஜ் தேவையில்லை. அப்படி ஒரு இமேஜ் இருந்தால் அதை அந்த ஆர்ட்டிஸ்ட்தான் உடைக்கணும். உடைச்சு அதிலிருந்து வெளியே வரணும். சமீபத்துல 'மிருகம்' கேசட் ரிலீஸ் விழாவுல கலந்துக்கிட்டேன். அங்கே எல்லாரும் அண்ணி சங்கீதான்னு கூப்பிட்டாங்க. அது 'உயிர்' படத்துல நடிச்ச அண்ணி கேரக்டரின் வெற்றி. அதன் பாதிப்பு அது. ஆனா அந்த இமேஜை அடுத்து வர்ற படம் உடைக்கணும். ஒரு ஆர்ட்டிஸ்ட் எந்தவித வட்டத்திலும் சிக்கக்கூடாது. எல்லாவித கேரக்டர்களிலும் நடிக்கணும். அந்த வகையில் இப்போ `எவனோ ஒருவன்' வந்திருக்கு. அடுத்து 'தனம்' வரும்.

Share this Story:

Follow Webdunia tamil