சினிமாவில் அறிமுகம் ஆவது அரிது, நல்ல படமாக வெற்றிப் படமாக கிடைப்பது அரிது. ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவுலகில் நடிகைக்கு கனமான நடிக்க வாய்ப்பு கிடைப்பது வெகு அரிது. ஆனால் இந்த அரியவை அனைத்தும் கற்றது தமிழ் நாயகி அஞ்சலிக்கு சாத்தியமாகியிருக்கிறது எளிதாக.
பாலு மகேந்திரா, பார்த்திபன், சுஹாசினி போன்ற திரையுலகினரின் பாராட்டுகளை முதல் படத்திலேயே தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார் இவர். இப்போது ஆயுதம் செய்வோம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஞ்சலியை அண்மையில் சந்தித்தபோது...
கற்றது தமிழ் அறிமுக படலம் பற்றிக் கூறுங்களேன்...
நான் நடித்த முதல் தமிழ்ப் படம்தான் கற்றது தமிழ். ஆனால் இதற்கு முன் இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகிவிட்டேன்.
ஒரு நாள் எங்கள் வீடு இருக்கும் வெங்கீஸ்வரர் நகர் பகுதியில் நடந்து போய்க் கொண்டிருந்தேன்.அப்போது ஒருவர் என்னிடம் பேச்சுக் கொடுத்து விசாரித்தார். சினிமாவில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்றார். நான் தெலுங்குப் படத்தில் நடித்திருக்கிறேன் என்றேன். பரவாயில்லையே என்று ஆச்சரியப்பட்டார். அதன்பிறகு உன் முகம் நான் என் படத்துக்குத் தேடும் முகம் மாதிரி இருக்கிறது என்று கூறினார். நானும் சம்மதித்தேன். அவர் தான் ராம் சார். ஒரே தெருவில் தான் அவர் அலுவலகமும் எங்கள் வீடும் இருந்திருக்கிறது. ரொம்ப ஆச்சரியப்பட்டு, பக்கத்தில் இருக்கும் உன்னை விட்டுட்டு எங்கெல்லாம் யார் யாரையெல்லாமோ பார்த்திருக்கிறோமே என்றார் ராம் சார். இதுதான் கற்றது தமிழ் படத்தில் நான் நடிக்க வந்த கதை.
தெலுங்கில் எப்படி அறிமுகம் ஆனீர்கள்-
எங்கள் குடும்பத்தில் அப்பா பிஸினஸ்மேன். அம்மா, அண்ணன், தம்பி, நான் என ஐந்து பேர். அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறார். குடும்பத்தில் மற்றவர்கள் இங்கு இருக்க, நான் ஆந்திராவில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தேன். எனக்கு சின்ன வயசிலிருந்தே சினிமா மீது அர்வம். நிறைய படங்கள் பார்ப்பேன். ஸ்கூல் படிப்பு முடிந்ததும் சென்னை வந்து விட்டேன். இங்கு வந்தவுடன் போட்டோ செஷன் வைத்து ஒரு ஆல்பம் போட்டு ஒரு மாடல் கோ ஆர்டினேட்டரிடம் கொடுத்தோம். அந்தப் போட்டோஸ் பார்த்து விளம்பர மாடலாக நிறைய வாய்ப்புகள் வந்தன. ஜுவல்லரி விளம்பரங்களில் நடித்தேன். இப்படி 25 விளம் பரங்களில் நடித்தேன். இன்டர்நெட்டில் என் படம் பார்த்து தெலுங்குப் பட வாய்ப்பு வந்தது. முதல் படம் போட்டோ. அடுத்த படம் பிரேமலேகா ராசா அதற்கு அடுத்து கற்றது தமிழ் வந்தது. இப்போது சுந்தர் சி சாருடன் ஆயுதம் செய்வோம் படத்தில் நடிக்கிறேன்.
கற்றது தமிழ் வழக்கமான படமல்ல... அந்த அனுபவம் எப்படி இருந்தது?
நான் இதற்கு முன்பு இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்திருந்தாலும் கற்றது தமிழ் எனக்குப் புதிய அனுபவம்தான். படத்தில் கமிட் ஆனவுடன் ராம் சார் சொன்ன முதல் விஷயம் நடிப்பு என்பது தெரியக்கூடாது. ஆனால் நடிக்க வேண்டும். அது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. இருந்தாலும் நடித்தேன். கற்றது தமிழ் படத்தில் என் நடிப்பை எல்லாரும் பாராட்டும்போது எனக்குப் பெருமையாக சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அந்தப் படத்துக்காக நான் எதுவுமே செய்யவில்லை. ராம் சார் நடித்துக் காட்டினார். நான் அதைக் காப்பி அடித்தேன் அவ்வளவுதான். அந்த அளவுக்கு அவர் சொல்லிக் கொடுத்தார். இந்த ஒரே படத்தில் நான் 17 வயதுப் பெண்ணாகவும் 21 வயதுப் பெண்ணையும் வித்தியாசம் காட்டியிருப்பேன், அதற்குக் காரணம் ராம் சார் தான். இதற்கு முன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் கற்றது தமிழ் படத்துக்காக நடித்த 70 நாட்களும் புதுமாதிரி அனுபவம். சினிமா பற்றி புதிய கோணத்தைப் புரிந்து கொண்ட உணர்வு ஏற்பட்டது. அந்த அளவுக்கு ராம் சாரின் டைரக்ஷன் இருந்தது.
பாலுமகேந்திரா, பார்த்திபன் போன்று பலரது பாராட்டைப் பெற்றுள்ள நீங்கள் இனி சராசரி படங்களில் நடிப்பீர்களா?
பாலு மகேந்திரா சார் பாராட்டியது வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷம். பெருமை. ஏதோ அவார்டு கிடைத்ததைப் போல சந்தோஷப்பட்டேன். முதலிரண்டு படங்களில் டப்பிங் பேசவில்லை. இந்தப் படத்துக்காக சொந்தக் குரலில் பேசி நடித்தேன். டப்பிங்கில் கஷ்டப்பட்டுப் பேசினேன். அதெல்லாம் வீண் போகவில்லை என்று பெருமையாக இருந்தது. என் அடுத்த தமிழ்படம் ஆயுதம் செய்வோம். அதில் மதுரைக்காரப் பெண்ணாக நடிக்கிறேன். கற்றது தமிழ் ஆனந்திக்கு நேரெதிர் கேரக்டர் அது. எப்போதும் துறுதுறுவென்று பேசிக் கொண்டிருக்கிற கேரக்டர். ஒரு படத்தில் ஒரு கேரக்டர் நடித்தால் இன்னொரு படத்தில் அதே மாதிரி செய்யக் கூடாது. வேறுபட்டு இருக்க வேண்டும். நான் ஒரு நடிகை. எந்த ஒரு வட்டத்துக்குள்ளும் சிக்கிக் கொள்ளக் கூடாது. கற்றது தமிழ் போல வாழ்க்கையில் ஒரு படம்தான் வரும். எல்லாப் படமும் அப்படி அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. இதுதான் என் அபிப்ராயம்.
இப்போது வாய்ப்புகள் எப்படி உள்ளன?
நான் முன்னாடியே சொன்ன மாதிரி நம் கேரக்டர் தியேட்டரைவிட்டு படம் பார்த்துவிட்டு போன பின்பும் மக்கள் மனதில் நிற்க வேண்டும். அதுதான் நான் படம் நடிக்கும் முன் பார்ப்பது, ஆயுதம் செய்வோம் படத்தை தவிர, ஹோங்க னாசா என்கிற கன்னடப் படத்தில் நடிக்கிறேன், ஹீரோ பிரேமைவிட எனக்கு முக்கியத்துவம் இருக்கிறது. கதையின் பெரும் பகுதி என் மேல் இருக்கும், டெண்டல் காலேஜ் ஸ்டூடுண்டாக நடிக்கிறேன். படத்தை இயக்குபவர் ரத்னஜா. இவர் முதல் படத்திலேயே இரண்டு மாநில விருது, 5 பிலிம்·பேர் விருதுகள் வாங்கியவர்.
அவரது படம் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு சினிமாவைத் தவிர எதிலும் ஆர்வமில்லை. நட்சத்திரங்களில் எனக்குப் பிடித்தவர் ஸ்ரீதேவி. அவர் போல வர ஆசை என்று கூறி முடித்தார்.