Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கற்பனைக்கெட்டாத சினிமா வளர்ச்சி - நாக் ரவி

Advertiesment
கற்பனைக்கெட்டாத சினிமா வளர்ச்சி - நாக் ரவி

Webdunia

, வெள்ளி, 19 அக்டோபர் 2007 (12:49 IST)
webdunia photoWD
நாக் ரவி. இந்தப் பெயர் கடந்த ஆண்டுகளில் நடிகை சினேகா காதல் விவகாரத்தில் அடிபட்ட பெயர். காதல் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த இளைஞர் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டார்.

போன ஆண்டு இவர் ஒரு தொழில் நிறுவனம் தொடங்கினார். தனது நிறுவனத்துக்கு 'அடுத்த தலைமுறைக்கான சினிமா கம்பெனி' என்று அடைமொழியிட்டு அறிவித்தார். அப்போது அவரை பரிகாசமாகப் பார்த்தனர். இன்று அதில் வெற்றி பெற்று இருக்கிறார். இங்கிலாந்து அரசின் இளம் சினிமாத் தொழில் முனைவோருக்கான விருதும் பரிசுத்தொகையும் பெற்றிருக்கிறார் என்றால் நம்பத்தான் முடியவில்லை. இது எப்படி சாத்தியமாயிற்று? நாக் ரவியிடமே கேட்கலாம்...!

உங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு, வெற்றி ரகசியம் பற்றி கூற முடியுமா?

இந்த ஒரு கேள்விக்குரிய பதிலை மட்டுமே ஒரு புத்தகமாக எழுத முடியும். அவ்வளவு வேலைகள் நடந்திருக்கின்றன. அவ்வளவு திட்டங்கள் ஆராய்ச்சிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டில் சினிமாத் தொழில் நலிவடைந்து விட்டது. சினிமா பார்ப்பவர்கள் குறைந்து வருகிறார்கள் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது. இதுபற்றி நான் ஆராய்ச்சி செய்தேன்.

நான் ஒருவன் மட்டுமல்ல.. பல பேர் கொண்ட டீம். பல வகைகளில், பல வழிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டார்கள். இதில் சினிமாவுக்கு உள்ள தேவை புரிந்தது. இதற்கு எனக்கு 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது. அதன் பிறகுதான் சினிமா சார்ந்த தொழிலில் இறங்குவது என்று முடிவெடுத்தேன். முடிவெடுத்த பின் செயலில் இறங்கினேன்.

என்ன மாதிரியான செயலில் இறங்கினீர்கள்?

இன்று நம் இந்தியாவைப் போலவே உலகெங்கும் வாழும் இந்தியர்களும் இந்தியப் படங்களின் மீது ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் - உற்சாகம் அளவிட முடியாதது. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினால் வெற்றி பெற முடியும் என்று தீர்மானித்தேன்.

இந்தியப் படங்களை குறிப்பாகத் தமிழ்ப் படங்களை வாங்கி வெளிநாடுகளில் வினியோகம் செய்வது என்று முடிவெடுத்தேன். அப்படி நான் முதலில் வாங்கி வெளியிட்ட படம் 'வட்டாரம்.' சென்ற ஆண்டு செப்டம்பர் 28-ல் வெளியிட்டேன். ஓராண்டு ஆகிவிட்டது அதற்குள் 23 படங்கள் வெளியிட்டு இருக்கிறேன். முதல் ஆண்டே இவ்வளவு படங்கள் வாங்கி வெளியிட்டது எங்கள் நிறுவனமாகத்தான் இருக்கும். இப்படி உலக நாடுகளில் இந்தியப் படங்களை விநியோகம் செய்வதில் நம்பர் ஒன் இடத்தை தொட்டு விட்டோம். இது கற்பனைக்கெட்டாத சினிமா வளர்ச்சி.

திரையரங்குகள் வணிக வளாகங்களாக மாறி வரும்போது சினிமாவுக்கு எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும்...?

சினிமாவுக்கான கவர்ச்சியும் வளர்ச்சியும் என்றைக்கும் குறையாது. விஞ்ஞானத்தில் நம்மை விட முன்னேறிய நாடுகளிலும் சினிமா ரசிக்கப்படுகிறது. அங்கும் படங்கள் கமர்ஷியலாக பெரிய வெற்றி பெறுகின்றன. சில தியேட்டர்கள் இடிக்கப்பட்டிருக்கலாம். பல இடங்களில் மல்டி தியேட்டர்கள் கட்டப்பட்டு வருகின்றன.

சென்னையில் இதுமாதிரி மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் ஏவிஎம்மில் 7 வர உள்ளது. நேஷனல் தியேட்டரில் 6, விஜய சேஷ மஹாலில் 8, அமைந்தகரையில் 6 வர உள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது எதிர்காலம் நன்றாகவே உள்ளது.

நம் நாட்டில் சினிமாத்தொழிலின் வளர்ச்சி விகிதம் எப்படி உள்ளது?

இன்று வளர்ந்து விட்ட தொழில்நுட்ப வசதிகளால் சினிமாவுக்கு பயன் கிடைத்து வருகிறது. இன்று ஒரே நேரத்தில் அமைந்தகரையிலும் அமெரிக்காவிலும் படத்தை திரையிட முடிகிறது. முன்பெல்லாம் இது வாய்ப்பே இல்லாத விஷயம். சென்ற 2006-ல் இந்திய சினிமாத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட தொகை 42 ஆயிரம் கோடி ரூபாய். வழக்கமாக இருக்கும் தொழில் வளர்ச்சி 3-லிருந்து 5 சதவீதம்தான் இருக்கும். 2006-ல் வளர்ச்சி விகிதம் 18-லிருந்து 20 சதவீதம். 2011-ல் இது ஒரு லட்சம் கோடியாக இருக்கும். அதில் தென்னிந்திய சினிமாத் தொழிலின் பங்கு 50 சதவீதம் இருக்கும். இது மாபெரும் நம்பிக்கையூட்டும் வளர்ச்சி இல்லையா? குறிப்பாக தென்னிந்திய சினிமாத் தொழிலின் வளர்ச்சி பிரமாதமாக இருக்கிறது.

உங்கள் Insight நிறுவனத்தின் வெற்றி ரகசியத்தை இன்னமும் சொல்லவில்லையே?

எந்த சினிமா நிகழ்ச்சியென்றாலும் அதில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக Insight என்கிற பெயர் இருந்து வந்திருக்கிறது. பட வினியோகத்தை தொடர்ந்து ஆடியோ வெளியிட்டும் புரட்சி செய்து இருக்கிறோம். இன்சைட் மீடியா, இன்சைட் சினிமா என்று இரண்டு நிறுவனங்கள் எங்களுடையது. இவற்றில் 98% பங்கு என்னுடையது. இதில் முடிவுகள் நான் எடுப்பவைதான்.

எங்களுக்கு சென்னையில் அலுவலகம் உண்டு. 80 பேர் வேலை பார்க்கிறார்கள். அது தவிர வெளிநாடுகளில் சிங்கப்பூர், கனடா, நியூசிலாந்து, மலேசியா, துபாய், அமெரிக்கா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் கிளை அலுவலகங்கள் இருக்கின்றன. 'இன்சைட் மீடியா' சார்பில் ஆடியோ, ஹோம் வீடியோ வெளியிடுகிறோம்.

எங்கள் நிறுவனத்தில் அனைவரும் 35 வயதுக்கு கீழே உள்ளவர்கள் ஓயாது உழைக்கிறவர்கள். வெற்றி ரகசியம் என்பது புதுமையான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். அதற்காக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து 'ஸ்ட்ரீட் ஷோக்கள்' நடத்தியிருக்கிறோம். ஆடியோ சிடியில் பைரசியைத் தடுக்க பைரசியை விட விலை குறைவாக ஆடியோ சிடி கொடுத்தோம்.

சிடிக்கள் விற்பனையை மியூசிக்கல்ஸில் மட்டுமின்றி டிபார்ட்மென்டல் ஸ்டோர், பெட்ரோல் பங்க், தியேட்டர்ஸ் என்று விரிவுபடுத்தி வெற்றி பெற்றோம்.

பெரிய நடிகர் படமென்பதால் மட்டும் ஆடியோ ரைட்ஸ் வாங்குவதில்லை. நல்ல பாடல்கள் இருந்தால் மட்டுமே வாங்குவோம். இதில் கறாராக இருந்தால்தான் வெற்றி பெற முடிந்தது.

எதிர்காலத் திட்டங்கள்?

திட்டங்கள் சரியாக இருந்ததால்தான் எங்களால் 'சிவாஜி'யை வாங்கி வெளியிட முடிந்தது. விருப்பப்பட்ட பாடலை இரண்டு ரூபாய்க்கும் விருப்பப்பட்ட பாடல் காட்சிகளை மூன்று ரூபாய்க்கும் பதிவு செய்து தரும் திட்டம் உள்ளது. வீட்டிலிருந்தே டிக்கெட் பதிவு செய்யும் ஈ-டிக்கெட் வசதியை எங்கும் விரிவுபடுத்தப் போகிறோம். செல்போனில் SMS செய்தால் டிக்கெட் ரிசர்வாகிவிடும்.

எஸ்.ஆர்.டிவியில் இந்தியா தவிர உலக நாடுகளில் இந்தியப் படத்தைக் காணமுடியும். 'ரெட் கேமரா'வை அறிமுகம் செய்து 80% சினிமாத் தயாரிப்புச் செலவைக் குறைக்க முடிவு செய்திருக்கிறோம். இப்படி நிறைய உள்ளன.

நாக் ரவியின் ஈஸ்ட்மென் கலர் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்!

Share this Story:

Follow Webdunia tamil